லகத்தையே முடக்கிப் போட்டிருக்கிற கொரோனா, தமிழகத்தில் ஊராட்சி நிர்வாகங்களை செழிப்பாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு கொரோனாவைக் காட்டி கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள் -இப்படிச் சொல்வது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்பது தான் வினோதமானது. அப்படி என்ன கொள்ளை நடக்கிறது கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம் புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளிடம்.

mask

கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கொடுக்கிற ஒரு மாஸ்க் விலை ரூ. 3தான். ஆனால் அரசாங்கம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ஆயிரம், 2 ஆயிரம் என்று அனுப்பிவைத்தது. அதன்பிறகு அனுப்பிய பில்லில் ஒரு மாஸ்க் விலை ரூ.15. அதேபோல ரூ.550 மதிப்புள்ள பிளிச்சிங் பவுடர் மூட்டை விலை ரூ.2550, கிருமிநாசினி ஒரு லிட்டர் விலை ரூ. 500தான். ஆனால் அரசாங்கம் வாங்கியனுப்பியது ரூ. 2500.

கிருமிநாசினி தெளிக்க ஊராட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு பவர் ஸ்பிரேயர் கொடுத்தாங்க. அதன் விலை ரூ. 8 ஆயிரம்தான். ஆனால் அரசாங்கம் அனுப்பிய பில்லில் ஒரு ஸ்பிரேயர் விலை ரூ. 22,500. இப்படி ஒவ்வொரு பொருளிலும் கொள்ளைமேல் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

Advertisment

mask

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வடகாடு ஊராட்சி வழியாக சென்ற போது 140 லிட்டர் ட்ரம்கள் பல இடங்களில் வைத்திருப்பதைப் பார்த்து அந்த ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டனிடம் இந்த ட்ரம்கள் என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்றோம். ஒரு செட் ரூ. 1500-க்கு செய்தேன் என்றார். அப்படின்னா உங்க ஊராட்சிக்கு ஒன்றியத்திலிருந்து கொடுத்த ட்ரம் விலை என்ன தெரியுமா? என்றோம். அதற்கான பில் இன் னும் வரல என்றவ ரிடம் அதன் விலை ரூ. 19,376 என்றதும் அதிர்ந்துபோனார்.

ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், ""இப்படித்தான் எல்லா பொருளிலும் கொள்ளை நடந்திருக்கிறது. அந்த பில்களை வாங்கிக்கொண்டிருக்கிறோம். அனைத்து பில்களையும் வாங்கிச் சேர்த்து தி.மு.க. வழங்கறிஞர் பிரிவு வெங்கடேசன் மூலம் வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறோம்'' என்றார்.

Advertisment

அமைச்சர் விஜயபாஸ்கரின் அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள 34 ஊராட்சி களுக்கும் 34 தெர்மாமீட்டர் வாங்கியது ரூ. 2,68,922. அதாவது ஒரு தெர்மாமீட்டர் விலை ரூ. 7,909. ஆனால் அதன் உண்மை விலை ரூ. 2500 முதல் 3 ஆயிரம்தான்.

mask

இந்த நிலையில்தான் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்த கவுன்சில் கூட்டத்திலும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளனர் கவுன்சிலர்கள். கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பல சேர்மன்கள் எங்களிடம் எதையும் கேட்காமல் அதிகாரிகளே தன்னிச்சையாகச் செயல்பட்டு விலை அதிகமாக பொருள் வாங்கியிருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். அறந்தாங்கி, ஆவுடையார்கோயிலில் கேள்விமேல் கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களுக்கு அரசு வழிகாட்டுதலின்படியே வாங்கப்பட்டதாக பதில் சொன்னார்கள். பேராவூரணி ஒன்றியத்தில் அ.தி.மு.க ஒ.செ.வும், ஒன்றியக் கவுன்சிலருமான துரைமாணிக்கம் இதுபற்றி கேள்வியெழுப்ப, அரசு சொன்ன நிறுவனங்களில்தான் விலைகுறைவாக கொள்முதல் செய்திருக்கிறோம் என்று அசால்ட் டாக பதில் கூறியுள்ளார்.

ஆனால் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சில ஊராட்சிமன்றத் தலைவர்கள் மட்டும் விலை அதிகமாக உள்ளது. சரியான விலைக்கு பில் அனுப்பினால் மட்டுமே செக் கொடுப்போம் என்று உறுதியாக இருக்கிறார்கள். இத்தனை கொள்ளைகளுக்கும் பொருட்கள் வாங்கியதாக பில்களில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் அத்தனையும் லெட்டர் பேட் நிறுவனங்களாகவே உள்ளன.

தி.மு.க வழக்குத் தொடர்ந்து மக்கள் பணத்தை மீட்க முயற்சிப்பது ஒருபக்கம் என்றால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தானாக முன்வந்து விளக்கம் கேட்கும் நீதிமன்றம் கொரோனா கொள்ளை குறித்தும் விளக்கம் கேட்டு மக்களுக்கு சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் விளக்கம் கேட்ட போது...

""டி.ஆர்.டி.யே, மற்றும் அரசு வழிகாட்டுதல் படி ஒவ்வொரு ஒன்றியத்திலும் தங்களின் நிதி ஆதாரத்தை கணக்கில்கொண்டு பொருள் வாங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறோம். அதில் அரசு வழிகாட்டி மதிப்புகளும் உள்ளது. பவர் ஸ்பிரே தரத்திற்கு ஏற்ப விலைகொடுக்கப்பட்டிருக்கும். ட்ரம் பற்றிய தகவல் புதிதாக உள்ளது அது பற்றி விசாரிக்கிறேன்'' என்றார்.

-இரா.பகத்சிங்

_________________

அதிர்ச்சித் தீர்மானம்!

அன்னவாசல் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடந்தபோது கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்களில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதாக இருந்தாலும், 16வது தீர்மானம் அனைத்து கவுன்சிலர்களையும் ரொம்பவே அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலின் அன்னவாசல் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையம் இலுப்பூர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அதிகாரிகள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்கள் பாதுகாப்புக்காக தடுப்பு வேலிகள் அமைத்த செலவு ரூ. 9,82,000 என குறிப்பிடப்பட்டிருந்தது.. இரும்புக் குழாய்களை விலைக்கு வாங்கி தடுப்பு அமைத்திருந்தாலே இவ்வளவு செலவு வராதே வாய்பிளந் தனராம் கூட்டத்துக்கு வந்தவர்கள்.

-செம்பருத்தி