மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

அந்த முகமும் அந்த உதடுகளும் அது அசையும்விதமும் இயந்திரத் துப்பாக்கிபோல் உள்ளது என்ற ட்ரம்ப் பேச்சு குறித்து...?

mavali1

Advertisment

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலா ளர் கரோலின் லெவிட். 27 வயதே ஆகும் கரோலின், "பதவியேற்ற ஆறே மாதங்களில் போர் ஒன்றினை மத்தியஸ்தம் செய்து சமாதானம் செய்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்' என்று கூற, அடுத்துப் பேச வரும் போதுதான் இந்த சில்லறைத்தனத்தைச் செய்துள் ளார் ட்ரம்ப். அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்பின் கண்ணை உறுத்த ஆரம்பித்துள்ளது. அதற்கேற்றாற் போல் பேசிய வெள்ளை அதிகாரியைச் சந்தோஷப் படுத்தப் பேசினாரோ, இல்லை இயற்கையிலே அமைந்த சபல புத்தியால் பேசினாரோ தெரியவில்லை. ஏற்கெனவே மோனிகா லெவின்ஸ்கியிடம் சிக்கி, பதவிநீக்கம் வரை போனார் பில் கிளிண்டன். இதுபோல நான்கைந்து சர்ச்சை மேட்டர்கள் சிக்கி னால், கரோலின் லெவிட் ஓய்வுபெறும் காலத்தில் ஒரு புத்தகம் போட்டு பில்லியன்கணக்கிலான டாலர்களை ராயல்டியாகக் குவித்துவிடுவார்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி 

தேர்தல் கமிஷன் பற்றி குறைசொன்னதற்காக ராகுலைக் கண்டிக்கிறோம் என தேர்தல் கமிஷன் கூறி இருப்பது பற்றி?

Advertisment

கண்டிக்க மட்டுமா செய்வார்கள், உரிய இடத்திலிருந்து உத்தரவு வந்தால் வழக்குக்கூட தொடுப்பார்கள். ஆனால் பல தொகுதிகளில் வாக் காளர்களின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் வாக்குப் பதிவானது, வாக்குச்சாவடியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கமறுப்பது, வாக்காளர்கள் எண்ணிக்கை மில்லியன்கணக்கில் விடுபடுவதற்கு மட்டும்தான் உரிய பதிலளிக்கமாட்டார்கள்.

அ.யாழினிபர்வதம், சென்னை-78 

என் தலைமையில் பலமான கூட்டணி ஏற்படும் என்று சீமான் சொல்கிறாரே? 

மேடையைவிட்டு இறங்கியதும், தான் பேசியதை அவரே மறந்துவிடுவார். நீங்கள் பொருட்படுத்தி கேள்விகேட்கிறீர்கள். தேர்தல், இதோ அருகில்தானே இருக்கிறது. அவர் அமைக்கிற பலமான கூட்டணியைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

க.வளர்மதி, சேலம்

தலைநகர் டெல்லியிலேயே தமிழக எம்.பி. சுதாவிடமிருந்து செயினை அறுத்திருக்கிறார்களே?

டெல்லி போலீஸுக்கு அவமானம்தான். பா.ஜ.க. வுக்கு முன்பு பழிசுமத்த ஆம் ஆத்மி கட்சியிருந்தது. இப்போது பா.ஜ.க. ஆட்சி என்பதால் இந்த அவமானம் பா.ஜ.க.வுக்கும் சேர்த்ததுதான். மூன்றாவதாக, தங்கம் விலை உயருகிற வேகத்துக்கு திருடர்கள் எம்.பி.யாவது, எம்.எல்.ஏ.யாவது என துணிந்து களமிறங்கிவிடுகிறார்கள்போல!

பி. நந்தகுமார், இராமநாதபுரம்

இந்திய எல்லையில் 2000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்திருப்பதாக ராகுல் பேசிய விவகாரத்தை, உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறதே?

ஆட்சிக்கு வருவதற்கு முன் பா.ஜ.க.வும் இந்திய- சீன எல்லைப் பிரச்சனையையும், நேரு பிரதமராக இருந்தபோது குறிப்பிட்ட காலகட்டத்தில் விட்டுத்தரப் பட்ட நிலப்பகுதியையும் வாய்சலிக்கப் பேசிக்கொண்டி ருந்தது. சீனா, இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறு வதும், கட்டடங்கள் கட்டுவதும், எல்லையை ஒட்டிய பகுதிகளில் ரன்வே, பதுங்கு குழிகள் அமைப்பதும், சாலை போடுவதும், பாலங்கள் கட்டுவதும் என நூற்றுக்கணக்கான செய்திகள் புகைப்படங்களுடன் உள்ளன. ஆக்கிரமிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தை, குறிப்பிட்ட தேதிக்கு முந்தைய, பிந்தைய செயற்கைக்கோள் புகைப்படத்தைப் பார்த்தாலே எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிடும். தவிரவும், யார் உண்மையான இந்தியன் என பா.ஜ.க. பாணியில் உச்சநீதிமன்றமும் வரையறை செய்யக் கிளம்பி யிருப்பதுதான் வேதனை!

கே.சரவணன், திண்டிவனம்

பேய்களை நம்புவதுண்டா மாவலி...?

பேய்களைப் பார்க்காவிட்டாலும் பேய் பிடித்திருப்பவர்களை பார்த்திருக்கவே செய்கிறேன். பணப் பேய், அதிகாரப் பேய், ஜாதியப் பேய்.... இவற்றின் பீடிப்பால் பாதிக்கப்படாத நபர்கள் அபூர்வமென்பதால் அத்தகைய பேய் பிடிக்காத நபர்களைப் பார்ப்பதுதான் அபூர்வ மாக இருக்கிறது.

க.அருச்சுனன், செங்கல்பட்டு  

மத்திய அரசுத் திட்டங்களில் பிரதமர் என்றே வருகிறது. தமிழக அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயர் விளம்பரம் ஏற்புடையதா? 

ஸ்டாலினை விடுங்கள். மத்திய அரசுத் திட்டங்கள் அனைத்திலும் பிரதமர் முகத்தைத் தவிர வேறெந்த முகத்தையாவது பார்த்திருக்கிறீர்களா…? புதிய ரயில் அறிமுகம், புதிய சாலை திட்டங்கள் தொடக்கவிழாவுக்குக்கூட ரயில்வே அமைச்சர், சாலைப் போக்குவரத்துத்து துறை அமைச்சருக்குப் பதில் மோடிதான் தொடங்கிவைக்கிறார். கடந்த பதினொரு ஆண்டுகளில் மோடியின் முகம் விளம்பரப்படுத்தப்பட்ட அளவுக்கு, இந்தியாவின் எந்த பிரதமரின் முகமும் விளம்பரப்படுத்தப்பட்டதில்லை.