எச்.மோகன், மன்னார்குடி
இந்திராகாந்தி, ஜெயலலிதா இருவரில் அரசியல் ஆளுமைமிக்க தலைவர் யார்?
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்து நீதிமன்றத்தில் சிக்கி உச்சநீதிமன்றத்தாலே முதன்மைக் குற்றவாளி எனப் பெயர் வாங்கினார் ஒருவர். மற்றவர் அவசரநிலைப் பிரகடனம், பொற்கோவில் தாக்குதல் செய்து பெயரைக் கெடுத்துக்கொண்டார். பங்களாதேஷை சுதந்திர தேசமாக்கியது முதல், இந்திராவின் தைரியத்தையும் ஆளுமையையும் வெளிக்காட்ட எத்தனையோ இருக்கிறது. கும்பகோணம் மகாமகப் பலிகள், மதமாற்ற தடைச் சட்டம், சாலைப் பணியாளர் கள் நீக்கம் என ஜெ.வுக்கு நெகடிவாகச் சொல்வதற்குத்தான் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இருந்தாலும் ஜெயேந்திரரை தூக்கி உள்ளே வைத்தது, கூட்டணிக் கட்சியினரை கேட்டுக்கு வெளியே காத்திருக்கவிடுவது என ஜெயலலிதாவின் டோன்ட் கேர் செயல்பாடுகள் அவருக்கு பெயர் பெற்றும் தந்திருக்கின்றன.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
சிங்கப்பூர் பாலியல் தொழிலாளர்களைத் தாக்கிக் கொள்ளையடித்த இரண்டு இந்தியர் களுக்கு பிரம்படியும் சிறைத்தண்டனையும் கிடைத்துள்ளதே?
பிழைக்க வழியின்றிதான் பாலியல் தொழிலுக்கு வருகிறார்கள். அவர்களிடம் பிடுங்கித் தின்பவர்கள் எத்தனை இழிந்தவர்களாக இருப்பார்கள். இந்தியாவின் பெயரை அயல்நாட்டில் கெடுக்கும் அறிவீனர்கள். இவர்கள் தண்டனை முடிந்து இந்தியா வந்ததும், இந்தியாவும் தன் பங்குக்கு சில மாதங்கள் சிறையிலடைக்கவேண்டும்.
திலகர் ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
சுயபுத்தி, சொல்புத்தி இரண்டும்தானே தேவை..?
அதில் சந்தேகமென்ன! ஆனால் எத்தனை பேரிடம் சுயபுத்தி இருக்கிறது. விழுந்து விழுந்து எழுவதைவிட, விழுந்து எழுபவர்களைப் பார்த்து கற்றுக்கொண்டு விழாமல் நடைபோடுகிறவன் புத்திசாலி.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
கலைஞர் பல்கலைக்கழக விவகா ரத்தில் ஆளுநர் முரண்டுபிடிப்பது பற்றி?
வருடத்துக்கொரு முறை உச்சநீதிமன்றத்திடம் கொட்டு வாங்கினால்தான் அவரால் இயல்பாக உணரமுடிகிறதுபோல.
எஸ்.இளையவன், சென்னை
ஜெயிலர்-2 குறித்து பில்டப் செய்ய விரும்பவில்லை என இயக்கு நர் நெல்சன் கூறியிருக்கிறாரே?
ஏற்கெனவே பில்டப் செய்த சமீபத்திய படங்கள் சில செமத்தியாக அடிவாங்கியதில் வந்த முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
சுதந்திரப்போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். எங்கே இருந்தது என்கிறாரே கம்யூனிஸ்ட் தலைவர் ராஜா?
சுதந்திரப் போராட்டத்தில் இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன, பாடத்திட்டத்தைத் திருத்த அதிகாரம் பா.ஜ.க.விடம்தானே இருக்கிறது. காந்தியே தீவிர ஆர்.எஸ்.எஸ். விசுவாசி என வரலாற்றைத் திருத்திவிடமாட்டார்களா! சுதந்திரப் போராட்டத்தில், இந்தியப் பிரிவினைக்குக் காரணமாக இருந்த மனவருத்தம் தாளாமல் நாதுராம் கோட்சேவைத் தேடிவந்து காந்தி தன் நெஞ்சில் தோட்டாவை வாங்கிக்கொண்டார். கோல்வால் கர், சாவர்க்கருக்குப் பயந்து ஆங்கில அரசு இந்தியாவுக்கு சுதந்திரமளித்தது என வரலாற்றை சீர்திருத்திவிடாதா பா.ஜ.க!
எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்
தேர்தல் நெருக்கத்தில் கட்சியினரைக் களையெடுக்கிறாரே எடப்பாடியார்?
தனக்கு எதிராகச் செயல்படுபவர்களின் விசுவாசிகளாக இருப்பவர்களைக் களையெடுக்க, நேரமெல்லாம் பார்க்கவேண்டுமா என எடப்பாடி யோசிக்கலாம் அல்லவா!
ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
ஒருவேளை த.வெ.க., அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியா அல்லது அமித்ஷாவுக்குக் கிடைத்த வெற்றியா?
அப்படி நடந்தால், இப்போதைய சூழலில் இது பா.ஜ.க.வுக்கான வெற்றிதான். ஆனால் நீண்டகால அடிப்படையில், ஒரு நெருக்கடியான சூழலை எப்படிச் சமாளிப்பது என யோசிக்க சாமர்த்திய மில்லாத கட்சித் தலைவருக்கான தோல்வி.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
பீகாரில் நாங் கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்கிறாரே தேஜஸ்வி யாதவ்...?
தேர்தல் நெருங்கிவிட்டது அல்லவா, நீங்கள் தெருவில் போகிற அரசியல்வாதியைக் கூப்பிட்டு கால்பிடித்துவிடச் சொன்னால்கூட பிடித்துவிடுவார். பீகாரின் மக்கள் தொகை சுமாராக 13 கோடி. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஏழு பேர் என வைத்தால்கூட தோராயமாக இரண்டு கோடி அரசு வேலைகளை உருவாக்கவேண்டும். தேஜஸ்வி காதில் பூ வைப்பதற்குப் பதில் பூக்கூடையையே வைக்கிறார். பதிலுக்கு பா.ஜ.க. என்ன அடித்துவிடப்போகிறது எனப் பார்ப்போம்.