ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்

ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள் கேட்டு வாதாடிவிட்டு, ஒரே மேடையில் தி.மு.க.வுடன் சேர்ந்து காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபடுவது நல்லாவா இருக்கும்?   

Advertisment

காலாகாலமாக எல்லா கட்சிகளிலும் தொகுதி களைக் கேட்டுப் பெறும்போது உரசல் இல்லாமல் இருக்காது. இந்த முறை சற்று ஓவராக உரசல் நடக்கிறது. பீகாரில் லாலுவின் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்வர, பத்து தொகுதிகளில் காங்கிரஸும், ஆர்.ஜே.டி.யும் தனியாகவும் போட்டியிட்டன. ஆக, இது புதிதில்லை. 

Advertisment

கே.ஆர். அசோகன், கிட்டம்பட்டி.

ஓட்டைப் பிரிப்பது என்றால் என்ன?

பொருளைத் திருடத் திட்டமிடுபவன் நட்ட நடு ராத்திரியில் ஒரு வீட்டின் சில ஓடுகளை அகற்றி உள்ளிறங்கி திருடிவிட்டுப் போவது. அரசியலிலும் கிட்டத்தட்ட இது அதேபோன்றதுதான். ஓ.பி.எஸ். போட்டியிட்ட தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரிலே ஐந்து சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி யிட்டது அத்தகையதுதான். ஒருவரது சின்னத்தைப் போன்ற அதே தோற்றமுடைய சின்னத்தில் போட்டி யிடுவது. ஒரு சமூகத்தின் ஓட்டு ஒரு கட்சிக்கு அதிகமாக விழுமெனில், அதே சமூகத்தைச் சேர்ந் தவரையே மற்ற கட்சிகளும் நிறுத்துவது. கடைசியில் கணிசமான ஓட்டுகள் களவுபோய் ஜெயிக்க வேண்டியவர் தோற்றுப்போவதும் நடப்பதுண்டு.

mavali1

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோவை தங்கள் கண்டுபிடிப்பாக முன்னிறுத்தியதற்காக.. மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கல்கோட்டியஸ் (Galgotias)  பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளதே..?

Advertisment

கல்கோட்டியஸ் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியே சர்ச்சையுடன் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கிறது. வங்கிக் கடனுக்கு போலி ஆவணங் களைக் கொடுத்தது, அவர்கள் நடத்திய பதிப்பகத்தில் உரிமம்பெறாத புத்தகங்களை அச்சடித்து காசுபார்த்தது என விமர்சனங்கள் இருக்கின்றன. தவிர, 2009-13 காலகட்டத்தில் அறிவிப்பின்றி கட்டணம் உயர்த்தியது, ரிசல்ட்டைக் கொடுப்பதற்கு 45,000 கேட்டது, மாணவர்களின் தரவரிசையில் மோசடி நடப்பதாகவும் புகார் உள்ளது. விதைப்பது எதுவோ அதுதான் முளைக்கும்.

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை

'வாய் தவறிவந்த வார்த்தை, மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று த்ரிஷா விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுள்ளாரே நயினார் நாகேந்திரன்?

இதுபோன்ற ஆட்களுக்காகத்தான் சிந்திய பாலையும் வார்த்தை களையும் அள்ளமுடியாது என பழமொழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மீனா முருகேசன், தஞ்சாவூர்.

மகளிர் உரிமைத் தொகையை, பாலியல் தொழிலாளியின் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தரம் தாழ்த்திக் கொள்ளும் அவலம், சிறந்த பத்திரிகையாளருக்கு அழகாக இல்லையே?

பெண்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12,000 தருகிறது மாநில அரசு. இந்தியாவுக்கே சோறூட்டும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு வருடம் 6,000தான் தருகிறது. இதையே பாலியல் தொழிலாளியின் சம்பளம் என்று சொல்லும் அந்த ஆடிட்டர், மோடியின் விவசாயிகளுக்கான உதவித் தொகையை என்னவென்று விமர்சிப்பார் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

பட்ஜெட் தாக்கல்செய்யப்படுவதை காதணி விழா (காது குத்தும் விழா) என்று அ.தி.மு.க. விமர்சனம் செய்துள்ளதே...?

ஆளும்கட்சியின் விழாக்களுக்கு எதிர்க் கட்சிகள் மொய் (விமர்சனம்) செய்வதும், எதிர்க்கட்சிகள் ஆளும்போது, இப்போது ஆண்ட கட்சிகள் மொய் செய்வதும் வாடிக்கைதான். ஆனால் ஒன்றிய அரசு, மாநில அரசு என எப்போதும் குத்திக் குத்தி புண்ணாவது என்னவோ மக்களின் காதுகள்தானே!

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

சீனாவுடன் ரகசிய தொடர்பு வைத்ததற்காக பெருநாட்டின் அதிபர் பதவிநீக்கம் செய்யப்பட்டி ருப்பது பற்றி...?

பெருவில் கடந்த 10 ஆண்டுகளில் 7 அதிபர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடைசியாக தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்ட ஜோஸ் ஜெரி, குறைந்த வயதில் பெரு வின் அதிபரானவர். பெரு தென்னமெ ரிக்க நாடு. அமெரிக்கா என நாம் வாய்பிளந்து நோக்கும் நாட்டுக் கும், தென்னமெரிக்க நாடு களுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த நாடுகளில், வறுமை, போதைக் கலாச்சாரம், நிலையான ஆட்சியின்மை, சர்வாதிகாரம் போன்ற பல பிரச்சனைகள் உண்டு. ஜெரி, சீன அதிபரை சமீபத் தில் சந்தித்திருக்கிறார். இவரின் நீக்கத்துக்குப் பின்னால், ட்ரம்ப் அரசின் கைங்கர்யம் இருக்க லாம்.