சோ.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்
துணை ராணுவப்படை அணிவகுப்பு என்பது தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்துவதாகாதா?
நடைமுறைகளை அத்துமீறுவதே தேர்தல் களம் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுவிட்டதால், இயல்பான நடைமுறைப்படியான அணிவகுப்புகள்கூட அச்சுறுத்தலாகத் தெரிகின்றன. தேர்தல் ஆணையத்தின் அரசியல் சார்புத்தன்மையும் இந்தக் கோளாறுகளுக்குக் காரணம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை-10
"சரத்பவார், மாயாவதி போட்டியிடாதது பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகம் ஆகும்' என்கிறதே சிவசேனா?
"மோடிக்கு எதிராகவோ, இணையாகவோ இந்தியாவில் தலைவர்களே இல்லை' என்று மூன்று மாதங்களுக்கு முன்புவரை சொல்லி வந்தது பா.ஜ.க. இப்போதோ... சரத்பவார், மாயாவதி போன்றவர்கள் போட்டியிடாததைக்கூட பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழலாகக் கருதுகிறது, போன மாதம்வரை மோடி அரசை விமர்சித்து வந்த சிவசேனா. அரசியல் களத்தின் நுண்ணிய மாற்றங்கள், தேர்தல் களத்தில் முக்கியமான விளைவுகளை உண்டாக்கும்.
எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"கலாச்சார பண்பாடு சீரழிவுதான் பொள்ளாச்சி சம்பவத்திற்குக் காரணம்' என்கிறாரே அர்ஜுன் சம்பத்?
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நிலவும் மத நல்லிணக்கம் எனும் உயர்ந்த பண்பாடு சீரழிந்ததற்கு யார் காரணம் என்பதையும் அர்ஜுன் சம்பத் விளக்கினால் நன்றாக இருக்கும். "பொள்ளாச்சிக் கொடூரத்தில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பில்லை' என்று எஸ்.பி. பாண்டியராஜன் சொன்னதற்கும், கலாச்சார பண்பாட்டுச் சீரழிவை அர்ஜுன் சம்பத் காரணம் காட்டுவதற்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுமே, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் முயற்சிதான்.
ஆர்.துரைசாமி, கணபதி, கோவை-6
சட்டமன்ற உறுப்பினர் மக்களவைத் தேர்தலில் நின்று வெற்றிபெறும் பட்சத்தில், காலியாகும் அவரது சட்டமன்றத் தொகுதிக்கு மக்கள் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்துவது தேவையா?
மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்தலில் பதவிக்கான வாய்ப்பு, ஆசை, மோகம் இப்படியெல்லாம் உருவாகும் என்பதை சட்டம் வகுத்தோர் அறியாமல் போய்விட்டார்கள். இந்தியத் தேர்தல் முறையில் அவசியப்படும் சீர்திருத்தங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை விட்டுவிட்டு, இறந்த தலைவர்களின் சிலைகளைத் துணிபோட்டு மூடும் அதிமுக்கிய வேலைதான் இங்கே நடைபெறுகிறது.
ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்
மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஒரு வேட்பாளரின் வேட்புமனுவை எழுந்து நின்று வாங்குவதும், மற்றொருவரிடம் உட்கார்ந்து கொண்டே வாங்குவதும் எதைக் காட்டுகிறது?
ஆட்சிப்பணி என்பது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை தருவதற்கான பணி என்பதையும், மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதையும், ஆட்சி மாறினால் அடுத்த தேர்தலின்போது, இப்போது உட்கார்ந்தவருக்கு எழுந்து நின்றும், எழுந்து நின்றவருக்கு உட்கார்ந்தபடியும் மனுக்கள் வாங்கப்படும் என்பதையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
அரசுப்பணிகளில் ஆண்-பெண் இருபாலரும் இருக்கிறார்கள். அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் பெண்கள் இல்லையே?
அரசின் திட்டங்களுக்கு எதிராக செயல்படுவோரை, அரசு ஒருபோதும் பணியில் சேர்க்காது. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் அடித்து நொறுக்கும் வீடியோக்களைப் பாருங்கள். அதில் அதிகம்பேர் பெண்களாகத்தான் இருப்பார்கள்.
______________
காந்தி தேசம்
அ.யாழினிபர்வதம், சென்னை-78
எம்.ஜி.ஆர்., தி.மு.க.விலிருந்தபோது அறிஞர் அண்ணாவை மதித்த அளவுக்கு காந்திஜி ஃபோட்டோவைத் தன் படங்களில் காட்டியதுடன் அவரது கருத்துகளை தனக்கான வசனங்களிலும் பாடல்களிலும் இடம்பெறச் செய்திருக்கிறாரே?
கலைஞர்கள் பலரும் காந்தியைத் தங்களின் சித்தாந்தங்களைக் கடந்து பயன்படுத்தியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த படைப்பாளிகள் -கலைஞர்களும்கூட காந்தியக் கொள்கையை முழுமையாக ஏற்காவிட்டாலும், மதவெறி சக்திகளுக்கு எதிரான கேடயமாக காந்தியையும் அவரது கருத்துகளையும் முன்வைத்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நிலை உண்டு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட இயக்கம், காந்தியின் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்ததும் உண்டு; அவரை சில நிலைப்பாடுகளில் ஆதரித்ததும் உண்டு. குறிப்பாக, மதவெறித் தோட்டாக்கள் காந்தியைத் துளைத்த பிறகு, அத்தகைய சக்திகளின் மிருகத்தனமான கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் காந்தி படுகொலை அடையாளமாகக் காட்டப்பட்டது.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை, அவர் செல்வாக்குமிக்க ஹீரோவாக ஆனபோது, தி.மு.க.வைச் சார்ந்த நடிகராக இருந்தாலும், சினிமா வாய்ப்புகளைத் தேடிய காலத்தில், காந்தி பக்தராக கதராடை அணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தவராகவே இருந்தார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலம் "குடி அரசு' பத்திரிகையைப் படிக்கத் தொடங்கி, திராவிட இயக்கத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., அதன்பிறகு அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்பால் முழுமையான தி.மு.க.காரரானார். ஆனாலும், அவர் மனதிலிருந்த காந்திய நெறிகள் மறையவில்லை. திரைப்படங்களிலும் அது வெளிப்பட்டது. புத்தர், ஏசு, காந்தி, அண்ணா ஆகியோரின் அறநெறிக் கருத்துகளைத் தனக்கான வசனங்களிலும் பாடல்களிலும் இடம்பெறச் செய்தார். வில்லன்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகளை எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ரசித்தவேளையில், அவர்களிடம் காந்தியின் அகிம்சை கருத்துகளையும் முன்வைத்தார். அத்துடன், ஜனநாயக நெறிமுறையில் உறுதியாக இருந்த அண்ணாவை, "தென்னாட்டுக் காந்தி' என்று குறிப்பிட்டதால், காந்தியை தனது படங்களில் முன்னிறுத்துவது எம்.ஜி.ஆருக்கு எளிதாகிவிட்டது.