நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
பீகார் தேர்தலில் பா.ஜ.க. இலவசங்களை அள்ளிவீசுகிறதே?
அதுதான் உச்சநீதிமன்றத்துக்குப் போய், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும் நீக்கவும் வழியில்லாமல் செய்துவிட்டார்களே. அதனால் பெண்கள் தொழில் செய்வதற்கு 50,000 ரூபாய். அதைத் திருப்பிக்கொடுக்கவும் தேவையில்லை என்று மாநில அரசின் பணத்தையெடுத்து வோட்டுக்கு நோட்டுக் கொடுத்து வாக்குகளை அள்ளத் திட்டமிடுகிறார்கள்.
என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
ரஷ்யாவுடனான போர் முடிந்தவுடன் பதவி விலகிவிடுவேன், மீண்டும் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று கூறுகிறாரே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..?
அதை இரண்டுவித மாகவும் பார்க்கலாம். எனக்கெல்லாம் அதி காரத்தில், பதவியில் ஆசையில்லை. இக் கட்டான சமயத்தில் நாட்டுக்குத் துணை நின்றதே போதுமானது என்ற செய்தியாகவும் பார்க்கலாம். ரஷ்யா போட்ட குண்டுகளில் நாடே சல்லடைக் கண்ணாய் துளைக் கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுத்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது, மலை யுச்சிக்கு பாறாங் கல்லை உருட்டிச்செல் லும் சிசிபஸின் வேலை! அதை எவ னாவது பார்த்துக் கொள்ளட்டும். என்னை விடுங்கள்! இரண்டும் இருக்கட்டும். உக்ரைனில் போர் முடிந்தாலல்லவா இதையெல்லாம் யோசிப்பதற்கு.
தே. மாதவராஜ், கோயம்பத்தூர்-45
முழுநேர அரசியல்வாதியான பிறகும் பத்திரிகை யாளர்களை சந்திக்க விஜய் மறுப்பதற்கு காரணம்?
எழுதிக் கொடுத்ததைப் பேசுவதற் குள்ளேயே வாய் குழறுகிறது. சொந்தமாகத் தடுமாற்றமில்லாமல் பேசவேண்டுமானால் நாட்டில் என்ன நடக்கிறது, மத்திய, மாநில அரசுகள் என்னென்ன செய்கிறது என்ற தெளிவுவேண்டும். நாட்டின் பிரதமராக ஆனவருக்கே, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் துணிச்சல் வரவில்லை. விஜய்யிடம் அதை எதிர்பார்ப்பது டூமச்தான்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரருடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்தது சரியா?
பாகிஸ்தானுடன் விளையாடவே மாட்டோம் என ஒட்டுமொத்தமாகப் புறக் கணிப்பது ஒருவகை. இதென்ன... விளையாடு வோம், கைகுலுக்கமாட்டோம், பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பை தந்தால் வாங்கமாட்டோம் என்று இரண்டும்கெட்டான் நிலைப்பாடாக இருக்கிறது. இரு தரப்பிலும் புண்ணை நோண்டிக்கொண்டே இருக் கிறார்களே தவிர, மருந்து தடவி ஆற வழிவகை செய்யமாட்டேன் என்கிறார்கள்.
ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
கடவுள் என்ன ஆனார் என நடிகர் விஜய் ஆண்டனி காஸாவின் நிலைமையைப் பார்த்து கண்கலங்கிக் கேட்கிறாரே?
கடவுளா பாலஸ்தீனத்தின் நடுவில் இஸ்ரேலை உருவாக்கினார்? கடவுளா பாலஸ்தீனமும் இஸ்ரேலும் மோதிக்கொள்ள பகையை மூட்டினார்? இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக கடத்தியது ஹமாஸா... கடவுளா? இந்தப் பூமியில் இதுவரை நடந்த எந்தப் போரிலும் கடவுள் இறங்கிவந்து மத்தியஸ்தம் செய்ததில்லை... போரை நிறுத்தியதில்லை... இரத்த ஆறுகளுக்கு அணை கட்டியதில்லை. ஏதாவது நடக்கவேண்டுமென் றால், உலக நாடுகள் ஒருங்கிணைந்து அமெரிக்காவையும், இஸ்ரேலையும் நெருக்கினால்தான் உண்டு. ஆனால் அதைச் செய்ய எந்த நாட்டுக்கும் தெம்பு இல்லை. பிறகு அவரும் நாமும் கண்கலங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
வண்ணை கணேசன், கொளத்தூர்
நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று யாரும் நினைப்பதில்லையே ஏன்?
எல்லோரும் நமக்கு மேலுள்ள, கோடிகளை வைத்திருக்கும் பணக்காரர்களை பார்த்து ஏக்கத்தில் இருப்பதால், நமக்குக் கீழும் மோசமான நிலையிலுள்ள கோடிக்கணக்கான வர்களைப் பார்த்து ஆறுதலடைவதில்லை.
எஸ். பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்
எம்.பி. தேர்தலில் தனித்து நின்றுவிட்டு எம்.எல்.ஏ. தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளதே?
அது எம்.பி. தேர்தல் தமிழகத்தில் ஜெயிக்காவிட்டால்கூட வடக்கில் ஜெயித்து சமாளித்துவிடலாம் என்ற துணிச்சலிலும், ஒரு முன்னாள் ஐ.பி.எஸ்.ஸின் யோசனையின் பெயரிலும் களமிறங்கி சூடு போட்டுக் கொண்டது. இன்னும் அந்தத் தழும்பே மாறாமல் இருப்பதால், புதிய தழும்போ, சூடோ தேவையில்லையென இம்முறை அ.தி.மு.க.வை நெருக்கி கூட்டணியுடன் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும்.. அமெரிக்காவில் 100% வரி விதிக்கப்படும் என்ற ட்ரம்பின் அறிவிப்பு..?
வழியில் போகிறவர்களைக் கடிக்கும் போதே நாய்க்குச் சொந்தக்காரன் சுதாரிக்க வில்லையென்றால், அது வீட்டிலுள்ளவர் களையும் கடிக்கும். அதாவது அமெரிக்காவுக்கு வெளியில் போய் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கான வரி. இது அமெரிக்கர்களுக் கான தலைவலி.