இந்து குமரப்பன், விழுப்புரம்.

2021-ல் பாஜகவினர் சட்டசபைக்கு செல்வர் 'என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளாரே? இது சாத்தியமா?

பா.ஜ.க 1996லேயே சட்டமன்றத்திற்கு சென்றிருக் கிறது. 2001ல் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு 4 எம்.எல்.ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது. இப்போதும் தனித்துப்போட்டியிட்டு சட்டமன்றம் செல்வோம் என்று பா.ஜ.க. தலைவர் சொல்லவில்லை. அரசியல்தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்.

Advertisment

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

கோவில்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஒளிபரப்ப "திருக்கோயில் டிவி' என்று புதிதாக ரூ.8.77 கோடி செலவில் தமிழக அரசு தொடங்க இருப்பது குறித்து?

வரவேற்கலாம். ஆனால், மற்ற சேனல்கள் எல்லாம் கோவில் திருவிழாக்களை ஒளிபரப்பி விளம்பர வருவாய் பார்க்கும் நிலையில், தமிழக அரசு செலவுக் கணக்கு எழுதிவிடக்கூடாது.

Advertisment

mm

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

இந்திய ரயில்வேதுறையை தனியார்மயமாக்குவது சரியில்லை என்கிற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு?

இந்தியாவுக்கு எதை நம்பி உலகநாடுகள் கடன் கொடுக்கின்றன என்று கேட்டால், இந்தியாவில் இருக்கிற ரயில்வே தண்டவாளங்களை வைத்துதான் என்று கிராமத்தினர் சொல்வார்கள். அதாவது, வாங்குகிற கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கிற அளவுக்கு ரயில்வே தண்டவாளங்களின் மதிப்பு இருக்கும் என்பது அவர்களின் மதிப்பீடு. அந்தளவுக்கு நீளமான இருப்புப்பாதைகளைக் கொண்டது இந்திய ரயில்வேதுறை. தேசத்தந்தை எனப்படுகிற காந்தி, தன் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து மக்களை ஒருங்கிணைத்தது ரயிலில்தான். வெள்ளைக்காரர்கள் போட்ட ரயில்வே டிராக்குகளைக் கொண்டே அவர்களுக்கு எதிரான அகிம்சை போராட்டத்தை மேற்கொண்டவர் காந்தி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தொடங்கி, இந்தி எதிர்ப்பு போராட்டம் வரை ரயில்வே என்பது வரலாற்று சாட்சியமாக இருக்கிறது. மீட்டர்கேஜ் பாதைகளை அகல ரயில்பாதைகளாக மாற்றுவதற்கு எத்தனை காலங்கள் ஆயின என்பதை அந்தந்த ஊர் மக்களும் அறிவார்கள். நீராவி என்ஜின், டீசல் என்ஜின், எலக்ட்ரிக் என்ஜின் என ரயிலின் வேகமும் அதிகரித்துள்ளது. மூன்றாம் வகுப்பு பயணம் என்றிருந்த நிலை மாறி, ஏ.சி. கோச்சுகள் விமானத்தைப் போல அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை வளர்ச்சியையும் அரசாங்கம் கொண்டு வந்தபிறகு, அதனை தனியாரிடம் கொடுக்கிறார்கள். மக்கள் நலனைக் கடந்த வியாபார நோக்கமே பெரிதாக உள்ளது.

வாசுதேவன் பெங்களூரு

ஆடிப் போயிருக்கும் இந்த சூழ்நிலையில், ஆடித்தள்ளுபடி எடுபடுமா?

வாழ்க்கையே தள்ளுபடியில் தானே போய்க்கொண்டிருக்கிறது கொரோனா யுகத்தில்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

ஊரடங்கை பயன் படுத்தி சிபிஎஸ்இ பாடப்பிரிவில் முக்கிய பாடத்திட்டங்களை நீக்கியுள்ளது குறித்து?

மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியுரிமை போன்ற இந்திய அரசியலமைப்பு வலியுறுத்தும் பண்புகளை பாடப்பிரிவிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறார்கள். சந்து கிடைக்கும் போதெல்லாம் தன் கட்சியின் கொள்கைச் சிந்து பாடுவது என்ற பெயரால் வன்மத்தை விதைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளும் பா.ஜ.க. அரசு, மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும் புகுந்து விளை யாடுகிறது. இது தற்காலிகம்தான் என்று சமாதானம் சொல்கிறார் மத்திய அமைச்சர். ஆட்சிக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதால், எந்த தற்காலிகத்தையும் நிரந்தரமாக் கிடும் மறைமுகத் திட்டம் பா.ஜ.க. விடம் உண்டு.

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்து இறந்த நாவலர் நெடுஞ் செழியனின் நூற்றாண்டு விழாவைத் தி.மு.க கொண்டாடுவதற்கு காரணம் திராவிடமா? அரசியலா?

திராவிட அரசியல்

___________

தமிழி

மல்லிகா அன்பழகன், சென்னை 78.

அகழாய்வு நடக்கும் இடங்களுக்கு செல்லும் நிருபர்கள் படமெடுத்து, சுவாரசியத்திற்காக தொல்லியல் துறை சாராதவர்கள் சொல்லும் தகவல்களையும் இணைத்து செய்திகள் வெளியிடுவதாக தொல்லியல்துறை கமிஷனர் உதயசந்திரன் தெரிவித்துள்ளாரே, இதனால் நம்பகத் தன்மையும் உண்மை நிலையும் பாதிக்காதா?

அகழாய்வு என்பது ஒவ்வொரு அங்குலத்திலும் கவனமாகக் கையா ளப்படவேண்டியது. தோண்டிக் கொண்டிருக்கும்போது ஒரு மண் பாண்டமோ, மனித எலும்போ கிடைத்தால் கடினமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உடனே நிறுத்தி, மென்மையாக மண்ணைக் கிளறி, உள்ளே இருக்கும் பொருள் சிதைவடையாமல் முழுமையாக மேலே கொண்டு வரும் வகையில் அகழாய்வு செய்பவர்கள் செயல்படுவார்கள். அப்படிக் கொண்டு வரப்படும் பொருள், எந்த காலத்தைச் சேர்ந்தது, என்ன வகையானது, எத்தகைய பண்பாட்டு அடையாளத்தை வெளிப் படுத்துகிறது என்பதை அதற்குரிய ஆய்வுமுறைகளுடன் கண்டறிந்து, பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு வெளிப்படுத்துவார்கள். கண்ணால் காண்பதைவிட, தீர விசாரிப்பதே மெய் என்பதற்கு அகழ்வாராய்ச்சிகள் சரியான எடுத்துக்காட்டு. கீழடியாக இருந்தாலும், ஆதிச்சநல்லூராக இருந்தாலும் மற்ற இடங்களாக இருந்தாலும் ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு முன் மண்ணுக்குள் புதைந் ததை வெளிக்கொண்டு வரும்போது பரபரப்பு பிரேக்கிங் நியூஸூக்காக உடனடியாக ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அகழாய்வின் நோக்கத்தை சிதைத்து விடும். ஏற்கனவே, சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகமாக நிறுவுவதற்கு ஒரு குழு அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொல்தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு எனச் சொல்கிறார் மாநில அமைச்சர். அவரவர் விருப்பங்களை குழிதோண்டி புதைத்துவிட்டு, குழிக்குள் இருந்து எடுத்ததை உண்மையாக ஆராய்ந்து முடிவுகளை அறிவிப்பதே சரியான அணுகுமுறையாகும்.