நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.  


"மணிப்பூரில் புதிய அரசு அமைய நாங்கள் முயற்சி செய்துவருகிறோம்' என பைரன்சிங் கூறியிருப்பது பற்றி?


அப்போதும் அரசமைக்கத்தான் முயற்சி செய்கிறாரேயன்றி, அமைதி திரும்ப முயற்சி செய்யமாட்டேன் என்கிறார்.

Advertisment

மல்லிகா அன்பழகன், சென்னை-78 


பா.ஜ.க. தேசியத் தலைவரை நியமிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்?


எனக்கு, உனக்கு என அடிதடியாயிருக்கும். யாருக்கும் வலிக்காமல், யாரும் கட்சியை விட்டு ஓடிவிடாமல், சேதாரம் அதிகமில்லாமல் நியமனம் நடைபெற வேண்டுமல்லவா! அதற்குக் கொஞ்சம் நேரம் பிடிக்கத்தான் செய்யும். 

Advertisment

க.அருச்சுனன், செங்கல்பட்டு 


கர்நாடகா திறக்கும் உபரி நீர் கடலில் கலக்க வேண்டியதுதானா? ஏதாவது அணை கட்டியுள்ளார்களா?


ஏற்கெனவே கர்நாடகா அணை கட்டுவேன் எனச் சொல்ல, நாம் அதன் மென்னியைப் பிடித்துக்கொண்டு கட்டிருவியா பார்க்கலாம் என நாலைந்து வருடமாக மல்லுக்கட்டிக் கொண்டி ருக்கிறோம். காவிரி நீரை கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா என மூன்று மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என நாலு பேர் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். அதனால் நினைத்த மாத்திரத்தில் அணை கட்டிவிட முடியாது. வேண்டுமானால் சிறிய தடுப்பணைகள் கட்டலாம். தமிழகம் இருக்கிற அணைகளைப் பேணி, அதன் ஷட்டர்களைப் பழுதின்றிப் பராமரித்தாலே தேவையான நீர் கிடைத்துவிடும். மழையாகப் பொழிந்து, காவிரியில் பாய்ந்துவரும் அத்தனை நீரையும் தேக்கிவிட யாராலும் முடியாது. அது அவசியமும் இல்லை.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.


பீகாரில் "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' என்ற பெயரில் வாக்காளர்களை நீக்க சதி நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியுள்ளது பற்றி?


ஏற்கெனவே மகாராஷ்டிராவில் சூடுபட்ட அனுபவம் இருக்கிறதல்லவா! அதனால்தான்        இப்போது எதிர்க்கட்சிகள் துடிக்கின்றன. 1 லட்சம் தன்னார்வலர்களைப் போட்டு பா.ஜ.க. வாக்காளர்களைச் சேர்த்துவருகிறது. மும்பையில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியதுபோல், பீகாரிலுள்ள இளைஞர் எண்ணிக்கையைவிட அதிகமான இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிடக்கூடாதென்ற பதற்றம்தான்.

சையத் அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 


அமெரிக்காவை விமர்சித்த ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியை நன்றியற்றவர் என விமர்சித்துள்ளாரே ட்ரம்ப்..?


எதற்கு நன்றியுடன் இருக்கவேண்டும், ஈரானின் அணுநிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசியதற்காகவா?, இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ஆயுதங்களும், தொழில்நுட்பங்களும் தந்து வருவதற்காகவா?, இத்தனை நாட்களாக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்து வருகிறதே அதற்காகவா? ட்ரம்பை, கமேனி என்னென்ன கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டிருக்கிறாரோ... யாருக்குத் தெரியும்!

பொன்விழி, அன்னூர்


எந்த சினிமா நடிகையாவது என் போன்ற சாதாரண ரசிகரை திருமணம் செய்திருக்கிறாரா?


பாருங்கள், நடிகை அன்னூரில் வந்து புளிக்குழம்பும், கேரட் பொரியலும் செய்துபோட்டுக் கொண்டிருப்பது சிரமமல்லவா! அதனால் சாதாரண ரசிகரிலிருந்து அசாதாரண தொழிலதிபராக மாறுங்கள், எந்த  நடிகையுடனாவது கல்யாண மேளம் கொட்டுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

mavali1

அ.ப. ஜெயபால்,சிதம்பரம்


லெனின், சேகு வேரா போன்றவர்கள் ஏன் இப்போது இல்லை?


வரலாறு ஜெராக்ஸ் கடை இல்லை. ஒரே நபர்களை மீண்டும் மீண்டும் உருவாக்குவதற்கு. லெனின், சேகுவேரா இல்லாமல் போகலாம். தேவையும் அவசியமும் வரும்போது அதே உத்வேகத்துடனும், லட்சிய மனப்பாங்குடனும் மனிதர்கள் பிறந்துவருவார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கான இதயம் நமக்கு வேண்டும். 

டி.நரசிம்மராஜ், மதுரை -20


வாரிசு அரசியல் பற்றிய பேச்சையே பா.ஜ.க. மறந்துவிட்டதே?


ஒரு வியாபாரி கடை போடுகிறார். அதில் எந்தப் பொருள் நன்கு விற்பனையாகிறதோ, அதைத்தான் அதிகமாக கொள்முதல் செய்வார். மழை சீசனில் குடை விற்பனையாகும்... வியாபாரியும் அதை அதிகமாக கடைபரப்புவார். கட்சிகளும் அப்படித்தான். அந்தந்த குற்றச்சாட்டுக்கு ஏற்ற சீசன் வரும் வரை காத்திருக்கும்.