கே.வல்லவன், பேரணாம்பட்டு

ஆந்திர மாநிலத்தில் 1 கிலோ வாழைப்பழம் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறதே?

Advertisment

வாழைப் பழத்துக்கு ஏழைகளின் கனி என்றொரு பெயர் உண்டு. அதற்காக கிலோ 50 பைசாவுக்கு விற்றால் விவசாயிக்கு என்ன மிஞ்சும்? தொழில்நுட்பமும் அறிவியலும் எவ்வளவோ முன்னேறிவிட்டது. மாநில அரசுகள் தம் மாநிலத்துக்கு இன்னின்ன பயிர்கள் இவ்வளவு தேவை, இதற்குமேல் பயிரிடாதீர்களென அறிவுறுத்தலாம். கூடவே காப்பீடு, குறைந்தபட்ச ஆதார விலை, பயிர்கள் சேதமடையும்போது நிவாரணத்தையும் முறையாக வழங்கினால் விவசாயிகளை ஓரளவு நட்டத்திலிருந்து காக்கமுடியும்.

Advertisment

எஸ்.இளையவன், சென்னை

இந்திய அரிசியால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக ட்ரம்ப் புதிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறாரே?

"கோவில்' படத்தில் வடிவேலு பரிசுக் கோப்பையை விலைக்கு வாங்கி தன் பெயரைப் பொறித்துக் கொண்டுவருவதுபோல, மோடி எப்படியாவது ஒரு டூப்ளிகேட் நோபல் பரிசாவது ரெடி பண்ணி ட்ரம்புக்கு கொடுத்து அவர் மனதில் இடம்பிடிக்கவேண்டும். இல்லை, பாகிஸ்தானைப்போல வெட்கமில்லாமல், ட்ரம்ப்தான் இந்திய- பாகிஸ்தான் போரை நிறுத்தினார் என சொல்லிவிடவேண்டும். அதுவரை இந்தியாவை நிம்மதியாக இருக்கவிடமாட்டார் ட்ரம்ப்.

Advertisment

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

சசிகலா, தின கரன், பன்னீர்செல்வம் இவர்களை அ.தி.மு.க.வினுள் நுழையவிட்டால், எடப்பாடி பழனிச்சாமியின் கதி என்னவாகும்?

பா.ஜ.க. கையிலே பிடியைக் கொடுத்தாகிவிட்டது. பா.ஜ.க. செய்யாத சேதாரத்தையா இவர்கள் செய்து விடப்போகிறார்கள்? இவர்களைப் பற்றி யோசிப்பதைவிட, பா.ஜ.க. பிடியிலிருந்து நழுவ வழியென்ன என்றுதான் எடப்பாடி யோசிக்கவேண்டும்.

ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்பது தொடர்கதை யாகத்தானே உள்ளது?

பா.ஜ.க.வின் தற்போதைய கட்சி நிதி மதிப்பு ரூ.10,107 கோடி. இதெல்லாம் தொழிலதிபர்களும், மக்களும் பிரியப்பட்டுக் கொடுத்த நிதி என்கிறீர்களா? கட்சிகள் அனைத்துமே கமிஷன், கலெக்சன் என்ற விதிக்கு அப்பாற்பட்டவை இல்லை. அது திராவிடக் கட்சியானாலும், ஆரியக் கட்சியானாலும் அதுதான்.

mavali1

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

மக்களின் பணத்தைக்கொண்டு பாபர் மசூதியைக் கட்ட நேரு விரும்பினார். அவரது திட்டம் வெற்றிபெற படேல் அனுமதிக்கவில்லை என்கிறாரே ராஜ்நாத்சிங்?

பா.ஜ.க.வில் மோடி, அமித்ஷா வுக்கு உத்தரவிடுகிறாரா... இல்லை, அமித்ஷா, மோடிக்கு உத்தரவிடுகிறாரா? பிறகெப்படி, காங் கிரஸில் மட்டும் படேல் நேருவுக்கு உத்தரவிட்டிருப்பார் என நினைக்கிறீர்கள். தவிரவும், பாபர் மசூதி ஏற்கெனவே கட்டப்பட்டேதான் இருந்தது. அதில் சிலையை வைத்து பிரச்சனை செய்ததும், கலவரம் செய்து அதை உடைத்ததும் யார் என்பதும் இந்தியாவுக்கே தெரியும். புதிதாக நேரு கதை சொல்லி இந்தியர்களுக்கு காதுகுத்தத் தேவையில்லை. 

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

நாடே வியக்கும் விதத்தில் த.வெ.க. சின்னம் இருக்கும் என்கிறாரே செங்கோட்டையன்?

சின்னத்தில் நாடே வியக்கும்படி என்ன இருந்துவிடப் போகிறது? கிடைக்கும் சின்னத்தை வைத்து நாடோ, மாநிலமோ வியக்கும்படி ரிசல்ட்டைப் பெறுவதற்கு செங்கோட்டையன் ஏதாவது உதவி செய்தால் சரிதான்.

ஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மெட்ரோவில் 20 திருநங்கைகளுக்கு பாதுகாவலர் பணி வழங்கப்பட்டுள்ளதே?

நல்ல முன்னுதாரணம்தான். அதேபோல தனியார் அமைப்புகளும் தத்தம் நிறுவனத்தில் அவர்களைப் பணியில் பயன்படுத்த முன்வரலாம். திருநங்கைகளும் சமூகம் முகஞ்சுளிக்கும் விஷயங்களிலிருந்து விலகிக் கொள்வதற்கு மன உறுதியுடன் போராடவேண்டும்.

க.அருச்சுனன், செங்கல்பட்டு

சர்க்கரை நோயின் தலைநகரமாக மாறியிருக்கிறது இந்தியா, என்ன காரணம்?

உலகின் 5 சர்க்கரை நோயாளிகளில் ஒருவராக இந்தியர் இருக்கிறார். 2030-ல் இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமான சர்க்கரை நோயாளிகள் இருப்பர் எனக் கூறப்படுகிறது. உடலுழைப்பின்மை, உணவுப் பழக்கவழக்கம், உடல் பருமன், மரபு வழியில் வருவது என பல காரணங்கள் இருக்கின்றன. பெயரில் வேண்டுமானால் சர்க்கரை இருக்கலாம், ஆனால் உண்மையில் நோயாளிக்கு மிகக் கசப் பான அனுபவங்களைத் தரும் சர்க்கரை குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்த மத்திய-மாநில அரசுகள் முயற்சிசெய்யவேண்டும்.