வி.எம்.செய்யதுபுகாரி, அதிராம்பட்டினம் 

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து ஊதியம்பெறும் டாக்டர்களும் மருத்துவப் பயனாளிகள்தானே?

Advertisment

சிந்தனையெல்லாம் பலமாகத்தான் இருக்கிறது. நேராகச் சிந்திப்பது, கோணலாகச் சிந்திப்பது என இரண்டு வகைப்பாடு உண்டு. இது இரண்டாம் வகைப்பாடு. இதேபோல சிந்தித்தால், வாக்களிப்பவர்களே பெரும் பான்மையினர். தேர்தலில் நிற்பவர்கள் சிறுபான்மையினர். அதனால் சிறுபான்மையினர் நல நிதியை சிறுபான்மையின வகைப்பாட்டைச் சேர்ந்த என் கணக்கில் வரவுவைத்துக் கொண்டேன் என அரசியல்வாதி விளக்க மளிப்பார். ஏற்றுக்கொள்வீர்களா?

Advertisment

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை. 

தில்லியில் ஆப்கானிஸ்தான் தூதர் அலுவலக திறப்பு விழாவில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது குறித்து?

தவறான முன்னுதாரணம். வளைந்து கொடுக்கவேண்டிய விஷயங்களுக்குத்தான் வளைந்துதரவேண்டும். பெண்களையும் திறப்பு விழாவுக்கு அழைத்திருக்கவேண்டும். பெண்களுக்கும் சம உரிமை, சமவாய்ப்பு அதுதானே இந்திய அரசின் கருத்தியல் நிலைப்பாடு. வந்த விருந்தினர், பெண் பத்திரிகையாளர்களிடம் பேசுவதைத் தவிர்க்க விரும்பினால் தவிர்த்துவிட்டுப் போகட்டும். 

Advertisment

க.அருச்சுனன், செங்கல்பட்டு 

அமெரிக்கா- சீனா வர்த்தகப்போர் இந்தியாவுக்கு லாபம்தானே?

எப்படி? அமெரிக்காவுக்கு இதுவரை சீனா ஏற்றுமதி செய்ததை நாம் ஏற்றுமதி செய்யலாம் என்கிறீர்களா? சீனாவுக்கு முன்பே அமெரிக்கா டேரிஃப் போட்டதே இந்தியாவுக்குத்தான். சீனாவுடனான உரசலால், அமெரிக்காவில் அரியவகை தனிமத்தாலான காந்தத்துக்கு தட்டுப்பாடு. அமெரிக்காவுக்கு சப்ளை செய்யலாமென்றால், நாமே அதைக் கேட்டு சீனாவிடம் கையேந்திக்கொண்டிருக்கிறோம்.

mavali1

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

பசு பாதுகாப்பு வரியால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ. 3000 கோடி வருவாயாமே..?

கிட்டத்தட்ட 7 மாநிலங்களில் மது, சிகரெட்டில் கூடுதல் வரிவிதித்தோ, சொத்து வரியிலோ, மின்சாரக் கட்டணத்தோடு கூடுதலாக வசூலித்தோ பசுப் பாதுகாப்புக்கு பயன்படுத்தப் படுகிறது. இதில் உத்தரப்பிரதேசம் மட்டுமே 3000 கோடி வரை ஈட்டுகிறது. இது கோசாலை, அதன் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. அதே உத்தரப்பிரதேசத்தில்தான் பசுக்களைப் பராமரிக்காமல் நூற்றுக்கணக்கான பசுக்கள் கோசாலையில் இறந்தன. அந்த நிதியைவைத்து குளிர்காலத்தில் மாட்டுக்கு ஸ்வெட்டர், குல்லா வாங்கிப் போடுவதாகச் சொல்லி தனிநபர்கள் காசுபார்த்தார்கள். அதே பசுப் பாதுகாப்பு இந்தியாவில்தான், மாட்டிறைச்சி ஏற்றுமதி ஆண்டுக்கு 46 லட்சம் டன். இருக்கிற வரிகளுக்கே விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது. இதில் மக்கள் தலையில் பசுப் பாதுகாப்பு வரியையும் சுமத்தவேண்டுமா? 

வாசுதேவன், பெங்களூரு

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கிடைக்க வில்லையே..?

வெனிசுலாவில் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினோ மச்சாடோவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. இடதுசாரி என்ற பெயரில் அந்நாட்டில் நிலவிய சர்வாதிகாரத்தை எதிர்த்துவந்தவர், ஜனநாயக கருத்துகளுக்காக குரல் கொடுத்தவர், இப்போதும் தலை மறைவாக வாழ்ந்துகொண்டே போராடி வந்தவர் என ஒருதரப்பும், அமெரிக்க ஆதரவாளர், இஸ்ரேல் போரை ஆதரித்தவர் என இன்னொரு தரப்பும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது. அமைதிக்கான நோபல் பரிசானாலும் பரிசுபெறுபவருக்கு எதிராகக் கிளம்பும் அரசியலிலிருந்து தப்பிக்க முடியாது போலிருக்கிறது.

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

மக்களின் பொன்னான நேரத்தைக் களவாடும் ஐ.பி.எல்., 20-20 போன்ற கிரிக்கெட் போட்டிகள் தேவையா?

கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டை நம் பையில் யாராவது சொருகிவிட்டு காசை எடுக்கவில்லை அல்லவா! நம் வீட்டு டி.வி.யின் ரிமோட்டை விரும்பிய சேனல்களுக்கு மாற்றிக்கொள்வது நம் விருப்பம் தானே. நமது நேரம் பொன்னானது என்ற விழிப்புணர்வு இருப்பவர்கள், அதை தங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கான செயல்களில்தான் முதலீடு செய்வார்கள்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்  

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்?

அதிலென்ன சந்தேகம்! ஆனால் வீம்புக்குப் பேசுவதென்றால் பேசலாம். வள்ளுவர் சொன்னதற்கும், பாரதியார் எல்லோரும் ஓர் குலம்! எல்லோரும் ஓர் நிறை! எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொன்னதற்கும் ஒன்றேதான் பொருள். ஆனால் வித்தியாசங்களைப் பேசுகிறவர்கள், நான் போட்டிருக்கிறது ஆயிரம் ரூபாய் சட்டை, நீ போட்டிருக்கிறது? நான் பிறந்தது ... குலம், நீ பிறந்தது? என பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கு உறைக்கிற மாதிரி நாமும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.