பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் மோகன்லால் தகுதியானவரா?

இந்தியத் திரையுலகிலுள்ள சிறந்த நடிகர்களுள் மோகன்லாலும் ஒருவர். இந்தியத் திரையுலகுக்கான ஒன்றிய அரசின் பெரிய விருதுகளுள் ஒன்று தாதா சாகேப் பால்கே விருது. இந்த விருதைப் பெற்றவர்களுக்கான பட்டியலில் வேண்டுமானால் தகுதியில்லாத சிலர் இருக்கலாம். மோகன்லாலுக்கு, தாதா சாகேப் பால்கே விருதுக்கும் மேலான விருதுகளைப் பெறக்கூட தகுதியிருக்கிறது. 

Advertisment


தே.மாதவராஜ், கோயம்புத்தூர்

எந்த அரசியல் தலைவரும் பயன்படுத்தாத விலையுயர்ந்த பிரச்சார வாகனத்தை நடிகர் விஜய் பயன்படுத்தியிருக்கிறாரே?

Advertisment

எவ்வளவு விலையுயர்ந்ததாய் இருந்தால் என்ன... கட்சியிலிருந்தோ, தொண்டனிடமிருந்தோ காசு வசூலிக்காமல், சட்டத்துக்குப் புறம்பான வழி யில் சம்பாதிக்காத காசில் வாங்கிய வாகனமாய் இருந் தால் சரிதான். அவர் ஆடம்பரமா... இல்லையா என்பதை மக்கள் முடிவுசெய்துகொள்ளட்டும்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

பிரதமர் மோடி ஆட்சியில் தான் வன்முறை குறைந்துள்ளது என்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறாரே?

Advertisment

mavali1

மனிதருக்கு சிரிக்க வராவிட்டாலும், சிரிப்புக் காட்ட வருகிறது. மணிப்பூர், காஷ்மீர், லடாக், டெல்லி, உத்திரப்பிரதேசம் என மோடி ஆட்சியின் வன்முறைக்கு அகராதியே பதிப்பிக்கலாம். ஆளுநர் பதவி முடிந்தபிறகும் ஆளுங்கட்சியிடமிருந்து ஏதோ சலுகை எதிர்பார்க்கிறார்போல!

த.சத்தியநாராயணன், அயன்புரம்

ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்களுக்கு உண்மையிலே நன்மை கிடைத்ததா?

தூக்குக் கயிற்றால் மரண தண்டனைக் கைதிக்கு நன்மை கிடைத்ததா என கேட்பதைப் போன்றது உங்கள் கேள்வி. எந்த அரசாங்கத்துக்கும், அரசு நடத்த பணம் தேவை. நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் போது, வரி வசூலிக்கவும் புதிய புதிய யோசனை களைக் கண்டுபிடிப்பார்கள் அரசியல்வாதிகள். பா.ஜ.க. இல்லை, எந்தக் கட்சி கொண்டுவந்தாலும் ஜி.எஸ்.டி. வரியால் மக்களுக்குச் செலவுதான். பொருளாதாரம் மந்தமாக இருப்பதால், வேறு வழியின்றி இரண்டு ஸ்லாப்களை குறைத்திருக்கிறார் கள். இதுவரை ஆகிவந்த நட்டத்தில் சிறிது லாபம் கிடைக்கும். அதை ஆதாயம் என்றாலும் சரி… அநியாயம் என்றாலும் சரி! உங்கள் சௌகரியம்.


க.அருச்சுனன், செங்கல்பட்டு 

ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையின் மீது நடவடிக்கை என்னவென எந்த அரசியல் கட்சியும் கேட்பதில்லையே?

விசாரணை கமிஷனே, பிரச்சனையை ஒத்திப்போட அமைக்கப்படுவது என்பார்கள். அத்தகைய கமிஷனின் அறிக்கையை வைத்து எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறீர்களா நீங்கள்?

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை என்று ராமராஜன் பேசியுள் ளாரே?

ராமராஜன் மட்டும் இப்போது கட்சியில் பொறுப்பிலிருந்தால், கூப்பிட்டு அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது, அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க என்னென்ன செய்யலாம் என பா.ஜ.க. டீம் ஒன்று தெளிவாக விளக்கி, டெல்லி போய் யார் யாரையெல்லாம் சந்திக்கவேண்டும் என்பதைச் சொல்லி, உபரியாகப் புண்ணியத்துக்கு ராமர் கோவில், காசி தரிசனம் அனைத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கும். ராமராஜனுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் குறைவுதான்.

க.சந்திரகலா, பாபநாசம்

அடுத்து அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத மருந்துகளுக்கு 100% வரிவிதிப்பு என அறிவித்திருக்கிறாரே ட்ரம்ப்?

அமெரிக்காவில் பெரும்பான்மை மருந்துகள் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. இந்திய மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் 40% அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படுவதுதான். இந்தியாவுக்கு இன்னுமொரு அடி. ஆனால், அமெரிக்காவில் மருந்துப்பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு, மக்கள் கொந்தளித்தால் அவசரமாக இதனை வாபஸ் வாங்கிவிடுவார் ட்ரம்ப். ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள் எதுவுமே யோசித்துச் செய்யப்படுவதுபோல் தோன்றவில்லை. முதலில் மற்ற நாடுகள் பாதிக்கப்பட்டாலும் பின்னால் அமெரிக்காவும் ட்ரம்பின் நடவடிக்கையால் பாதிக்கப்படும். அதில் சந்தேகமேயில்லை. அதேபோல, இந்தியாவில் தலைமை பீடத்தில் இருப்பவர்கள், ட்ரம்பின் அலங்கோல நடவடிக்கை களுக்கு உரிய நடவடிக்கைகளைச் சிந்தித்துச் செயல்படுத்தாவிட்டால் இந்திய ஏற்றுமதியும் பொருளாதாரமும் பலத்த அடிவாங்கும்.