மல்லிகா அன்பழகன், சென்னை-78

தேர்தலுக்கு முன்பே பதற்றமான வாக்குச் சாவடிகள் என்று தேர்தல் கமிஷன் எப்படி சொல்கிறது?

முந்தைய தேர்தல் வரலாற்றின் அடிப்படையில் கட்சிகளின் மோதல், சாதிகளின் மோதல், மத மோதல், வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது இவற்றையெல்லாம் அளவுகோலாக வைத்து பதற்றமான வாக்குச்சாவடிகள் முன்கூட்டியே bகணக்கிடப்படுகின்றன. அங்கே கூடுதல் அக்கறை செலுத்தப்படும் நிலையில், வேறு இடங்களில் பதற்றம் உருவாவதும் உண்டு.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

Advertisment

ரஃபேல் பேர ஊழல் புத்தகம் படித்தீர்களா?

அதைவிட அவசியம் படிக்க வேண்டியது, "ரஃபேல் ஊழல் தொடர்பாக என்.ராம், இந்து பத்திரிகையில் வெளியிட்ட ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து, மறு ஆய்வு மனு மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத்தான். ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டியிருப்பதுடன், ஊழலை ஒழிப்பதாக 5 ஆண்டுகாலம் வேடம் போட்ட மோடி அரசின் முகத்திரையையும் கிழித்திருக்கிறது.

திராதி, துடியலூர், கோவை

Advertisment

தேர்தல் களத்தில் விபூதியுடன் திருமாவளவன் "பட்டை'யைக் கிளப்புகிறாரே?

எதிரியின் வியூகத்திற்கேற்ப ஜனநாயக ஆயுதத்தை எடுப்பது தேர்தல் களத்தில் வழக்கம்தான். இந்துமத விரோதி என திருமாவளவனை நோக்கி குற்றச்சாட்டு வீசப்பட்ட நிலையில், தீட்சிதர்கள் நிறைந்த சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே முதல் மரியாதையை திருமாவளவன் பெற்றிருப்பது, களத்திற்கேற்ற சரியான வியூகம்.

ஏழாயிரம் பண்ணை எம். செல்லையா, சாத்தூர்

"காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது' என்கிறாரே ஸ்டாலின்?

எந்த காங்கிரசுக்கு எதிராக மாநில சுயாட்சி கொள்கையை தி.மு.க.வின் நிறுவனர் அண்ணா வலியுறுத்தினாரோ அந்த காங்கிரசின் இன்றைய தலைவர் தலைமையில் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கையில் மாநிலத்திற்கான குரல் ஒலிப்பதும், தி.மு.க. தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் அதில் இடம்பெற்றிருப்பதும் கூட்டணிக் கட்சித் தலைவருக்கு மகிழ்ச்சி வரத்தானே செய்யும். வெற்றி கிடைத்து, அவை நிறைவேற்றப்பட்டால் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

m

சாரங்கன், கும்பகோணம்

திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூரலிகானின் வித்தியாசமான பிரச்சாரம் மக்களைக் கவர்ந்த அளவுக்கு வாக்குகளை ஈர்க்குமா?

பச்சை சுரைக்காயைக் கடிப்பது, விவசாயி வேடத்தில் மேடையில் உட்காருவது, பரோட்டா போடுவது, தொட்டிலில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தன்னுடைய ஆராரோ பாட்டால் எழுப்பி விடுவது இவையெல்லாம் மீடியாக்கள் வாயிலாக மக்களைக் கவரும். ஆனால், வாக்குகளைப் பெறுவதற்கு, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவுத் தலைவர் கண்ணையாகுமார், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 70 லட்ச ரூபாயை மக்களிடமே திரட்டிப் போட்டியிடுகிறார். அவர் கேட்ட தொகையை மக்கள் தந்திருப்பதுதான் வெற்றி-தோல்விக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு.

பி.மணி, வெள்ளக்கோவில்

மய்யம்?

சினிமா அரசியலிருந்து டி.வி. ரிமோட்டை உடைக்கும் அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது.

____________

காந்தி தேசம்

நித்திலா, தேவதானப்பட்டி

தேர்தல் பற்றி மகாத்மா காந்தியின் கண்ணோட்டம் என்னவாக இருந்தது?

21 வயது நிரம்பிய இந்தியாவின் ஆண்-பெண் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என்ற அடிப்படையில் முதன் முதலில் பொதுத் தேர்தல் நடந்தது 1952ஆம் ஆண்டுதான். அதற்கு, 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்துத்வா கும்பல், காந்தியை சுட்டுக் கொன்றுவிட்டது. எனினும், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு வழங்கிய பரிந்துரைகளின்படி 1920ஆம் ஆண்டில் குறைந்தபட்ச அதிகாரம்-குறிப்பிட்ட வாக்காளர்கள் என்ற அடிப்படையில் இரட்டையாட்சி முறையிலான தேர்தல் நடைபெற்றது. அதன்பின் தொடர்ச்சியாக அதே பாணியில் தேர்தல்கள் நடந்தன. மாண்டேகு-செம்ஸ்போர்டு பரிந்துரைகளை காந்தி ஏற்கவில்லை. அதனால், காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலைப் புறக்கணித்தது. அன்றைய தமிழ்நாட்டில் (சென்னை மாகாணம்) இருந்த நீதிக்கட்சி இந்தத் தேர்தலில் பங்கேற்றது. அதனால், பதவிகளை விரும்பிய நமது மாநிலத்து காங்கிரஸ் பெருந்தலைவர்கள் சுயராஜ்ஜிய கட்சி சார்பிலும், ஹோம்ரூல் இயக்கத்தின் சார்பிலும் வேட்பாளர்களாக நின்றார்கள்.

அடுத்ததாக, சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அதனை முற்றாக நிராகரித்துப் போராட்டங்களை அறிவித்தார் காந்தி. ஆனால் அம்பேத்கரும் பெரியாரும் அந்தக் கமிஷனை வரவேற்றார்கள். சைமன் கமிஷன் அளித்த புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் கூடுதல் அதிகாரங்களுடன் 1937-ல் தேர்தல் நடந்தது. எந்த சைமன் கமிஷனை காந்தியும் காங்கிரசாரும் புறக்கணித்தார்களோ அதே கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையிலான தேர்தலில் காந்தியின் உத்தரவுப்படி காங்கிரஸ் பங்கேற்றது. சென்னை மாகாணம் உள்பட பல மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஒரு சில ஆண்டுகளில் காந்தியின் உத்தரவுப்படி, எல்லோரும் பதவி விலகி, சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தேர்தல் களத்திற்கு வேட்பாளர்களும் வாக்காளர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொண்ட பிறகு வன்முறையற்ற -நேர்மையான தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே காந்தியின் விருப்பம். அதைத் தனது "ஹரிஜன்' ஏட்டில் பதிவு செய்திருக்கிறார்.