மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

பராசக்தி திரைப்படம், தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளதா?

Advertisment

பராசக்தி படத்தால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியிடையே விரிசல் வந்ததாகத் தெரிய வில்லை. தி.மு.க. - காங்கிரஸ் உறவில் விரிசலை ஏற்படுத்தவேண்டும் என அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டு, வலுவான வியூகத்துடன் இருக்கும் சிலர்தான் விரிசலை ஏற்படுத்த முயற்சிப்பதுபோல் தெரிகிறது.

Advertisment

சிவா, கல்லிடைக்குறிச்சி

இந்து சமூகத்தில் பிளவுகள் கிடையாது என மோகன் பகவத் எதற்காக கூறியிருக்கிறார்?

சாதிப் பிளவுகளும், சமூக ஒற்றுமையின்மை யும் மிகவும் அதிகளவில் காணப்படும் சமூகம் இந்து சமூகம்தான். மனு ஸ்மிருதியே சமூகத்தை நான்காகப் பிளந்துவிட்டுத்தான் விதிமுறைகளை வகுக்கிறது. அதில் நான்கு வருணத்திலும் பிராமணர்களுக்கு வெகுமதி அதிகம். தண்டனை குறைவு. மோகன் பகவத் குத்திய காதில், திரும்ப கம்மலைக் குத்தினாலும் பரவாயில்லை, கடப்பாரையை குத்தப் பார்க்கிறார். 

Advertisment

க.அருச்சுனன், செங்கல்பட்டு 

கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பவர் களை நாடு கடத்தினால் என்ன?

இந்துக் கோவில், பள்ளிவாசல், கிறித்துவ தேவாலயம் -எந்தக் கோவிலாக இருந்தாலும் மனித நிர்வாகத்துக்கு உட்படும்போது மனிதனின் பலவீனமான பேராசையால் ஊழலும் சுரண்டலும் இருக்கத்தான் செய்யும். அத்தகையவர்களை தண்டிக்க சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கின்றன. ஊர் ஊருக்கு ஒவ்வொரு மத கோவில்களின் வரவு-செலவுகளை தணிக்கை செய்து உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்தால், நாட்டில் கால்வாசிப் பேரை நாட்டைவிட்டே கடத்தவேண்டியிருக்கும். 

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

ஆட்சியில் பங்கு என்று அறிவித்து கூட்டணிக்காகக் காத்திருக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளது பற்றி?

இதுவரை தேர்தலிலே நிற்காத கட்சி த.வெ.க. அவர்களுக்கு இழக்க எதுவுமில்லை. ஆனால் ஆட்சியில் பங்கு என அறிவித்து வெற்றிபெற்றால் ஆட்சி கிடைக்கும், இல்லாவிட்டாலும் சிலபல சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள். பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத பட்சத்தில், எந்தக் கட்சியானாலும் கூட்டணிக் கட்சிக்கு ஆட்சியில் பங்களித்துத்தான் ஆக வேண்டும். த.வெ.க.வை விமர்சிக்க எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. இதற்காக த.வெ.க. வை திருமாவளவன் விமர்சிக்கத் தேவையில்லை.

எஸ்.இளையவன், சென்னை

விவசாயக் கழிவுகளிலிருந்து தார் தயாரிக்கும் முதல் நாடு இந்தியா என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதே?

நல்ல விஷயம்தான். ஆனால் இந்தியாவின் மாபெரும் கழிவு பிளாஸ்டிக் கழிவுகள்தான். ஒரு நாளைக்கு இந்தியாவில் 26,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. உலகின் ஒரு நாளைய மொத்த பிளாஸ்டிக் பயன்பாட்டில் இது ஐந்திலொரு சதவிகிதம். இவற்றில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்பட்டாலும், பெரும்பகுதி நீரிலும், நிலத்தடியிலும் போய் நமது உணவு, குடிநீரிலே பிளாஸ்டிக் பொருட்களின் நுண்துகள்கள் கலந்து, ஆரோக்கியக் கேடு ஏற்படுகிறது. மலைகளை வெட்டி சாலை போடுவதற்குப் பதில், இந்த பிளாஸ்டிக் கழிவுகளாலே சாலையமைக்கும் தொழில்நுட்பம் வளர்ந்தால், மலைகளாவது தப்பிக்கும்.

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

கேரள அரசுப் போக்குவரத்துக் கழக விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லாலை நியமித்துள்ளதே கேரள அரசு?

நடிகர்கள் விளம்பரத் தூதுவராக இருக்கும் போது, மாநில அரசின் எதிர்பார்ப்பு மிக விரைவில் நிறைவேறும். 1980-களில் ரஜினிகாந்த் போலியோ விழிப்புணர்வு விளம்பரத்தில் இலவசமாக நடித்துக்கொடுத்தார். அது போலியோ சொட்டு மருந்துப் பயன்பாட்டை பெருமளவு உயர்த்தியது. 

திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை 

சென்சார் போர்டும் மத்திய அரசின் புதிய ஆயுதம் என்கிறாரே ஸ்டாலின்?

நடிகர் விஜய்யை கூட்டணிக்கு நெருக்க, மத்திய அரசு சென்சார் போர்டையும் பயன்படுத்திக்கொள்கிறது என்கிறார் சூசகமாக. மைதாஸ் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது. மத்திய அரசுக்கு, ஒன்றிய அரசின் அமைப்பு களான தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., அமலாக் கத்துறை எல்லாம் ஆயுதங்களாக இருக்கிறது. தான் வாங்கிய வரமே மைதாஸுக்கும், பஸ்மாசுரனுக்கும் சாபமானதுபோல, பேராசைக் காரர்களுக்கு தங்கள் பேராசையே சாபமாக அமையும் காலம் வரும்.

ஜி.ஓவியா, திருமுல்லைவாயில்

ஒரே வார்த்தையில் மாவலியால் பதிலளிக்க முடியுமா?

முடியுமே!