பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
அமிதாப்பச்சன் வீட்டில் தங்கத்திலான டாய்லெட்டின் முன் நின்று செல்ஃபி எடுத்து நடிகர் விஜய்சர்மா வெளியிட்டுள்ளாரே?
தங்கமோ, பிளாட்டினமோ அது பயன்படுத்தப்படுவது கழிவுகளை வெளியேற்றத்தானே. ஒருகாலத்தில் தங்கக் கொலுசு போடுவதே தங்கத்தை அல்லது செல்வத்தை இழிவுபடுத்தியதாக நினைக்கப்படுவதும் உண்டு. காலம் மாறிவிட்டது. தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்த கழிவறை, குளியலறையையே தங்கத்தில் உருவாக்குகிறார்கள் பணம் படைத்தவர்கள். பணம் மிதமிஞ்சிப் போகும்போது, இப்படியான சீரழிவுகள் நடப்பதுண்டு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/mavali1-2026-01-29-16-40-47.jpg)
சிவராமசுப்பிரமணியன், கல்லிடைக்குறிச்சி.
கவர்னர் ரவி தமிழக அரசு மீது 13 குற்றச்சாட்டுகள் கூறியிருப்பது ஏற்புடையதா?
டபுள் என்ஜின் ஓடும் மாநிலங்களில் ஒருமுறையாவது ஆளுநர், உரையை வாசிக்க மறுக்கிறாரா? உரைக்கிடையே வெளிநடப்பு செய்கிறாரா? குற்றங்களை அடுக்குகிறாரா? ஆக, ஆளுநர்களை பா.ஜ.க. அரசியல் மெட்டீரியலாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. நடப்பதை மக்கள் புரிந்துகொண்டால் போதும்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
உலகின் அமைதிக் காகவே கிரீன்லாந்து எனும் பனித் தீவை அமெரிக்கா விரும்புகிறது என்கிறாரே ட்ரம்ப்..?
கிரீன்லாந்து தங்களிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், போர் தொடுப்பேன் என்கிறார் சூசகமாக. உலக, ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து "மிஸ்டர் ட்ரம்ப், கொஞ்சம் அமைதியாக உட்காருங்கள்! இல்லையெனில் உலக நாடுகள் உங்களைப் புறக்கணிக்கும்' என அழுத்த மாகச் சொல்லவேண்டும்.
வாசுதேவன், பெங்களூரு
டாக்டர் ராமதாஸ் அன்றும், இன்றும் ஒப்பிடுக..?
"வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே, வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கைமேலே'’என உற்சாகமான பாடல்களைப் பாடிக்கொண்டு வலம்வந்தார் அன்றைய ராமதாஸ். இன்றைய ராமதாஸ், "தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு' என சோகப் பாடல் பாடிக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒருபோதும் தனது நம்பிக்கையைக் கைவிடாமல் உறுதியாக இருக்கிறார்.
வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி
ஒரிஸ்ஸாவிலும் பீஹாரிலும் தமிழகத்தை இழிவுபடுத்திப் பேசிய பிரதமருக்கு தமிழகம் தற்போது உயர்வாகத் தெரியக் காரணம் என்ன?
சில மாத தொலைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் இருப்பதுதான். தேர்தல் முடியும் வரை வள்ளுவர், பாரதி, வள்ளலாருக்கு கொள்ளுப் பேரனாகவே மாறிவிடுவார். தேர்தல் முடிந்து, பிற மாநிலத் தேர்தலில் தமிழகத்தை வெறுக்கும் அந்நியனாக உருவெடுப்பார்.
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
"விசில்' இப்போதைக்குத் தேவையில்லை, "குக்கரிலேயே' விசில் இருக்கிறது என்று கூறுகிறாரே தமிழிசை?
திராட்சைப் பழம் கிடைக்காதபோது, நரி என்ன வாசகம் கூறும் என்பது எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கும் நினைவிருக்கும்தானே!
ப.கேசவன், திருவண்ணாமலை
பீகார் மக்களுக்கு வாழ்த்துகள் என ஊடகவியலாளர் ரன் விஜய்சிங் கிண்டல் செய்திருப்பது ஏன்?
எல்லாம் நம் ஊர் கதைபோலத் தான். 2019, நாடாளுமன்றத் தேர்தல் காலகட்டத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு அடிக்கல்லை நட்டுப்போனார். இன்று வரை மருத்துவக் கட்டுமானப் பணிகள் நடந்தபாடில்லை. மத்திய அரசும் மாநில அரசும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கின்றன. தமிழகம் பரவாயில்லை, ஒற்றை என்ஜின் அரசு. ஆனால், பீகாரில் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக மோடியின் இரட்டை என்ஜின் அரசுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல அங்கேயும் தர்பங்காவில் ஒரு எய்ம்ஸ் கட்டப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையின் முகப்பைக் கட்டியதோடு விட்டுவிட்டார்கள். மருத்துவமனையைக் காணவில்லை. அதைத்தான் கிண்டல் செய்திருக்கிறார் ரன் விஜய்சிங்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/mavali-2026-01-29-16-40-34.jpg)