வாசுதேவன், பெங்களூரு

தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கும் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளாரே?

அ.தி.மு.க.விலும் சேர்க்கவில்லை... அக்கட்சியின் கூட்டணியிலும் சேர்க்கவில்லை... பிறகு அ.தி.மு.க. ஆட்சியமைக்கும், பா.ஜ.க. துணைமுதல்வர் பதவியில் அமரும் என்றா சொல்வார் ஓ.பி.எஸ். எல்லோருக்கும் அவரவர் அகங்காரம்தானே பெரிது. தன்னை நிராகரிக்கும் கட்சி தோல்வியைச் சந்திக்கும் என்று சுற்றிவளைத்துச் சொல்வதுதான் அது.

Advertisment

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் இணைந்துள்ளோம் என ஓ.பி.எஸ்., செங்கோட் டையன், டி.டி.வி. தினகரன் இணைந்து கூட்டாக பேட்டியளித்துள்ளனரே...? 

Advertisment

எடப்பாடியிடம் கேளுங்கள். ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், டி.டி.வி. தினகரன் மூவரும்தான் துரோகிகள் என்பார். ஒட்டுமொத்தமாக இவர்கள் நால்வரும் துரோகத்தை வீழ்த்துகிறார்களோ... இல்லையோ... அ.தி.மு.க.வை வீழ்த்திவிடுவார்கள்.

சிவா, கல்லிடைக்குறிச்சி

வாக்காளர் திருத்தப் பட்டியல் மிகப்பெரிய மோசடி என பினராயி விஜயன் கூறியிருப்பது பற்றி?

Advertisment

ஏற்கெனவே தேர்தலுக்கு நெருக்கத் தில்தான் பீகாரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தத்தை மேற்கொண்டார்கள். இப்போது தமிழகம், கேரளத்துக்கும் தேர்தலுக்கு நெருக்கமாகவே இந்தப் பணிகள் நடக்கிறது. லட்சக்கணக்கான பேரின் விவரங்களை பரிசோதித்து நீக்கவும் சேர்க்கவும் வேண்டியதிருக்கிறது என்றால் ஓராண்டுக்கு முன்பாகவே இந்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கலாம் அல்லவா! அங்கேதான் சந்தேகம் எழுகிறது.

வைரபாலா, மன்னார்குடி  

நோட்டாவுக்கு வாக்களிப் பவர்களைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?

வாக்குக் கோரி நின்ற எந்தக் கட்சியின் மீதும் மக்களாகிய எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று சொல்வது அது. கடந்த முறை ஒரு கட்சி ஜெயித்தது, இந்த முறை இன்னொரு கட்சி ஜெயித்தது என்பதைத் தவிர தேர்தல் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. மக்கள் நம்புகின்ற ஒரு வேட்பாளரை நிறுத்தக்கூட கட்சி களுக்குத் துப்பில்லை என காறித்துப்பு கின்ற செயல்தான் அது.

கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி

அடுத்த சிம்பொனியை எழுதுகிறேன் என்று இளையராஜா அறிவித்துள்ளாரே?

எழுதுவதற்குத் தெம்பும் இசைகுறித்த அறிவும் இருக்கிறது அவரிடம். அதனால் அடுத்த சிம்பொனியை எழுதக் கிளம்பிவிட்டார். உத்வேகத்துடன் உழைப்பவர்களுக்கு வயதென்பது வெறும் எண் என நிரூபிக்கிறார் இளையராஜா. இளைய தலைமுறை அவரிடமிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

வரி செலுத்துவோரிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும் என்கிறாரே நிர்மலா சீதாராமன்?

அது அவரது மனதின் குரல் தானாம். பக்கத்தில் யாருமில்லை என்ற நினைப்பில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருக்கும்             போது யாரோ கேட்டுப் பதிவு செய்துவிட்டார்         களாம்.

வண்ணை கணேசன், கொளத்தூர் 

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு 3 ஆண்டுகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டிருக்கிறேதே?

அவர்கள் கேட்பதோ வேலைக்கு உத்தரவாதம். அரசு தருவதோ உணவுக்கு உத்தரவாதம். வேலைக்கு உத்தரவாதம் வந்தால் உணவுப் பிரச்சனை தன்னால் தீர்ந்துவிடப்போகிறது.

சூர்யகாந்த், திருத்தணி

தமிழகத்தில் பீகாரிகள் துன்புறுத்தப்படுவதாக பீகார் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்வதால் என்ன பயன்? 

அது சுற்றிவளைத்து மூக்கைத் தொடு வதுதான். லாலு கட்சியுடன் கூட்டணியில் இருப்பது காங்கிரஸ். அதே காங்கிரஸ்தான் தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறது. "இந்தக் கொடுமையை காங்கிரஸ் தட்டிக் கேட்கிறதா பாருங்கள். அதனால் லாலு -காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுப் போடாதீர்கள்' என்பதுதான் மோடியின் செய்தி. மத்தியில் உங்கள் கட்சிதானே ஆட்சியிலிருக்கிறது. நீங்கள் என்ன பிடுங்கிக்கொண்டிருந்தீர்கள் என பிரதமரின் பிரச்சாரத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்.

mavali1

என். மாணிக்கம், சேலம்

கவர்ச்சிக்கென்றே தனி நடிகைகளைப் பயன்படுத்திய பொற்காலம் மீண்டும் வருமா?

அதற்கெதுக்கு பொற்காலம் வரவேண்டும். அனுராதா, டிஸ்கா சாந்தி, சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி பாடல்களை யூடியூபில் தேடினால் வரப்போகிறது. சலிக்கும் வரை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

பட்ஜெட் என்றதும் கூடுதல் சலுகைகளை மக்கள் எதிர்பார்ப்பது ஏன்?

காலையில் அடிக்கும் தந்தை மாலை வரும்போது தின்பண்டம் வாங்கிவருவதில்லையா! அதுபோலத்தான். பற்றாக்குறையைச் சரிசெய்ய வரிகளை விதித்து நெருக்கும் அரசாங்கம், ஆறுதலாக வரிச்சலுகை ஏதாவது தருமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.