அ.தி.மு.க.வில் கட்சியை வளர்க்க மாவட்டக் கழகங்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கட்சியை பலப்படுத்த வேண்டுமென்று இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ. என எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அரக்கோணம், சோளிங்கர் தொகுதிகளை கிழக்கு மாவட்டமாகவும், ராணிப் பேட்டை, ஆற்காடு தொகுதிகளை மேற்கு மாவட்டமாகவும் பிரித்தனர். ஒருங்கிணைந்த மா.செ.வாக இருந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைகொறடா வழக்கறிஞர் ரவியை கிழக்கு மா.செ.வாகவும், மேற்கு மா.செ.வாக சுகுமாரையும் நியமித்தார். இவர்களிடையே எழுந்துள்ள மோதலால்தான் பரபரப்பாகியுள்ளது.

rr

இதுபற்றி நம்மிடம் பேசிய கிழக்கு மா.செ. ரவி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள், "அரக்கோணம் தனித்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக மூன்றாவது முறையாகவும், மா.செ.வாக சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும் ரவி இருக்கிறார். ஜெ. உயிரோடு இருந்தபோதிலிருந்தே வீரமணிக்கும், ரவிக்கும் ஏழாம் பொருத்தம். அவர் மறைவுக்கு பின்னர் இ.பி.எஸ். முதலமைச்சராகவும், அமைச்சர் வீரமணியின் ஆதிக்கம் கட்சியில் அதிகமாகி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவியை டம்மியாக்க பல முயற்சிகளை செய்கிறார், அதையெல்லாம் மீறித்தான் மா.செ.வாக ரவி தொடர்கிறார். அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுக்கு பதவிகள் தர வேண்டுமென்பதற்காகத்தான் மாவட் டத்தை இரண்டாகப் பிரித்தார் இ.பி.எஸ். மாவட்டம் பிரிக்கப்பட்டதும் வீரமணி, தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர் சுகுமாரை மா.செ.வாக்க வேண்டுமென்று நெருக்கடி தந்து மா.செ.வாக்கினார். ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகள், கட்சிப் போராட்டங்களில் சீனியரான ரவியை, சுகுமார் அழைப்பதில்லை. அதற்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் வீரமணியை அழைத்துவருகிறார். பிப்ரவரி 12ஆம் தேதி வாலாஜாவில் நடைபெற்ற மாவட்ட எம்.ஜி.ஆர். அணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலையின் மகள் திருமணத்துக்கு இ.பி.எஸ். வருகை தந்திருந்தார். அதற்கான வரவேற்பு பேனர்கள் உட்பட எதிலும் கிழக்கு மா.செ. ரவியின் பெயர், புகைப்படத்தை போடக்கூடாது என நிர்வாகிகளுக்கு வாட்ஸப் மூலமாக மெசேஜ் அனுப்பினார். அதற்கு மாறாக திருப்பத்தூர் மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி போட்டோ, பெயரை போட்டிருந்தார். சாதி ரீதியாக ஒதுக்குவதாகத்தானே இதனை எடுத்துக்கொள்ள முடியும்?'' எனக் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமாரிடம் கேட்க தொடர்பு கொண்டபோது, நமது லைனை எடுக்கவில்லை. அவரது ஆதரவாளர்களிடம் விசா ரித்தபோது, "அவரை அவமானப் படுத்த வேண்டும் என்பது இவரது நோக்கமல்ல. மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத் திறப்பு விழாவுக்கு நேரடியாக சென்று கிழக்கு மா.செ. ரவியை அழைத்தார். அதற்கு ரவி வரவில்லை. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா என்கிற முறையில் கிழக்கு மா.செ. ரவியை, மேற்கு மாவட்ட அரசியல் நிகழ்ச்சிக்கு அழைத்தபோதும் வரவில்லை. ஆனால் மேற்கு மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் வந்து கலந்துகொள் கிறார். நம்மை மதிக்காதவரை நாம் ஏன் அழைக்கவேண்டும் என அழைப்பதில்லை. மேற்கு மா.செ. சுகுமாருக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என தனது ஆதரவாளர்களான நகர தொழில்நுட்ப அணி செயலாளர் அசோக், ராணிப் பேட்டை நகர இணை செயலாளர் பிலிப்ஸ், வாலாஜா ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வர்த்தகர் அணி மாவட்ட நிர்வாகி சேதுராமன் மூலமாக தூண்டிவிட்டார். கட்சியினர் வைக்கும் ஃபேனர், போஸ்டர்களில் மா.செ. சுகுமாரின் பழைய போட்டோக்களையே கட்சியினர் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். இனிமேல் புதுப்படங் களை பயன்படுத்தவேண்டும் என்கிற தகவலோடு பத்து புகைப்படங்களை வாட்ஸப்பில் அனுப்பி வைத்தார். கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த மெசேஜில், குறிப்பு எனப்போட்டு, கட்டாயம் பிற மாவட்டச் செயலாளர்களின் புகைப்படங்கள், பெயரைப் பயன்படுத்தக்கூடாது என இருந்ததை, கிழக்கு மா.செ. ரவி படத்தை, பெயரை பயன் படுத்தக்கூடாது எனத் திருத்தம் செய்து பரப்பி னார்கள். அந்த குட்டு வெளிப்பட்டது. மேல்விஷாரம் பகுதியில் இஸ்லாமியர்களின் 300 வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பான கண்டனக் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் வீரமணியை இந்த மாவட்டத்துக்கு தலைமை தான் அனுப்பி வைத்தது. அவர் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு அமைச்சராக இருந்தவர். அவரை அழைத்து வருவதில் என்ன தவறு இருக்கிறது? இப்போது சாதி ரீதியாக பிரச்சனை செய்வதாகக் கிளப்புகிறார்கள்'' என்கிறார்கள்.

முக்கிய நிர்வாகிகளோ, "கட்சி வளர்ச்சிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது என்றால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தை ஏன் பிரிக்கவில்லை? ராணிப்பேட்டை மாவட்டத்தை மட்டும் ஏன் பிரிக்கிறீர்கள்? என கிழக்கு மா.செ. ரவி, இ.பி.எஸ்.சிடம் கேட்டார். அதனையும் மீறி மாவட்டம் பிரிக்கப்பட்டது. வீரமணி தனது ஆதரவாளரான சுகுமாருக்கு மாவட்ட செயலாளர் பதவியை வாங்கித் தந்துவிட்டார். வீரமணி சொல்லித்தருவது போல் சுகுமார் செயல்படுவதால் சுகுமார் மீது ரவி கடுப்பாக இருக்கிறார். பிரித்த மாவட்டத்தை மீண்டும் இணைக்கவேண்டும் என விரும்புகிறார் ரவி. இதுதான் பல்வேறு வகைகளில் பிரச்சனையாகி வருகிறது'' என்கின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் ராணிப்பேட்டை விவகாரத்தால் அ.தி.மு.க. தடுமாறிக்கொண்டி ருக்கிறது.

Advertisment