தேனி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி மற்றும் மதுரை மாவட்டத் திலுள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதுதான் தேனி பாராளுமன்றத் தொகுதியாக இருந்து வருகிறது. இதில் ஆண்டிபட்டி தொகுதி முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டியிட்டு வென்றுள்ள பெருமை பெற்றது. போடி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் வென்றிருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் முதன்முறையாக தேனி பாராளுமன்றத் தொகுதியில்தான் வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியிது.
கடந்தமுறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ரவீந்திரநாத்திடம் தோல்வியைத் தழுவினார். இம்முறை இங்கே தி.மு.க. சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். ஜெ. மறைவுக்குப்பின் அ.தி.மு.க. உடைந்த போது, தனது குருவான டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளராக இருந்துவந்த தங்கத் தமிழ்ச்செல்வன், தினகரனோடான கருத்துவேறுபாடு காரணமாக விலகி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் ஐக்கியமானார். அதையடுத்து, தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, வடக்கு மாவட்ட செயலாளராக தங்கத்தமிழ்ச்செல்வனை நியமித்தார் ஸ்டாலின். கடந்த சட்டமன்றத் தேர்த லில் ஓ.பி.எஸ்.சை எதிர்த்துப் போட்டி யிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அமைச்சர் உதய நிதியுடனும், தொகுதி பொறுப்பு அமைச்சரான ஐ.பெரியசாமியிடமும் நெருக்கமாக இருந்துவந்தவ ருக்கு தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார் முதல்வர்.
இதையடுத்து, உட்கட்சி கருத்துவேறுபாடு களை மறந்து, தெற்கு மாவட்ட செயலாளரான கம்பம் இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகராஜா உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளைச் சந்தித்து தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக் கும்படி கேட்டுக்கொண்டார். அவர்களின் துணை யோடு, சமூகத் தலைவர்களையும், கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். சில தினங்களுக்குமுன் உதயநிதி ஸ்டாலினும் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்றுள்ளார். அ.தி.மு.க. சார்பில், தேனி கிழக்கு ஒன்றிய செயலாளரான நாராயண சாமியை வேட்பாளராக இ.பி.எஸ். அறிவித்துள்ளார். இவர் கடந்த 1982 முதல் கட்சியில் இணைந்து செயலாற்றிவருகிறார். ஆனால் தேனி ஒன்றியத்தைத் தாண்டி அறிமுக மில்லாதவராக இருக்கிறார். எனவே பெயருக்கு இவரை வேட்பாள ராக்கியிருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. அதனால், அ.தி. மு.க.வினர் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டுகிறார்கள். இருந்தாலும், இரட்டை இலை காரணமாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று உறுதியுடன் கூறியபடி வலம்வருகிறார் நாராயணசாமி. நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் களத்தில் உள்ளார்.
பா.ஜ.க. கூட்டணியில், தங்கத்தமிழ்ச்செல்வனின் முன்னாள் குருவான டி.டி.வி.தினகரனே களமிறங்கியுள்ளதால் இத்தொகுதி யில் பரபரப்பு தொற்றியுள்ளது. கடந்த முறை டி.டி.வி. எம்.பி.யாக இருந்த போது, நகரம் முதல் பட்டி தொட்டி வரை பணத்தை வாரியிறைத்து, மக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். அந்த நம்பிக்கையில் தான் இத்தொகுதி யில் போட்டிபோட முடிவெடுத் துள்ளார். இவருக்காக ஓ.பி.எஸ். மகனும் இத்தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டார். அதனால்தான் இத்தொகுதியில் போட்டி போடுகிறேன் என்று டி.டி.வி. வெளிப் படையாகவே பேசி, அ.தி.மு.க. ஓட்டுக்களையும் இழுக்கப் பார்க்கிறார். அதோடு ரவீந்திரநாத்தும் இவருக்கு ஆதரவாக குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்துவருகிறார். பெரும்பான்மை முக்குலத்தோர் சமுதாயத்தினரின் வாக்குகள், அதே சமூகத்தைச்சேர்ந்த தினகரனுக்கும், தங்கத்தமிழ்ச்செல்வனுக்கும் பிரிய வாய்ப்பிருக்கிறது. எனவே, குருவான தினகரனுக்கும், சிஷ்யனான தங்கத்தமிழ்ச்செல்வனுக்குமிடையே தான் தேர்தல் களத்தில் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. பெயரளவுக்கு களத்தில் வலம்வருகிறது.
மதுரை அலங்காநல்லூரில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு கட்சிப் பொறுப்பிலுள்ள உ.பி.க்கள் சரிவர வராததால் டென்சனான அமைச்சர் மூர்த்தி, "கடந்த லோக்சபா தேர்தலில் 40 தொகுதி களில், தேனியைத் தவிர்த்து 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தேனி தொகுதியில் தோற்றதற்கு சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் குறைவான ஓட்டு பெற்றதே காரணம். தேனியில் தோற்ற வருத்தம் முதல்வருக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் இன்னமும் உள்ளது. இங்கு பொறுப்பிலுள்ளோருக்கு பொறுப்பு இல்லை. கட்சிக்காரர்களை நேரில் சென்று அழைக்காமல், தொலைபேசியிலேயே அரசியல் செய்தால் எப்படி உருப்படும்? உங்களால் பார்க்க முடிய வில்லையென்றால் ஒதுங்கிவிடுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்.
இக்கூட்டத்திற்கு பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று சொன்னீர்கள், எங்கு வந்திருக்கிறார்கள்? நீங்கள் சொன்னதெல்லாம் துரோகமாகத்தான் இருக்கிறது. இது எனக்கோ, தங்கத்தமிழ்ச்செல்வனுக்கோ அல்ல, உங்களை கட்சியில் ஆளாக்கியுள்ள முதல்வருக்கு செய்துள்ள துரோகம். நான் ஏதேனும் பச்சையாக சொல்லிவிடுவேன். பத்திரிகையாளர்கள் எழுதிக்கொண்டாலும் பரவாயில்லை. தேனி பாராளுமன்றத் தொகுதியில் தங்க.தமிழ்ச்செல்வனை அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கிறேன். அப்படி வெற்றிபெற வில்லையென்றால் மறுநாளே எனது மாவட்ட செயலாளர் பதவியையும், மந்திரி பதவியையும் ராஜினாமா செய்துவிடுகிறேன்'' என்று டென்சனாக பேசினார். அதைக்கண்டு உ.பி.க்கள் அரண்டுபோனார்கள்.