ப.அதியமான், குடியாத்தம்
காந்தி வென்றாரா...… தோற்றாரா?
அளவிடப்பட வேண்டியது காந்தியின் வெற்றி -தோல்வியல்ல. சூரியனே மறையாத சாம்ராஜ்யம் எனப்படும் ஆங்கிலேய அரசே, அவரது வெற்றியை ஒப்புக்கொண்டுதானே இந்தியாவை காலிசெய்து சென்றது. ஆகவே காந்தி வென்றுவிட்டார். அவரது அகிம்சையையும், வாழ்க்கை செய்திகளையும் பத்திரமாக பாதுகாத்துக்கொள்வதில் இந்தியர்களாக நாம்தான் தோற்றுப்போனோம்.
வைர.பாலா, மன்னார்குடி
இந்திய நகைக்கடைகளில் தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
நீங்கள் பழைய காலத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் தங்கம், வெள்ளி, பிளாட்டின நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம். இந்த முத்திரை, நீங்கள் வாங்கும் நகையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தோடு இதர உலோகங்கள் எவ்வளவு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை துல்லியமாக அறிவித்துவிடும். 2000 முதலே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒருவேளை நீங்கள் வாங்கும் நகையில் இந்த முத்திரை இல்லை யென்றால், அந்தக் கடை குறித்து புகார் செய்யலாம்.
மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
அம்பானி, அதானிகள் நாட்டின் பொருளா தாரத்தைச் சுரண்டுகிறார்கள் என்று கூறுகிறாரே மோகன் பகவத்...?
அம்பானி, அதானிகளுக்கு சலுகைகளை அள்ளிக்கொடுப்பது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அவர் களைப் பற்றி புகார் கூறும். புகாரெல்லாம் சும்மா பேருக்குத்தான். ஜனங்களுக்கு அம்பானி, அதா னிக்கு அளவுக்கு மீறி சலுகைகள் தரப்படுகிறதே, இவர்களைக் கேட்க ஆளே இல்லையா என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதென்பதற்காக பெயருக்கு மோகன் பகவத் கேட்பார். வரம்பு மீறி சலுகை தந்தால் ஆர்.எஸ்.எஸ். தட்டிக்கேட்கும் என்ற எண்ணம் வருவதற்காக மட்டும்தான். மற்றபடி இந்த "டபுள் ‘ஏ'க்கள் எப்பவும் பா.ஜ.க.வின் செல்லப்பிள்ளைதான்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
"ஹிந்து மதத்தில் சாதிய வேறுபாடுகள் இல்லை' என்கிறாரே பிரதமர் மோடி?
ஆமாம், சாதிய வேறுபாடுகள் இல்லை. வருண வேறுபாடுகள்தான் உண்டு என்பார்கள். இங்கிருக் கும் சாதிகளெல்லாம் ஐரோப்பியாவிலிருந்து இறக்குமதியானவை. ஆங்கிலேயர் வெளிநாட்டுக்குப் போகும்போது, ரொம்ப சுமையாக இருக்கிறதென்று இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.
க.அருச்சுனன், செங்கல்பட்டு
விஜய், அறிஞர் அண்ணாவின் மேடைப் பேச்சுகளை கேட்டோ, படித்தோ இருப்பாரா?
சமூக ஊடகங்களில் கடந்த நான்கு நாட்க ளாக அவர்மீதும் அவரது கட்சி மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே கேட்கவோ, படிக்கவோ செய்திருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதில் அவர் எங்கே போய் அண்ணாவின் மேடைப் பேச்சுக்களை கேட்கவோ, படிக்கவோ செய்வது!
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில் உத்தரப்பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளதாமே..?
கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, உள்கட்டுமானம் ஆகியவற்றில் வளராவிட்டால் குற்றங்கள், வறுமை, போஷாக்கின்மை, கர்ப்பகால மரணம், மூடநம்பிக்கை ஆகியவற்றில்தான் வளர்ச்சி அமையும். மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால் அது முகத்தின் மீதுதான் வந்து விழும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
பஞ்சாப் கவர்னருக்கு மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் உள்ளது, ஆனால் என்னைச் சந்திக்க நேரமில்லை என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விரக்தியாகக் கூறியிருக்கிறாரே?
இதற்கெல்லாம் விரக்தியடைந்தால் எப்படி? திரும்பத் திரும்ப சந்திக்க நேரம் கேட்டு, மக்களிட மும் அந்தச் செய்தியைக் கொண்டுசென்றால், தானாக சந்திக்க நேரம் கொடுத்துவிட்டுப் போகிறார் ஆளுநர்.
கே.எம்.ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
"எதுவும் இப்போதைக்குச் சொல்லமுடியாது... சஸ்பென்ஸ்' என்கிறாரே செங்கோட்டையன்?
தெரிந்தால்தானே அவரும் சொல்வார். அவ ருக்கே விஷயம் சஸ்பென்ஸ்தான் எனும்போது அவர் என்ன சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி
கரூர் விவகாரத்தில் வதந்தி பரப்பி கைதானவர்களில் சிவனேசன் ஈஸ்வரன் என்பவர் எம்.டெக், என்.ஐ.டி., ஐ.ஐ.எம். என பல பட்டங்கள் வாங்கியிருக்கிறாரே?
பட்டப் படிப்புகள் வேறு, பகுத்தறிவு வேறு. இரண்டும் எதிர்த் திசையில்கூட செயல்படலாம். காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி பட்டம்பெற்று சட்டப் படிப்பும் முடித்தவர். தேவதாசி ஒழிப்புமுறை குறித்து சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் விவாதம் வந்தபோது, அவர் தேவதாசிக்கு முறைக்கு ஆதரவாக வாதிட்டார் என்பதே வரலாறு.