க.சுரேஷ்குமார், இடைகால்
சமீபத்தில் விநோதமாகப் பட்ட விஷயம்?
சர்தார் ஜி 3 என்றொரு படம் அமெரிக்கா, இங்கிலாந்தில் சமீபத்தில் வெளியானது. அமெரிக்கா விலும், இங்கிலாந்திலும் ரிக்கார்டு ப்ரேக் வசூல். ஆனால் இந்தியாவில் மட்டும் இந்தப் படம் வெளியாகவில்லை. இதற்கு இரண்டு காரணம் தான். இந்தப் படத்தின் நாயகி ஹனியா அமீர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். படம் வெளி யாகும்போது பஹல்காம் தாக்குதல், பதிலுக்கு இந்தியாவின் செந்தூர் அட்டாக் நடந்துவிட்டது. பஹல்காம் தாக்குதலை யடுத்து, இந்தியாவின் விமானத் தாக்குதலைக் கண்டித்து பாகிஸ்தான் குடிமகள் என்ற ரீதியில் ஹனியா ட்வீட் போட்டார். பஹல்காம் பிரச்சனைக்கு முன்பே இந்தப் படம் எடுத்தாகி விட்டது. முதல் போனாலும் பரவாயில்லை. ஆனால் படத்தை வெளியிடுவதா என யோசித்து வருகிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள். ஏற்கெனவே படத்தின் நாயகன் தில்ஜித் சிங்கை விமர்சித்து "பாய்காட் தில்ஜித்' என ஹேஷ்டேக் பிரபலமாகி விட்டது. ஆனால் வேடிக்கை யென்னவென்றால் இந்தப் படம் பாகிஸ்தானில்கூட வெளியாகி 4.25 கோடி வசூலித்துவிட்டது. இந்தியாவில் எடுத்த படம் இந்தியாவைத்தவிர மற்ற இடங்களில் வெளியாகி, இந்தியாவில் ரிலீஸாகாமலிருப்பது விநோதம்தானே.
சிவா, கல்லிடைக்குறிச்சி
பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பியை இன்றும் வைத்திருக்கிறேன் என வைகோ கூறியிருப்பது பற்றி?
விடுதலைப்புலிகள், ஈழ ராணுவத் திடம் சிக்கும்போது அவர்களின் சித்ர வதைகளில் சிக்கக்கூடாதென்பதற்காக சயனைடு குப்பிகளைக் கொடுத்து அவர்கள் கழுத்திலோ எளிதாக அணுகக்கூடிய இடத்திலோ மாட்டிக்கொள்ளப் பழக்கி யிருந்தார் பிரபாகரன். ஒரு ஞாபகார்த்த மாக, சயனைடை அடைத்துவைக்கும் வெறும் குப்பியை வைகோவுக்குக் கொடுத்திருக்கலாம். எப்படி யிருந்தாலும், தற்போது ஈழ அமைப்புகளுக்கும், பிரபாகர னுக்கும் நேர்ந்த துயர நினைவுகளை ஞாபகமூட்டும் ஒரு சின்னம்தான் அது.
மாயூரம் இளங்கோ,மயிலாடுதுறை.
ஆளுநர் ரவியால் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில், வள்ளுவரால் எழுதப்படாத குறள் ஒன்று அச்சிட்டு வழங்கப்பட்டது பற்றி?
படேல் சிலைக்குக் கீழே, ஒற்றுமையின் சிலை என்பதை "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என கூகுள் ட்ரான்ஸ்லேட் வசனத்தை வைத்தவர்கள்தானே. அவர்களின் மரபில் வந்தவர், ஏ.ஐ. துணையுடன் உருவாக்கிய போலிக் குறளை வைத்திருக்கிறார். அசல் என்றாலே அவர்களுக்கு அலர்ஜி போல!
எச்.மோகன், மன்னார்குடி
அரசியல், ஆன்மிகம், கல்வி- இம்மூன்றில் பணம் கொட்டும் அட்சய பாத்திரம் என்று எதனைச் சொல்லலாம்?
இந்த மூன்றுமே பணம் பண்ணுவதற்கான வழிமுறைகள் அல்ல. ஆனால் பலரும் அதை பணம் பண்ணுவதற்குத்தான் பயன் படுத்துகிறார்கள். கல்வி நிறுவனங்கள் மூலம் சம்பாதிக்கலாம் என்றாலும் அது வரம்புக்குட்பட்டது. மற்ற இரண்டும் பணம் கொட்டும் அட்சய பாத்திரங்கள்தான். அதிலும் இந்தியாவில், ஆன்மிகத்தில் சம்பாதிப்பதுபோல் வேறெதிலும் சம்பாதிக்கமுடியாது.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
மக்கள்தான் இந்த ஆட்சியின் பிராண்ட் அம்பாசிடர்கள் என்கிறாரே உதயநிதி?
தேர்தல் நெருங்குகிறதல்லவா, மக்கள்தான் ஆட்சியின் எஜமானர்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு ஞாபகம் வர ஆரம்பிக்கும். உதயநிதி முந்திக்கொண்டு உங்கள் ஓட்டு எங்கள் கட்சிக்கே என்கிறார்.
கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
சமந்தா தனது புதிய காதலருடன் ஜாலியாக ஊர்சுற்றுகிறாரே?
நான் வேண்டுமானால், ஸ்வீட்முருகனுடன் ஊர் சுற்ற முடியுமா என சமந்தாவிடம் கேட்டுப் பார்க்கட்டுமா!
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
2023-2024 நிதியாண்டில் ரூ.9,742 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளதே.. பி.சி.சி.ஐ.?
பிரச்சினை அது கிடையாது. பி.சி.சி.ஐ. தொண்டு நிறுவனம் எனச் சொல்லிக்கொண்டு அது ஈட்டியுள்ள தொகைக்கு வருமான வரி விலக்கு கேட்கிறது. இருந்தாலும், ஐ.பி.எல். போட்டி போன்றவை வணிக நடவடிக்கைகள் எனச் சொல்லி பலரும் நீதிமன்றத்தை அணுகுவதால் பி.சி.சி.ஐ. வருமான வரி செலுத்துவது தொடர்பான விவகாரங்கள் நீதிமன்றப் பரிசீலனையில் இருக்கிறது. அதேபோல அந்தந்த மாநிலத்தில் இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியங்களுக்கு பி.சி.சி.ஐ.யோ அல்லது ஐ.பி.எல்.லின் அம்மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனியார் கிரிக்கெட் அமைப்போ (சென்னை சூப்பர் கிங்ஸ்போல) கோடிக்கணக்கில் வாடகை பாக்கி வைத்திருக்கும். தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கு, மைதான மற்றும் வாடகை பாக்கி பல நூறு கோடி இருப்பதாக இடையில் பிரச்சினையெழுந்தது. என்ன நடந்ததோ, இப்போது சத்தத்தையே காணவில்லை.