பா.சுமதி, சேலம்
ஹரியானா தேர்தல் ரிசல்ட்?
கூட்டணிக்கு விட்டுத் தராமல் ஈகோ பார்த்ததால், ஆம் ஆத்மிக்கு ஒரு கண் போயிருக்கிறது.… ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளதால் காங்கிரஸுக்கு இரண்டு கண்ணும் போயிருக்கிறது.
வண்ணை கணேசன், கொளத்தூர்
நான் ஆட்சிக்கு வந்ததும் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்குக் கொண்டு வருவேன் என புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள பிரசாந்த் கிஷோர் அறிவித்திருக்கிறாரே...?
ஆட்சிக்கு வருவதும் வராததும் அப்புறம். மக்களின் கவனத்தை ஈர்க்கவேண்டுமெனில் அதிரடியாக, தடாலடியாகப் பேசவேண்டும் என்பது தெரியாமலா இருப்பார் ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர்!
ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
திருமணத்துக்குப் பின் மனித மனங்கள் ரொம்பவும் மாறுபடும் என்பதை நம்புகிறீர்களா?
திருமண சந்தையில் விலைபோகாத தங்கள் மகன் -மகள்களைத் தள்ளிவிடுவதற்காக பெற்றோரும், அவர்களது உறவினரும் கண்டுபிடித்த ஏமாற்று யோசனைதான், திருமணமானால் எல்லாம் சரியாகிவிடுமென்பது. இனி நாம் தனி ஆளல்ல... என்ற உணர்வு கிளம்பி ஆணும் பெண்ணும் பொறுப்புடையவர்களாவதென்பது வேறு. கல்யாண மாகிவிட்டாலே குடிப்பழக்கம், குணபேதங்கள், அறிவீனம் எல்லாம் சரியாகிவிடுமென்பது இன்னொரு மூடநம்பிக்கைதான்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வழிபாட்டுத் தலங்களாக இருந்தாலும் இடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் எதைக் காட்டுகிறது?
எந்தக் கடவுளும் எனக்கு கோவில் கட்டித் தாருங்கள் என்று யாரிடமும் கேட்பதில்லை. ஆக, கோவில் கட்டுவது முழுக்க பக்தர்கள் சமாச்சாரம். அப்படிக் கட்டும் கோவிலை, பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டாமல் தகுந்த இடத்தில் நிலம் வாங்கி எழுப்பலாம். ஒருவேளை நெடுஞ்சாலைகள் உருவாகிவரும் இடத்தில் முன்பே கட்டிய கட்டடம் இருக்குமெனில் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு இடையூறாகவோ, நீர்நிலை போன்ற இடங் களிலிருந்தோ வெளியேறமாட்டேன் என்று கடவுளும் மறுப்பு தெரிவிக்கப்போவ தில்லை. நம் கடவுள் கோவிலை இடிப்பதா என்று ஆணவம் தலைக்கேற, அந்தந்த மதத்தவர் தகராறு செய்வதால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சரிதான்.
மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தேசத்திற்கு தந்தைகள் கிடையாது மகன்கள் உள்ளனர் என்று பா.ஜ. எம்.பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளாரே...?
தேசத்தந்தையாய் காந்தி இருப்பதுதான் அவர்களது பிரச்சினை. இதுவே சாவர்க்காரை தேசத்தந்தை என அழைக்கலாமென்று ஆலோசனை சொன்னால் பூம் பூம் மாடு போல ஆமோதித்து வேகமாகத் தலையாட்டுவார்.
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்
மூன்றாம் உலகப்போர் வருமா?
எதற்கு? இரண்டாம் உலகப் போரில் அப்போது தான் சுடச் சுட தயாரிக்கப்பட்ட அணுகுண்டு வீசியதில் ஹிரோஷிமா, நாகசாகி உருக்குலைந்து போனது. இன்றைய தேதியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான் என அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளே டஜன் கணக்கில் இருக்கின்றன. ஒருவேளை மூன்றாம் உலகப்போர் நடந்தால், வெற்றி -தோல்வியைப் பார்க்க மனித குலமே இல்லாமல் போகலாம்!
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
சனாதன தர்மத்தில் ஜாதிப் பாகுபாடு இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகிறாரே?
ஆங்கிலேயர் வரும் வரை இந்தியாவில் ஜாதிப் பிரிவினையே இல்லை. இந்த வீணாய்ப்போன ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பிரித்தாள்வதற்காக கண்டுபிடித்த தந்திரம்தான் ஜாதி என்று அடித்துவிட்டுக்கொண்டிருக்கிறார் கள் பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸும். அதை நம்புவதற்கும் மூளையற்ற ஒரு கூட்டம் இருக்கிறது. அதேவழியில் ஆளுநரும் தமிழர்களின் சிந்திக்கும் திறனைச் சோதிக்கிறாரோ என்னவோ!
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
வன்னியர்களை ஏமாற்ற நினைத்தால், தி.மு.க. அரசின் சமூகநீதி மோசடிகளை அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளாரே டாக்டர் ராமதாஸ்?
மருத்துவரின் டீலிங்கே சரியில்லையே. வன்னியர்களை ஏமாற்ற நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் எதிர்க்கட்சியாக, ஆளுங்கட்சியின் மோசடிகளை அம்பலப்படுத்தவேண்டியது பா.ம.க. வின் கடமைதானே. ஒருவேளை வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடை உறுதி செய்துவிட்டால் மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து விடுவாராமா மருத்துவர்!
அ.யாழினி பர்வதம், சென்னை-78.
வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் அபரிமிதமாக உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறாரே?
அப்படியென்றால் தற்போதைக்கு இந்தியா வில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் மோசமாக இருக்கிறதென்று அவரே ஒப்புக்கொள்கிறார். மோடி யின் 15 லட்ச விவகாரத்தைப்போல், பத்தாண்டு களுக்குப் பிறகு சாமானியர்களின் வாழ்க்கைத் தரமும் அமோகமாக உயர்ந்துவிடும்!