மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
என் கதை இன்னும் முடியவில்லை என்கிறாரே பிரசாந்த் கிஷோர்?
அவருக்கு இன்னும் விவரம் போதவில்லை. அரசியல்வாதிகளுடன் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும். மீண்டும் நான் முயற்சிப்பேன் என நேரடியாகச் சொல்லவேண்டும். அதைவிட்டுட்டு கதை முடியவில்லை எனச் சொன்னால், அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு வேறெதாவது செய்துவிடப்போகிறார்கள்.
ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
த.வெ.க. தனித்து நின்றாலும் அ.தி.மு.க.வுக்குச் சாதகமே என கே.சி.பழனிச்சாமி போன்றவர்கள் கூறுகிறார்களே?
தர்க்கம் என்பது இரு பக்கமும் கூருள்ள கத்தி. இந்தப் பக்கமும் வெட்டும். அந்தப் பக்கமும் வெட்டும். த.வெ.க. தனித்துநின்றால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு என்றும் வாதிடலாம். தி.மு.க.வுக்கு பாதிப்பு என்றும் வாதிடலாம். த.வெ.க.வுக்கே பாதிப்பு என்றுகூட வாதிடலாம். கே.சி. பழனிச்சாமி தன் கட்சிக்கு ஆதரவாக வாதிடுகிறார்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
உ.பி.யில் ரூ 31 லட்சம் வரதட்சணையை மறுத்து ரூ.1 வாங்கியிருக்கிறாரே மணமகன்?
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர், நக்வா கிராமத்தைச் சேர்ந்த அவதேஷ், அதிதி சிங் திருமணத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. மணப்பெண்ணின் தந்தை கொரோனாவில் இறந்த நிலையில், மணப்பெண் வீட்டார் 10 லட்ச ரூபாய் ரொக்கமும், 21 லட்ச ரூபாய் மதிப்பிலான நகையையும் தாம்பூலத் தட்டில் வைத்துக்கொடுக்க, அதை மறுத்து சம்பிரதாயத்துக்காக 1 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு திருமணம் செய்திருக்கிறார். நடந்திருப்பது உத்தரப்பிரதேசத்தில் என்பது இன்னும் ஆச்சரியமான ஒன்று.
எச்.மோகன், மன்னார்குடி
காந்தி, இந்திரா, சஞ்சய்காந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய், கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இவர்களில் யார் மரணம் உங்களை நிலைகுலைய வைத்தது?
முதல் நால்வரும் அசாதாரண முறையில் இறந்தவர்கள், அடுத்த நால்வரும் இயற்கையாய், நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள். பின்வரிசையில் வரும் நால்வரும் கிட்டத்தட்ட அறுபது வயதுக்குமேல் வாழ்ந்தவர்கள். முதல் நால்வரில் சஞ்சய், ராஜீவ்காந்தி இருவருமே இளவயதில் உயிரிழந்தவர்கள். அசாதாரணமாக இறந்த அந்த நால்வரின் மரணமுமே தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தவகையில் சுதந்திர இந்தியாவில் தேசத் தந்தையைக் கொன்று தீவிரவாதத்துக்கு பிள்ளையார்சுழி போட்ட இந்துத்துவமே நிலைகுலைவை ஏற்படுத்தியதில் முதன்மையானது.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
இம்ரான்கான் சிறையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து?
ராவல்பிண்டியின் அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இம்ரான்கான். நவம்பர் கடைசி முதலே பாகிஸ்தானில் அப்படியொரு செய்தி பரவத் தொடங்கியது. இம்ரான்கானின் குடும்பத்தினர் சிறைக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், அவரைப் பார்க்க வரும் சகோதரிகள் சிறைக்குள் வந்தபோது தாக்கப்பட்டதாகவும், அவர் உயிருடன் இருக்கிறாரா என சந்தேகமாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். வேறுவழியின்றி இம்ரானைச் சந்திக்க சகோதரிகளை அனுமதித்தது சிறை நிர்வாகம். இப்போது ராணுவம் தன்னைத் துன்புறுத்துவதாக இம்ரானும் அவர் குடும்பத்தினரும் புகார் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.
கே.எம்.ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
ராஜதந்திரம் என்றால் என்ன?
ஒரு நாட்டோடு போர் மேற்கொள்ளப்போகும்போது வீரர்கள் இரு மனதாக இருக்கிறார்கள் எனில் மன்னன் ஒரு யுக்தியை மேற்கொள்வான். எதிரி நாட்டின் எல்லையில் நுழையும்போது, தன் நாட்டுக்குத் திரும்பும் பாலங்களைத் தகர்த்துவிட்டு, நாம் வெற்றிபெற்றால் மட்டுமே நாடு திரும்பமுடியும் என வீரர்களிடம் சொல்லிவிடுவான். மனோரீதியான இந்த யுக்தி வீரர்கள் உக்கிரமாக போரிட்டு வெற்றிபெற வழிவகுக்கும். பொதுவாக ஒரு அரசோ, நாடோ போரிலோ, நிர்வாகத்திலோ மேற் கொள்ளும் அறிவுப்பூர்வமான நடவடிக்கையே ராஜதந்திரம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/mavali-2025-12-08-16-57-11.jpg)