என். இளங்கோவன், மயிலாடுதுறை.

ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் நடக்கிறது. ஆந்திர உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவரது பதவியை நானே ஏற்பேன் என்று பவன்கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளாரே?

ஆந்திர சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கே 88 இடங்கள்தான் தேவை. சந்திரபாபு நாயுடுவிடம் 112 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். பவன் கல்யாண் சொந்தமாகப் பேசுவதைவிடவும், பா.ஜ.க. தூண்டுதலில் பேசுவதுபோல் இருக்கிறது. இதேபோல் தொடர்ச்சியாகப் பேசினால் துணை முதல்வர் பதவி பறிபோய்விடப் போகிறது.

mm

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

இனி அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டும்தான்.. என்று வெற்றிபெற்றவுடன் முதல் அறிவிப்பாக டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறாரே?

Advertisment

பூர்விக அமெரிக்கர்கள், செவ்விந்தியர் போன்ற பழங்குடிகள். அங்கு குடியேறிய ஐரோப்பிய நாட்டவர்கள் பூர்விக மக்களில் பெரும்பகுதியைக் கொன்றழித்துவிட்டனர். எஞ்சிய பூர்விகக் குடிகள் தங்கள் அடையாளங் களையும், கலாச்சாரத்தையும் மறந்து வாழ்கின்றனர். இதில் அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே என்றால், அங்கே குடியேறியவர்களையெல்லாம் ட்ரம்ப் வெளியேற்றப்போகிறாரா? வெற்றி மிதப்பில் பேசப்படுகிற வாசகங்களை, அகராதியை எடுத்து அர்த்தம் தேடிக்கொண்டிருக்கக்கூடாது. இன்றைய அமெரிக்காவின் வளத்துக்கு, அமெரிக்கர்கள் அடிமைகளாகக் கொண்டுவந்த ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்களும், உலகமெங்கும் இருந்துவந்த உழைத்து அமெரிக்காவை செழுமையாக்கும் பல்வேறு நாட்டவர்களும் சேர்ந்துதான் காரணம். அமெரிக்க வேலைகளை அவுட்சோர்ஸிங்காக வெளிநாட்டவர் களுக்குக் கொடுப்பதையும், குறைந்த விலை கிடைக்கிறது என்பதற்காக கணக்குவழக்கின்றி இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களையும் குறிவைத்துப் பேசியிருக்கிறார் ட்ரம்ப். அதன் பொருள் ஹெச்1பி விசா நடைமுறை கெடுபிடியாகும். இறக்குமதிப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறாராமே?

Advertisment

அடுத்த படத்துக்கான லொக்கேஷன் தேடியா? சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தம் செய்து கொள்வதற்கா? என்பதைத் தெளிவாகக் கேளுங்கள். மற்றபடி சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்திப்பது விஜய், மாநில நிலவரத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளவும் மக்களைப் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும். கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் போட்டுத் தரும் சுற்றுப்பயணமாக இல்லாமல், சுயசிந்தனையில் உருவான திட்டப்படி சுற்றுப் பயணம்போய் அரசியல் பாடம் கற்றுவந்தால் சரிதான்!

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

ஏதோ வேலைவாய்ப்பு அளிப்பதுபோல அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் பேருக்கு பதவி என்கிறாரே எடப்பாடி?

அ.தி.மு.க.வைச் சீரமைக்க, 38 வருவாய் மாவட்டங்களில், லட்சம் பதவிகளை இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்க எடப்பாடி திட்டம் என செய்தி வருகிறது. பசையுள்ள கட்சியில் பசையுள்ள பதவி கிடைத்தால் மாவட்ட ஆட்சியரைவிடவும் கூடுதலான வருவாயைப் பெறலாம். இதுதெரியாமல் வேலைவாய்ப்பு போல ஒரு லட்சம் பேருக்கு பதவி என்கிறாரே என அங்கலாய்க்கிறீர்கள். கோயமுத்தூர் அ.தி.மு.க. வட்டாரத்தில் கட்சிக்காரர்கள் பதவிக்கு எப்படி அடித்துப்பிடித்து துண்டுபோட்டு இடம்பிடிக்க முயல் கிறார்கள் என பாருங்கள்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

முற்போக்கு வணிகத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறாரே ராகுல் காந்தி?

பார்க்கலாம், மகாராஷ்டிர, ஜார்கண்ட் மாநில தேர்தல் ரிசல்ட்டைப் பார்த்தால் முற்போக்குக்கான நேரமா, இல்லை பிற்போக்குக்கான நேரமா என்பது தெளிவாகத் தெரிந்துவிடப்போகிறது.

எஸ். கதிரேசன், பேரணாம்பட்டு

நிறைவேற்ற முடியாத வாக் குறுதிகளால் மக்களை காங்கிரஸ் வஞ்சித்துவிட்டது என்று மோடி குற்றஞ்சாட்டுவது சரியா?

எனக்குத் தெரிந்து காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலின்போது 2,000 கொடுப்பேன். 5000 கொடுப்பேன் என்றுதான் வாக்குறுதி அளிக்கிறது. ஆனால் அதிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்ற மோடியின் ஆசை வார்த்தை. எது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று மோடியே முடிவுசொல்லட்டும்.

த.பிரபாகரன், ஈரோடு

அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார் என்கிறாரே எஸ்.பி. வேலுமணி?

இதை அன்றைக்கு உரக்கச் சொல்லியிருந்தாலா வது ஒரு சட்டமன்ற உறுப்பினர், அமைச்சரே வலியுறுத்துகிறாரே என்றெண்ணி அமெரிக்கா கொண்டு செல்வதைப் பற்றி பரிசீலிக்கவாவது செய்திருப்பார்கள். இப்போது எதற்கு இந்தக் கூப்பாடு, யாரை குற்றம் சொல்ல இப்போது விரல் நீட்டுகிறார் என நமக்குச் சந்தேகம் எழுகிறதே!