எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு 

4 ஆண்டுகளாக ஏற்று மதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்ற முதல்வரின் பெருமிதம் பற்றி?

சாதனையில் பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஆனால் ட்ரம்பின் டேரிஃப் தகராறு, ஏ.ஐ. தொழில்நுட்ப வரவால் ஐ.டி. துறை ஆட்குறைப்பில் மும்முரம் காட்டுகிறது. இந்த காலாண்டு முடிவில் பல ஐ.டி. நிறுவனங்கள் பெரிய லாபம் ஈட்டவில்லை. இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழகமும் முக்கிய மையம். ஆட்டோ மொபைல் துறையும் ஒரு தேக்கநிலையில்தான் இருக்கிறது. மாற்றுவழிகளையும் தீர்வுகளையும் தமிழகம் முன்கூட்டியே சிந்திப்பது சிறப்பானது.

Advertisment

எஸ்.இளையவன், சென்னை

குடிப்பழக்கம் மட்டும் இல்லையென்றால் மு.க.முத்து முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்குமா?

நிகழ்ந்தது நிகழ்ந்ததுதான். ஆங்கிலேயர் மட்டும் இந்தியாவை அடிமைப்படுத்தாமல் போயிருந்தால், இந்தியாதான் உலகின் மிகப்பெரிய பொருளா தாரமாகத் திகழ்ந்திருக்கும் என யாராவது சொல்லலாம். யூகத்துக்கும் யதார்த்தத்துக்கும் பல மைல் தூரம் வித்தியாசமிருக்கும். சிந்திய பால் சிந்தியதுதான். அதை மறந்து விட்டு யதார்த்தத்தைச் சிந்திப்போம்.

Advertisment

ஆர்.கார்த்திக், ஜோலார்பேட்டை

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறதே உயர்நீதிமன்றம்?

கவலை வேண்டாம். மும்பை உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டது. நீதிமன்றம் விடுவித்திருக்கிறது எனில், அரசுத் தரப்பில் போதுமான ஆதாரங்களையோ, நீதிபதிகள் பொருட்படுத்துமளவுக்கு வாதங்களையோ வைக்கவில்லை என்றுதான் அர்த்தம். குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு நீதிபதிகளுக்கு எந்தப் பந்தமும் கிடையாது. இதில் நீங்கள் யார் மீதாவது கோபப்படுவது என்றால், விசாரணை அமைப்புகள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மீதுதான் கோபப்படவேண்டும்.

அ.ராஜாரகுமான், கம்பம்

மாநில தலைவர் பதவி வெங்காயம் போன் றது என முன்னாள் பா.ஜ. தமிழ் மாநிலத் தலைவர் கூறியிருப்பது பற்றி?

அடுத்தவர் கையில் அந்தப் பொறுப்பு இருக் கும்போது, முன்னாள் தலைவருக்கு கண்ணில் நீர் வரும் என்ற அர்த்தத்தில் சொல்கிறாரோ!

வாசுதேவன், பெங்களூரு

“"தி.மு.க. கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்' குஷ்பு சேலஞ்ச் என்று வந்துள்ளதே?

இதை அரசியலுக்குப் புதிதாக வந்தவர்கூட சொல்லிவிடுவாரே! தவிரவும் எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எந்தக் கூட்டணியிலிருந்து விலகவேண்டும் என்பது சம்பந்தப்பட்ட கட்சியின் வசதி, ஆதாயம், கொள்கையோடு சம்பந்தப்பட்டது. வேண்டுமானால், அ.தி.மு.க.வோடு காங்கிரஸை கூட்டணி வைக்கச் சொல்லலாம். பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க.வை தங்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுவித்து அனுப்புமா என்ன?

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு  

ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் என்னவாகும்?

இப்போது என்ன கெட்டுப்போனது. குறைந்த காலம் என்றாலும் தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை பதவியில் அமர்ந்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுக்கே இது முதல்முறைதான். எடப்பாடி பழனிச்சாமியும் ஒருமுறை முதல்வர்தான்.          தற்போது அரசியல் கட்சிகளின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் பலருக்கும் வாய்க்காத பதவியில் அமர்ந்தவர். பதவிக்காக கெஞ்சிக்கொண்டி ருப்பதைவிட கௌரவமாக அரசியல் ஓய்வு   பெறலாம்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

பீகார் தேர்தலில் வேட்புமனு தாக்கல்செய்யும் முறையை டிஜிட்டல் முறைக்கு மாற்றம்செய்ய உள்ளது குறித்து?

ஏற்கெனவே வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தமே சந்தேகத்தில் உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதையும் கஸ்டடியில் எடுக்கிறார்களா.... இந்த தேர்தல் அமோகமாக இருக்கும்!

அன்னூரார் பொன்விழி, அன்னூர்

சொகுசு வாழ்க்கை வாழ ஆசை... மடாதிபதியாக ஆகிவிடலாமா?

குறைந்தபட்சம், குல்லா போட்டவர், காரால் மோதி கொல்ல முயற்சித்தார் என அடித்துப் பேசி இரு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தவும், போலீஸ் நெருக்கிப்பிடித்து விசாரிக்கும்போது முன்ஜாமீன் கேட்டு நழுவவும் என நுட்பமான பல விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும். மடத்தின் தலைமைப் பதவிக்கு நெருக்கத்தில் இருக்கும் பிற சாமியார்களின் சதிகளிலிருந்து தப்பிக்கும் மதிநுட்பம் வேண்டும். அத்தனை சொகுசானதில்லை மடாதிபதி பதவி.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ராஜ்யசபாவில் கமலின் பேச்சு எப்படி இருக்கும்? 

நாடாளுமன்ற விவாதங்களின்போது அவையில் பிரதமர் இருக்கவேண்டுமெனச் சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல் கிறேன்.... என்றரீதியில் பேசுவாரோ!