எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
ஆரணியில் 4 கோடி ரூபாய் சொத்துப் பத்திரங் களை கோவில் உண்டியலில் செலுத்தியுள்ளாரே ராணுவ வீரர் விஜயன்?
குடும்பத் தகராறில் நடந்த சம்பவம்போல் தெரிகிறது. மனைவி, பிள்ளைகள் சொத்தை மீட்க நீதிமன்ற உதவியை நாடியுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு என்ன வெறுப்போ? என்ன பிரச்சனையோ குடும்பத்துக்குள்? ஆத்திரம் தணிந்ததும் ஐயோ சொத்துப் போச்சே என அலறாமல் இருந்தால் சரி!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
என்னை பிரச்சாரத்துக்கு அழைக்காததால் தோல்வி என்று சசிதரூர் பேசியிருக்கிறாரே?
கேரளாவில் நடந்த கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் சசிதரூர் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்திருப்பார்தானே. பிறகு ஏன் இருமுறையும் காங்கிரஸ் கேரளத்தில் ஆட்சிக்கு வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே பா.ஜ.க. கட்சி உறுப் பினரைப் போலத்தான் சசிதரூர் பேசிக்கொண்டிருக்கிறார். கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சிக்கு முரணாகப் பேசும் எக்ஸ்ட்ரா லக்கேஜ்களைத் தூக்கினாலே, காங்கிரஸ் உருப்பட்டுவிடும்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
சினிமாவில் 8 மணிநேர வேலை என்ற கருத்துக்கு ஆதரவாக தீபிகா படுகோனே பேசியிருக்கிறாரே... சாத்தியமா?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/mavali1-2025-11-24-17-01-26.jpg)
சினிமா என்ற பிரம்மாண்ட அமைப்பின் உறுப்பினர் என்ற முறையில் தீபிகா பேசியிருக்கிறார். அது அவரது உரிமை. போராடிப் பெற்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், கார்ப்பரேட் உலகில் ஒவ்வொன்றாக நழுவிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. சத்தமில்லாமல் ஒவ்வொரு மாநிலமும் 8 மணி நேரத்துக்குப் பதில் 10 மணி நேர வேலை கட்டாயம் என சட்டத்தைத் திருத்திக்கொண்டிருக்கின்றன. இன்போசிஸ் நாராயணமூர்த்தி, சீனாவைப்போல் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை வாங்கவேண்டும் என சிபாரிசு செய்கிறார். இதில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்- நடிகைகள் 8 மணி நேரம் வேலை என கோரிக்கை வைத்தால், தயாரிப்பாளர்கள் ஏற்பார்களா எனத் தெரியவில்லை.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
அ.தி.மு.க. ஆட்சியமைந்தால் ஆந்திராவுக்குச் சென்ற தொழில் நிறுவனங்கள் மீண்டும் தமிழகத்தைத் தேடிவரும் என்கிறாரே எடப்பாடி?
ஒரு தொழிலை அமைக்க, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்யவேண்டும். தள்ளுவண்டிக் கடை மாதிரி, ஒரு மாநிலத்தில் போட்ட தொழிலைப் பெயர்த்துக்கொண்டுபோய் அடுத்த மாநிலத்தில் போடமுடியாது. வேண்டு மானால், புதிய நிறுவனங்களைப் போய் பார்த்து முதலீடுகளை ஈர்த்துவரலாம். டாட்டா நிறுவனத்துக்கு கொல் கத்தாவில் பிரச்சனை வந்ததுபோல், ஆந்திராவில் ஏதாவது நிறுவனத்துக்கு பிரச்சனை வந்தால் தமிழகத் துக்குக் கூப்பிடலாம்.
ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
ஒருவேளை சசிகலா ஜெயிலுக்குப் போகாமல் இருந்திருந்தால், தமிழகத்தின் அரசியல் களம் வேறுமாதிரியாக மாறியிருக்குமா?
சினிமாவுக்கு கதை எழுதும்போது, ஒருவன் ஒரு நாள் முதல்வராக இருந்து என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவருகிறான் என கற்பனை செய்யலாம். அயல்கிரக மனிதர்கள் பூமியை ஆக்கிரமிக்க வர, அதை மனிதர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று கற்பனை செய்யலாம். யதார்த்தம் என்பது வேறு. அரசியல்வாதிகள், உதவி இயக்குநர்கள் அல்ல. சசிகலா ஜெயிலுக்குப் போகாமல் இருந்தால் என்ன ஆயிருக்கும் என்று கற்பனை செய்வதைவிட, ஜெயிலுக்குப் போய்விட்டு வந்த சசிகலா, இனி என்ன செய்தால் பழைய இடத்தைப் பிடிக்கலாம் என சிந்திப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
தே. மாதவராஜ், கோயம்புத்தூர்-45
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசினாவை ஏன் இந்தியாவில் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கவேண்டும்?
முதலாவதாக, வங்காளதேசத்துக்கு எதிராகத்தான் அடைக்கலம் கொடுத்திருக்கிறோம். அந்நாடு கோபப்பட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற தைரியம். இரண்டாவது, ஒரு அரசியல் தலைவரை அடைக்கலம் தராமல் திருப்பியனுப்பி அவரது உயிருக்கு ஆபத்து வந்துவிடக்கூடாதென்ற நல்லெண்ணத்தால் இருக்கலாம். மூன்றாவதாக, இன்றைக்கு நாம் அடைக்கலம் தந்தால், நாளைக்கு நமக்கு யாராவது அடைக்கலம் தருவார்கள் என்ற நப்பாசையாலும் இருக்கலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/mavali-2025-11-24-17-01-08.jpg)