அ. யாழினிபர்வதம், சென்னை-78. 

இன்றைய தமிழக அரசியல் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது? 

எல்லா பாதைகளும் ரோமை நோக்கிச் சென்றுகொண்டி ருக்கிறது என்றொரு சொல் வழக்கு உண்டு. அதுபோல தமிழக அரசியல் மட்டுமல்ல... எல்லா அரசியலும் தேர்தலை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது.

Advertisment

சிவா, கல்லிடைக்குறிச்சி.  

பீகார் வாக்காளர் பட்டியல்  பரிசுத்தமானது என்று தேர்தல் ஆணையர் சான்று வழங்கியிருப்பது குறித்து?

Advertisment

பீகார் வாக்காளர் பட்டியல் பரிசுத்தமானது என எதிர்க் கட்சிகள் சான்றிதழ் வழங்கியிருந்தால் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பாராட்டியிருக்கலாம். எதிர்க்கட்சிகளெல்லாம் உச்சநீதிமென்றம் போய் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டி ருப்பதாக முறையிட்டு, அவர்களைச் சேர்க்கும்படி உச்சநீதிமன் றம் தேர்தல் ஆணையத்தின் காதைப்பிடித்துத் திருகி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போதும் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ள 3,66,000 பேர் குறித்த விவரங்களை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. இதனால் ஞானேஷ்குமார் பெருமைப்பட ஏதுமில்லை.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி 

"ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே தகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து..?

Advertisment

சனே தகைச்சியை, தற்போது ஜப்பானில் ஆளும்கட்சியாக இருக்கும் லிபரல் டெமாகிராடிக் கட்சி பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது. 1993 முதலே அரசியலில் இருக்கிறார். கிட்டத்தட்ட 32 வருட அரசியலுக்குப் பின்தான் அவருக்கு இந்தப் பதவி கிடைக் கவுள்ளது. ஜப்பானிய வரலாற்றின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறவுள்ள இவர் அமெரிக்க ஆதர வாளராகவும், சீன எதிர்ப்பாளராகவும் இருப்பாரெனத் தெரிகிறது. (ஜப்பானுக்கு வேறுவழியில்லை). மற்ற விவகாரங்        களை அவர் ஆட்சிக்கு வந்தபின்தான் கணிக்கமுடியும். இந்த விவகாரத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள். மேற்கத்திய நாடுகளுக்கு வெகுமுன்பாகவே பிரதமர் பதவிகளில் பெண்களை அமர்த்தி அழகு பார்த்துவிட்டன. கிழக்காசிய நாடாக இருந்தாலும், உயரிய பதவியில் பெண்களை அமர்த்த ஜப்பா          னுக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு மணிப்பூரில் தபால் சேவை தொடங்கப் பட்டிருப்பது பற்றி?

இரண்டு ஆண்டுகளாக முகாம்களில் இருக்கும் மக்கள் வீடுகளில் குடியேறினால் சந்தோஷப்படலாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அதில் மாற்றம்வராமல் இருக்கிறதே. பிரதமர் போய் திட்டங்களைத் தொடங்கிவைப்பதோ, அஞ்சல் சேவையோ எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

அமெரிக்கச் சோளத்தை இந்தியா வாங்காதது ஏன் என அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கேள்வியெழுப்பியுள்ளாரே?

ஒரு பொருளை இறக்குமதி செய்வதற்கு இரண்டு விஷயங்கள் அடிப்படையானவை. ஒன்று தேவை, இரண்டாவது விலை மலிவு. இதில் ஏதாவது ஒன்று இல்லையென்றால் என்ன செய்யமுடியும்? அமெரிக்காவில் விளைகிறது என்பதற்காக இந்தியர்கள் சோளம் தின்னமுடியுமா?

வண்ணை கணேசன், கொளத்தூர்

உ.பி.யில் ஏ.டி.எம். அறையில் ஓய் வெடுத்த காளை செய்தியாகியுள்ளதே?

பிற மாநிலங்களிலும்தான்   அதிக ஆள்புழக்கமில்லாத ஏ.டி. எம்.களில் நாய்கள் போய் அமர்ந்துகொள்கின்றன. நிழலுக்கு நிழலும் ஆச்சு. சில இடங்களில் ஏ.சி.யும் போடுகிறார்கள். கொஞ்ச நேரம் புழுக்க மில்லாமல் ஓய்வெடுக்க லாம்தானே!

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

நடிகர் விஜய்யை கைதுசெய்யவேண்டு மென்ற ஓவியாவை, விஜய்யின் ரசிகர்கள் திட்டித் தீர்த்துள்ளனரே?

அதுதானே, ஒரு காலத்தில் ஓவியா ஆர்மி என ஒன்று இருந்ததே. அவர்கள் விஜய் ரசிகர்களுக்கு எதிராக படையெடுத்துக் கிளம்பவில்லையா என்ன!

mavali1

ச.சரவணன், அசோக் நகர்

சமீபத்தில் யாருடைய மரணச் செய்தி மாவலியைப் பாதித்தது?

ஜேன் குடால். இங்கிலாந்தைச் சேர்ந்த விலங் கியல் நிபுணர். சிம்பன்சி பற்றிய ஆய்வுகளுக்குப் பெயர் பெற்றவர். நீண்டகாலம் தான்சானியாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் சிம்பன்சிகளுடன் இவர் மேற்கொண்ட ஆய்வு, மனிதனுக்கும் விலங்குகளுக்கு மான உறவு குறித்த தெளிவை ஏற்படுத்தியது. சிம்பன்சிகள் கருவிகளைப் பயன்படுத்தக்கூடியவை. மனிதனைப் போன்றே சிம்பன்சிகளும் சிக்கலான சமூக அமைப்பை, உணர்வுகளைக் கொண்டவை என நிரூபித்தவர். முக்கியமாக, சிம்பன்சிகள் ஜேனைக் கண்டதும் காட்டும் நெருக்கமும் பாசமும்மிக்க புகைப்படங்கள் பலரையும் ஈர்த்தவை.