சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.
சசிகலா, தினகரன், திவாகரன், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.- ஜெயலலிதாவின் பணம் இவர்களில் யாரிடம் அதிகமுள்ளது?
யாரிடம் அதிகமுள்ளது என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆனால், இவையெல்லாம் ஜெயலலிதாவின் பணம் அல்ல. மக்கள் தன்னிடம் நம்பி அளித்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஜெ. கொள்ளையடித்த அரசாங்கத்தின் பணம்.
வி.நடராஜன், கூடுவாஞ்சேரி
மத்திய, மாநில ஆட்சியிலுள்ளவர்கள் அரசின் உளவுப் பிரிவை தங்களின் சொந்த கட்சி நிலைமைகளை அறியப் பயன்படுத்துவது சரியா?
சி.பி.ஐ., சி.ஏ.ஜி., தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற தனிஅதிகாரம் கொண்ட அமைப்புகளே அரசாங்கங்களின் கைப்பாவையாகும்போது, மத்திய-மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உளவுப்பிரிவுகள் ஆட்சியாளர்களின் சொந்த நலன்களுக்கு ஏற்ப செயல்படுவதில் என்ன ஆச்சரியம்? சரி, தவறு என்பதைத் தாண்டி அதிகாரத்தின் மூலம் எதையும் செய்யலாம் என ஆட்சியாளர்களும், அவர்களைப் பகைத்துக்கொள்ளாமல் செயல்பட்டால் பலன் பெறலாம் என அதிகாரிகளும் பக்குவமடைந்துவிட்டனர்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.
காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம் லீக் என்கிற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கிறாரே யோகி ஆதித்யநாத்?
உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்குத்தான் மதரீதியான வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையமே கண்டுபிடித்து, அவருடைய பிரச்சாரத்துக்கு 72 மணி நேரம் தடை விதித்துவிட்டதே!
மணிமேகலைநாயகன், வேலூர்(நாமக்கல்)
"தேர்தலுக்குப் பின்தான் என் அரசியல் வாழ்க்கை தொடங்கும்' என்கிறாரே எடப்பாடியார்?
-இப்போது நடந்துகொண்டிருப்பது அதிர்ஷ்டத்தில் கிடைத்த வாழ்க்கை என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார் போலும்.
அயன்புரம் த.சத்தியநாராயணன்
ஜெ., சசி ஆகியோரின் பெயர் இத்தேர்தலில் வெகுவாகப் பேசப்படவில்லையே?
சசிகலாவைப் பேசினால் பரப்பனஅக்ரகார சிறை நினைவுக்கு வரும். ஜெ.வைப் பேசினால், 75 நாள் சிகிச்சை மர்மத்தைக் கிளறியதுபோல இருக்கும். தேர்தல் களத்தில் மக்களின் மறதிதான் அரசியல்வாதிகளுக்கு லாபம். நினைவுபடுத்துவது அல்ல.
மல்லிகா அன்பழகன், சென்னை-78
"என் வேட்பாளர் ஜெயித்து, சரிவர பணிகள் செய்யாவிட்டால் அவரது ராஜினாமா கடிதத்தை வாங்கிக்கொடுப்பேன்' எனும் கமல்ஹாசனின் வாக்குறுதி…?
கமலும் அரசியல்வாதிக்குரிய தன்மைகளைத் தனக்குள் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படுகிறது. மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர்களை, இத்தகைய காரணங்களை முன்வைத்து கட்சித்தலைமை ராஜினாமா செய்ய வைப்பது, இடைத்தேர்தலை மக்களின் மீது திணிக்கும் நடவடிக்கையாக மாறும். தங்கள் எம்.பி., எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த மக்கள், அத்தகைய பிரதிநிதிகளைத் திரும்பப்பெறும் அதிகாரம் வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் பல நெடுங்காலமாக வலியுறுத்தப்படுகின்றன. கமல், அவற்றை நோக்கி கவனம் செலுத்தினால், மேக்கப் இல்லாத அரசியல்வாதியாகத் தெரிவார்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
மிஞ்சிப்போன இட்லியைக் கிளறி உப்புமா கிண்டுவதுதான் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்கிறாரே ப.சிதம்பரம்?
2014-ல் சுட்ட இட்லி மொத்தமும் மிஞ்சிப் போய்விட்டதுபோல. அப்படியே உப்புமாவாக்கியிருக்கிறது பா.ஜ.க.! காங்கிரசும் பலமுறை, பழைய சோற்றைப் பரிமாறியிருப்பதும் நினைவுக்கு வருகிறது.
_____________________
மல்லிகா அன்பழகன், சென்னை-78
காந்தியைத் தெரிந்த அளவுக்கு அவரது மகன்கள் பற்றி இன்றைய இந்தியா அறிந்துகொள்ளவில்லையே?
அரசியலிலும் அதிகாரத்திலும் நீடிக்கும் வாரிசுகளை மக்கள் எளிதாக அறிந்துகொள்வார்கள். மற்றவர்களை மறந்துவிடுவது வழக்கம். காந்தியின் சொந்த மகன்களாக இருந்தாலும், அண்ணாவின் வளர்ப்பு மகன்களாக இருந்தாலும் இதுதான் நிலைமை. காந்திக்கு 4 மகன்கள். மூத்த மகன், ஹரிலால். இவரைப் பற்றித்தான் ஓரளவு மக்கள் அறிந்துகொண்டனர். காரணம், காந்தியின் விருப்பங்களுக்கு எதிரான போக்குகளில் இவர் ஈடுபட்டிருந்தார். காந்தியுடன் மல்லுக்கட்டி நின்றவர். இவருடைய செயல்பாடுகளால் காந்திக்கும் கஸ்தூர்பாவுக்கும் இடையிலான மனப் போராட்டம் எழுத்துக்களாகவும் திரைப்படமாகவும் பதிவாகியிருக்கிறது. இரண்டாவது மகன், மணிலால். சபர்மதி ஆசிரமத்தை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. காந்திக்குப்பிறகு தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகத்தைத் தொடர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றார். மூன்றாவது மகன் ராம்தாஸ். காந்தியின் அரசியல் போராட்ட செயல்பாடுகளில் அவருக்கு உதவியாக இருந்தவர். சபர்மதி ஆசிரம நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டதுடன், அரசியலிலும் ஆர்வம் காட்டினார். ஆனால், காந்தி அவரை முழுநேர அரசியல்வாதியாக்க விரும்பவில்லை. அச்சுத்தொழில் போன்ற ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டு அதன் மூலம் வணிகத்தில் ஈடுபடச் சொன்னார். காந்தி இறந்தபோது இறுதிக்காரியம் செய்தவர் இவரே. நான்காவது மகன், தேவதாஸ். இவர்தான் ராஜாஜியின் மகள் லட்சுமியை காதலித்து, காந்தியின் சம்மதத்திற்காக 5 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார். டைம்ஸ்ஆஃப் இந்தியா பத்திரிகையில் பணியாற்றினார். இவரது மகன்கள் ராஜ்மோகன்காந்தி வரலாற்று ஆய்வாளராகவும், கோபாலகிருஷ்ணகாந்தி முன்னாள் ஆளுநராகவும், ராமச்சந்திரகாந்தி தத்துவஇயல் வல்லுநராகவும் பெயர் பெற்றவர்கள்.