ப.மோகன், அயனாவரம்
நிதின் கட்கரியை துபாய்க்கு அனுப்பும்படி துபாய் இளவரசர் மோடியைக் கேட்டாராமே?
கரகாட்டாக்காரன் படத்தில் கவுண்டமணி, கோவை சரளாவைப் பார்த்து, “"என்னை ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக… அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாங்கோ,… என்ன கலர் கலரா ரீல் சுத்துற'ன்’னு கேட்பது எனக்கு ஞாபகம் வருகிறது. உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது?
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு செலவை ஏற்க பா.ஜ.க. மறுத்துவிட்டதாமே..?
இதில் இரு விஷயம் இருக்கிறது. ஒரு முன்னாள் முதல்வர் குடும்பம் இறுதிச் சடங்குக்குக்கூடவா கட்சியை எதிர்பார்த்திருக்கிறது என்பது. மற்றது, காசிருந்தாலும், ஒரு முன்னாள் முதல்வருக்கான கௌரவமாக செலவுகளை கட்சி செய்யவேண்டும் என குடும்பத்தார் எதிர்பார்ப்பது. இந்தியாவின் பணக்கார கட்சி பா.ஜ.க. செலவைப் பார்க்காமல் செய்திருக்கலாம்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
உலகப் பொருளாதார ஆய்வுக்கூட்டத்தில் ட்ரம்புக்கு எதிராக சுந்தர்பிச்சை பேசியது பற்றி?
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான சமீபத்திய உரசல்களையடுத்து, ஏதோ ஒரு சக்தி, அமெரிக்க பிரபலங்களை வைத்து இந்தியாவின் அருமையென்ன, பெருமையென்ன என அவர்களின் குரல்கள், போட்டோவை மட்டும் வைத்து விதவிதமாக வீடியோ போட்டுக்கொண்டிருக்கிறது. அதே சக்திதான் ட்ரம்புக்கு எதிராக சுந்தர் பிச்சை பேசியதாக செய்திகளையும் பரப்பிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதாக வாட்ஸ்-அப்பில் கம்பு சுற்றிக்கொண்டிருந்தவர்கள், இப்போது யூடியூப், முகநூல்களில் இதுபோல போலிக்கதைகளைப் பரப்பி உற்சாகமடைந்து கொண்டிருக்கின்றனர். உண்மையிலே அப்படி சுந்தர் பிச்சை பேசியிருந்தால் இந்தியாவின் அத்தனை பத்திரிகைகளிலும் அது தலைப்புச் செய்தியாக வந்திருக்கும். அப்படி வராததிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
ஒரே நாய் இரண்டுமுறை கடித்தால் அதற்கு ஆயுள் சிறை என்று வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டுள்ளதே உ.பி அரசு..?
ஆமாம், நாய்க்கு ஆயுள், இரட்டை ஆயுள், சாகும்வரை சிறை. சிந்தனை போகிற லட்சணத்தைப் பாருங்கள்!
ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
ஐபோன் வாங்குவதற்கு மக்களிடம் இத்தனை ஆர்வம் ஏன்?
எல்லாம் ட்ரெண்ட் பைத்தியம்தான். ஆப்பிள்போன் குறைந்தது 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ஆகிறது. வருடத்துக்கு ஒரு புதிய மாடல் வந்துவிடுகிறது. பழைய போனை விற்றால் பாதி விலைதான் போகும். புதிய போனுக்கு ஒன்றரை லட்சம் வேண்டும். ஆக, வருடத்துக்கு ஒரு லட்சம் தண்டம் அழ வசதியுள்ளவர்களின் ட்ரெண்ட். நமக்கு செட்டாகாது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
பீகார் தேர்தலில் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என அவிமுக்தேஷ் வரானந்த் சரஸ்வதி கூறியுள்ளாரே?
ஒரு சங்கராச்சாரியாரின் கவலை ஆன்மிகத் தைக் குறித்தும் தனது மடத்தைக் குறித்ததாகவும் இருக்கவேண்டும். அதைத்தாண்டி "பசு பாதுகாப்பு, சனாதன தர்மத்துக்கு ஆதரவாக அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன்' என்கிறார். இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே பீகார் மாநில மக்கள்தான், வேலை தேடி அதிகளவில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களது சிரமம் குறித்து அவருக்குத் துளியும் அக்கறையில்லை. பசுவைக் குறித்துக் கவலைப்படுகிறார். அதற்குத்தான் பா.ஜ.க. இருக்கிறதே, இவர் புதிதாக என்ன செய்யப்போகிறார்?
த.சத்தியநாராயணன், அயன்புரம்
நிதி, நீதி என்ன வித்தியாசம்?
தமிழைப் பொறுத்தவரை என்றால் ஒன்றின் முதலெழுத்து குறில். மற்றதன் முதலெழுத்து நெடில். பொதுவாகச் சொன்னால் நிதிக்கும்- நீதிக்கும் வெகுதூரம். பல சமயங்களில் நிதி, நீதியை விலைபேச முயற்சிக்கும். நீதியோ நிதிக்கு மயங்கிவிடாது. இரண்டும் எண்ணெயும் தண்ணீரும்போல. ஒன்றுசேராத சங்கதிகள்.
வாசுதேவன், பெங்களூரு
தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நீரஜ் சோப்ரா ஏமாற்றி விட்டாரே?
9 தங்கப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற ஒரு வீரரை எளிதாக ஏமாற்றிவிட்டதாகச் சொல்கிறீர்கள். இந்தியா சார்பாக போட்டியில் கலந்து கொள்ளும்போதெல்லாம் நாம் பதக்கம் வெல்ல வேண்டு மென்றுதான் எதிர்பார்ப் போம். அதற் காக ஒவ்வொரு முறையும் வீரர்கள் பதக்கம் வெல்வது சாத்தியம் தானா?