ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
உலக வங்கி பல நாடுகளுக்கு கொடுக்கும் கடன், வட்டி சகிதம் சரியாக திரும்பிவருகிறதா?
அது உலக வங்கியின் தலைவலியல்லவா! நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். நிச்சயமாக உலக வங்கி நட்டப்படவில்லை. வளரும் மற்றும் வறுமை நாடுகளில் மக்கள்நலத் திட்டங்கள், விவசாயத்துக் கான மானியங்கள் ரத்துசெய்யப்படுவது, கடன் வாங்கிய நாடுகளின் முதலீட்டில் உலக நாடுகளை அனுமதிக்க நெருக்கடி தருவது போன்றவையெல்லாம் எங்கிருந்து வருகிறதென்று நினைக்கிறீர்கள்?
சு.காருண்யா, கோயம்புத்தூர்
ஆசை வெட்கம் அறியாதாமே?
துறவே வெட்கம் அறியமாட்டேன் என்கிறது, இதில் ஆசையை என்ன சொல்ல! தாய்லாந்து நாட்டில் விலாவன் எம்சாவத் என்ற 30 வயதுப் பெண்ணைப் போலீசார் கைதுசெய்துள்ளனர். இவர் செய்த குற்றம் என்ன என்கிறீர்களா? தாய்லாந்தின் புத்த மத துறவிகளைக் குறிவைத்துப் பழகி, அவர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு, நெருக்கமாக இருந்து அதைத் திட்டமிட்டு புகைப்படமாகவும், வீடியோக்களாகவும் பதிவுசெய்திருக்கிறார். 9 துறவிகளுடன் விலாவன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ள தாம். இதைவைத்து மிரட்டி 100 கோடிவரை பணம் பறித்திருக்கிறார். தாய் லாந்தின் மிக முக்கிய மான மடாலயத்திலிருந்து ஒரு துறவி காணாமல் போக, அதையொட்டி நடந்த போலீஸ் விசாரணையில்தான் இத்தனை விவகாரங்களும் அம்பலமாயிருக்கிறது.
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
என்.சி.இ.ஆர்.டி. எட்டாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் அக்பர், பாபர், ஔரங்கசீப் ஆகியோர் ஆட்சிக் காலம் கொடூரமானது என்று சேர்க்கப்பட்டுள்ளதாமே?
அடுத்தடுத்த பாடத்திட்டத்தில், மவுண்ட் பேட்டன் பிரபு வரைக்குமான அந்நிய ஆட்சியாளர்கள் அனைவருமே கொடுமையானவர்கள். அவர்கள் இந்தியர்களை கட்டாய மதமாற்றம் செய்து, சனாதன மதத்தை அழிக்க முயற்சிசெய்தனர். புனிதமான உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்து, பெண்களின் சிந்தனையை மாசுபடுத்தினர். பள்ளிகளை கட்டித் தந்து, அங்கே அனைத்து ஜாதியினரையும் அனுமதித்து நாட்டில் நிலவிவந்த நால்வருண முறையில் விரிசல்விடச் செய்தனர். பிராமணியத்தின் தலைமையில் மிகச்சில உயர்சாதிகள் மட்டுமே கோலோட்சிவந்த இந்தியாவை, அனைத்து ஜாதிகளுக்கு உரிய தாக மாற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய் தனர். எனவே அந்நிய ஆட்சியில் செய்த கொடூரங்களை எல்லாம் திரும்பப் பெறப்படும் நடவடிக்û ககள் எடுக்கப்படும் என்றெல்லாம் சேர்ப்பார்களோ என்னவோ!
சிவா, கல்லிடைக்குறிச்சி.
கோதாவரி நதிநீர்ப் பிரச்சனையால் ஆந்திரா- தெலுங்கானா இடையே சண்டை நடப்பது குறித்து?
என்னோட பாத்திக்கு தண்ணி வரலை, உன்னோட பாத்திக்கு தண்ணி வரலை என விவசாயி கள் அடித்துக்கொண்டால் பரவாயில்லை. மாநிலங்கள் சட்டையைப் பிடித்துக்கொண்டு சண்டையிடுவது அசிங்கம். ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றங்கள், நதிநீர் ஆணையங்கள் ஒருமுறை பேசி இறுதி செய்தபிறகு, அந்த உத்தரவுகளை மீறும் மாநிலங்களிடம் கடுமை காட்டவேண்டும். ஆனால் பல சமயங்களில், ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதுதான் நடக்கிறது.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
ஜி.எஸ்.டி. வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பியதால் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் இனி யு.பி.ஐ. பரிவர்த்தனை கிடையாது என்று அறிவித்துள்ளது பற்றி?
கர்நாடகாவின் ஹாவேரி பகுதியில், சங்கர்கௌடா எனும் ஒரு காய்கறி வியாபாரிக்கு 29 லட்ச ரூபாய்க்கு ஜி.எஸ்.டி. வரி நோட்டீஸ் வந்திருக் கிறதாம். காய்கறிகள் ஜி.எஸ்.டி. பட்டியலிலே கிடையாது. தவிரவும் அந்த வியாபாரி முறைப்படி வருமான வரித் தாக்கலும் செய்திருக்கிறார். இத்தனை பெரிய தொகைக்கு எங்கே போவேன் என்பதோடு, அப்பகுதி காய்கறி வியாபாரிகள் கலந்துபேசி இந்தச் சந்தையில் யு.பி.ஐ. பரிவர்த்தனை கிடையாது. ரொக்கப் பணம் மட்டுமே பெறப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
ஜகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா..?
மருத்துவக் காரணங்களைக் குறிப்பிட்டு துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் ஜகதீப் தன்கர். இப்போதைக்கு எங்கே உரசல் எழுந்தது என்பது வெளிப்படவில்லை. காலம் அதையும் வெளிப்படுத்தும்.
குடந்தை பரிபூரணன், கும்பகோணம்
ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டுவீழ்த்தப் பட்டன என்று ட்ரம்ப் மொட்டையாகக் கூறிவிட்டாரே?
இதற்குமேல் என்ன விளக்கம் வேண்டும். சட்டையில் சேறடித்தால் போதாதா, சம்பந்தப் பட்டவர்களை சேற்றில் போட்டு உருட்டி எடுத்தால் தான் உங்களுக்குத் திருப்தியாகுமா?