வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
மோடி கொண்டுவந்துள்ள 4 தொகுப்புச் சட்டங் களும் தொழிலாளர் நலனுக்கு எதிரானது என்று கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனரே?
ஒரு வலதுசாரி அரசில், தொழிலாளர் நலன் பேணப்படுமா... முதலாளிகள் நலன் பேணப்படுமா என்ற சந்தேகம் வரவேண்டுமா? ஆனால் இப்போதிருக்கும் பா.ஜ.க. அரசு சங்கம் அமைப்பது, வேலை உத்தரவாதம் போன்ற அடிப்படை உத்தரவாதங்களையே தூக்கி நம்மை நவீன கொத்தடிமைகளாக்கப் பார்க்கிறது.
ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
திருமணத்துக்கு காலாவதி தேதி தேவை என நடிகை கஜோல் கூறியுள்ளது சரியா?
திருமணம் என்ன உணவுப் பொருளா காலாவதி தேதி குறிப்பதற்கு. ஒருவேளை திருமண உறவு சரிப்பட்டு வரவில்லையெனில் விவாகரத்து வாங்க சட்ட வசதியிருக்கிறது. அதுவும் முடியாதவர்கள் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்ந்துவிட்டு அலுத்ததும் பிரிந்து சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். மற்றபடி பத்து வருடத்துக் குப் பின் காலாவதியாகும் என தேதி குறித்து, மறுபடி பதிவு அலுவலகம் சென்று திரும்ப திருமணத்தைப் புதுப் பிக்கவேண்டும் என்கிறாரா கஜோல்?
எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்
வ.உ.சி.யின் வழக்கறிஞர் பட்டத் தைப் பறித்து சிறையிலடைத்தது ஆங்கி லேய அரசு. வ.உ.சி.யின் வாழ்வாதா ரத்துக்காக அந்தப் பட்டத்தைக்கூட இராஜாஜி மீட்டுத் தரவில்லையாமே?
வ.உ.சி. சிறைபோய் விடுதலையானது ஆங்கிலேயர் ஆட்சியில். சிறைக்குச் சென்றது 1908. விடுதலையானது 1912. மரணமடைந்தது 1936. வ.உ.சி. இறந்தபின் அவரது வழக்கறிஞர் உரிமையை மீட்டுத்தர முயற்சி யெடுக்கப்பட்டது 1947-ல். அப்போது ராஜாஜி முதல்வ ராகவும் இல்லை. மீட்டெ டுத்திருந்தாலும் அது கௌரவச் செயல்தானே தவிர, இறந்த வ.உ.சி.க்கு அதனால் எந்தப் பயனும் இல்லை.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
இயற்கை விவசாயத்தை பரி சோதனை செய்து பார்க்கவேண்டும் என்கிறாரே பிரதமர்?
ஏற்கெனவே மோடி சொல் லாமலே இயற்கை விவசாயத்தை, இயற்கை விவசாய ஆர்வலர்கள் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இயற்கை விவசா யத்தின் பிரச்சனை, அதற்கு காலம் அதிகம் பிடிக்கும். விளைச்சலும் மட்டுப்பட்டதாக இருக்கும். பூச்சிக் கொல்லி உபயோகிக்கக்கூடாது என்பதால் பூச்சி, புழுக்களால் அழிவும் அதிகமிருக்கும். அதனால் கையில் காசு அதிகமிருக்கும், நட்டத்தைத் தாங்கக்கூடியவர்களுக்குத்தான் சரிப்பட்டு வரும். விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்கும் விவசாயிகளுக்கு அது கட்டுப்படி யாகாது. மோடியின் இயற்கை விவசாய ஆர்வமெல்லாம், மேடையில் ஏறும்போது உச்சத்துக்குப் போய், மேடையிறங்கும்போது வடிந்து விடக்கூடியது. அதைப் பொருட் படுத்தக்கூடாது.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
வேலூர் மத்திய சிறையில் பொதுமக்கள் பயன்படுத்தும் லெதர் செருப்பை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிறைத் துறை தெரிவித்துள்ளதே?
சிறையில் விவசாயம், கோழி வளர்ப்பு, பேக்கரி பயிற்சி கொடுக்கும்போது, செருப்பு தயாரிக்க பயிற்சி கொடுப்பதில் தவறில்லை. சிறையில் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்வது வெளியில் வரும்போது, பிழைப்பு நடத்த உதவலாம். ஆனால் மிகப்பெரிய செருப்புக் கம்பெனி களுக்குச் சமமாக, குறைந்த விலையில் செருப்பு தயாரித்து விற்று பிழைப்பை நடத்தமுடியுமா என்பதை யும் யோசிக்கவேண்டும்.
எஸ்.இளையவன், சென்னை
தேர்தலில் த.வெ.க. ஜெயித்தால் அனைவருக்கும் வீடு, வீட்டுக்கொரு இலவச பைக்கும் தருவோமென விஜய் அறிவித்திருக் கிறாரே?
ஒவ்வொருவரும் ஒரு இலவசம் தருவதாகச் சொல்லும்போது, விஜய்யும் தன் பங்குக்கு கவர்ச்சிகரமான ஒன்றை அறிவிக்கிறார். இளைஞர் களின் ஓட்டு வங்கியைக் குறி வைத்து இலவச டூவீலரும் அறிவித்திருக்கிறார். பதிலுக்கு மற்ற கட்சிகள் என்ன அறிவிக்கப் போகிறதென பொறுத்திருந்து பார்க்கலாம். 2014 தேர்தலில் மோடிக்கு வாக்களித்தவர்களில் எத்தனை பேருக்கு பதினைந்து லட்சம் மேல் சபலமிருந்ததோ யாருக்குத் தெரியும்?
கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
காற்று மாசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைக் கைதுசெய்து சரமாரி யாக போலீஸ் தாக்கியுள்ளதே?
லட்சக்கணக்கில் விவசாயிகள் போராடியபோதே தாக்கிய போலீஸ் சில நூறு பேர் அடங்கிய கும்பலை விட்டுவைக்குமா? அன்னா ஹசாரே போராட்டத்தை முன்வைத்து, காங்கிரஸ் அரசை ஆட்டம் காணவைத்த பா.ஜ.க.வுக்கு, ஒரு போராட்டம் பெரிதானால் என்னாகு மென்பது நன்றாகவே தெரியும். அதனால் எந்தப் போராட்டத்தையும் ஏதாவதொரு முத்திரை குத்தி நசுக்குவதே அதன் இயல்பாக இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/mavali-2025-12-02-11-48-36.jpg)