அ.பன்னீர்செல்வம், ஸ்ரீபெரும்புதூர்

இனி ஒவ்வொரு செல்லிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமாமே?

இதுநாள் வரை இந்த செயலியை உங்கள் செல்போனில் நிறுவுங்கள் என குறுந்தகவல் மூலம் வலியுறுத்தி வந்தார்கள். பெரும்பாலோர் பொருட்படுத்தவில்லையென்றதும், இந்தியாவுக்குள் வரும் செல்போன்களில் இந்த செயலியை நிறுவுவது கட்டாயம் என செல்போன் நிறுவனங்களை நெருக்கு கிறார்கள். ""சஞ்சார் சாத்தி என்பது ஒரு உளவு பார்க்கும் செயலி, இது முற்றிலும் அபத்தமானது. குடிமக்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு. அரசாங்கம் அனைத்தையும் கண்காணிக்காமல், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் செய்திகளை அனுப்ப அனைவருக்கும் தனியுரிமை இருக்க வேண்டும். இது வெறும் தொலைபேசியில் மட்டும் உளவுபார்ப்பது அல்ல. அவர்கள் இந்த நாட்டை எல்லாவிதத்திலும் சர்வாதிகாரமாக மாற்றுகிறார்கள்'' என அரசின் முடிவை விமர்சித்திருக்கிறார் பிரியங்கா காந்தி. விமர்சனங்களைப் பார்த்துவிட்டு தேவையெனில் இந்த செயலியை நீக்கிக்கொள்ளலாம் என பின்வாங்கியிருக்கிறது அரசு.

Advertisment

எம்.ஸ்ரீதேவி, புதுச்சேரி

சித்தராமையா- சிவகுமார் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்களா?

அவர்கள் முடிவுக்கு வருவது இருக்கட்டும். ஆளுக்கு இரண்டரை வருடம் என்று தலைமையின் முன்பாக பேசித்தானே அமரவைத்திருப்பார்கள். ""காங்கிரஸ் மேலிடம் எப்போது சொல்கிறதோ அப்பொழுது டி.கே.சிவக்குமார் முதல்வர் பதவியை ஏற்பார்'' என்கிறார் சித்தராமையா. வெறும் வாய்ப்பந்தல் போடாமல் செயலிலும் காட்டினால் காங்கிரஸுக்கு நல்லது.

Advertisment

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.

நேபாளம் புதிய நூறு ரூபாய் நோட்டுகளில் இந்திய பகுதிகளை இணைத்து அச்சடித்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?

ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் நேபாளம், இன் னொரு பக்கம் பாகிஸ்தான். இந்தியான்னா அவ்வளவு இளக்காரமா போச்சு. பதிலுக்கு இந்திய ரூபாய் நோட்டில் இந்தியாவோடு சேர்த்து முழு நேபாளத் தையும், சீனா, பாகிஸ்தானில் நமக்கு வேண்டிய பகுதிகளையும் சேர்த்து அச்சடிக்க வேண்டியதுதான்.

Advertisment

mavali1

சிவா, கல்லிடைக்குறிச்சி. 

கவர்னர் மாளிகை பெயரை இனி லோக் பவன் (மக்கள் மாளிகை) என்று பெயர் மாற்றுவதால் என்ன நடக்கப்போகிறது?

எல்லா பத்திரிகைகளிலும் செய்தி வந்த தல்லவா! வேறென்ன நடக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். குடும்பக் கஷ்டம் ஏதாவது வந்தால் ‘மக்கள் மாளிகையை’ வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முயற்சித்துப் பாருங்கள்.

வே.செந்தில்வேலவன், ராஜபாளையம்

ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத் தலைவராக பொறுப்பு ஏற்கிறாராமே ஞானேஷ்குமார்?

அது சரி, ஒருவர் கொடுத்துக்கொண்டே இருந் தால் பெறுபவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். பதிலுக்கு பலனடைந்தவர் ஏதாவது கொடுக்க வேண்டுமல்லவா! ஒரு சர்வதேச பதவியில் அமர்த்தி கைமாறு செய்திருக்கிறார்கள் பலனடைந்தவர்கள்.

சி.அப்துல்லா, மேட்டுப்பாளையம்

""துரோகத்திற்கான நோபல் பரிசுபெற தகுதியுடையவர் எடப்பாடி பழனிசாமி'' என டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்திருக்கிறாரே?

இருக்கட்டும் நோபலோ, சாகித்ய அகாடமியோ அவர் விரும்பிய பரிசை எடப்பாடிக்குக் கொடுக்கட் டும். ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு தினகரன் செய்த துரோகத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்பதையும் அவரே சிபாரிசு செய்தால் நல்லது.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்  

பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரித்த நெய்யில் கலப்படம் இருப்பதையறிந்து அந்நிறுவனத்திற்கு ரூ.1.40 லட்சம் அபராதமாக விதித்துள்ளதே உத்தரகாண்ட் நீதிமன்றம்?

பிஸ்கட், அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள், நெய் என எத்தனையோ பதஞ்சலி நிறுவனப் பொருட்களில் கலப்படம், தரக்குறைவு என பிரச்சனைகள் வந்துவிட்டது. அபராதம், எச்சரிக்கை யுடன் சாதாரணமாக விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது வெளிநாட்டில் பதஞ்சலியின் பொருட்களால் பேராபத்து வரப்போகிறது. அப்படி இந்தியாவின் கௌரவம் போகையில் பதஞ்சலிக்கு ஆப்பைச் சொருகுவார்கள்.

ப.திருமலை, ஈரோடு

இந்த நிதியாண்டில் ஆசிய கரன்ஸிகளிலே இந்தியக் கரன்ஸியின் செயல்பாடுதான் மோசம் என்கிறார்களே?

ஐ.எம்.எஃப்.பின் பார்வையின்படி இந்த நிதியாண்டில் மற்ற எல்லா ஆசியக் கரன்ஸிகளைவிடவும் பலவீனமாக இருக்கிறது ரூபாய். அதாவது ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது. டாலர், ஆசிய கரன்ஸி களின் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் திரும்பப்பெறப்படு கின்றன. அமெரிக்க டேரிஃப்பால், இந்தியாவின் ஏற்றுமதி சரிந் திருக்கிறது. இலங்கை, பங்களா தேஷ் கரன்ஸிகளை ஒப்பிட ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிற தென்றால், எல்லாம் நம் நிதியமைச்சரின் ஆசி.