"ஹலோ தலைவரே, மழைவிட்டாலும் சாரல் விடலைங்கிற மாதிரி, அண்மையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் குறித்து பல்வேறு தகவல் வந்துக்கிட்டே இருக்கு.'”
"ஆமாம்பா, முதல்வரின் செயலாளர் மிரட்டல்னு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பற்றி நாம் கடந்தமுறை பேசிய நிலையில், அவரது டிரான்ஸ்பர் நடந்திருப்பதை எல்லோரும் வியப்பாகப் பார்க்க றாங்களே?''
"உண்மைதாங்க தலைவரே, இந்த டிரான்ஸ்பர் நடவடிக்கைகள், ஏற்கனவே நக்கீரன் தெரிவித்த தகவல்களின் படிதான் நடந்திருக்கு. முதல்வரின் முதன்மைச் செயலாளரான உதய சந்திரன் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் நிதித்துறைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதல்வரிடம் வந்திருக்கிறார். இதுகுறித்து கோட்டைத் தரப்பில் விசாரித்த போது, உதயசந்திரனும் முருகா னந்தமும் நட்பில் மட்டுமல்ல. சித்தனையிலும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பவர்கள்தான் என்றும், அதனால் ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை, இங்கே தன் ஆதிக்கத்தைச் செலுத்தப் போவது உறுதி என்றும் கவலையோடு சொல்கிறார்கள். அதே போல் இந்த அரசைப் பொறுத்தவரை, உலகமே புரண்டாலும், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.சும், டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் ஐ.பி.எஸ்.சும் இங்கே கோலோச்சுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.''”
"டிரான்ஸ்பர் நடவடிக்கைகள் இன்னும் இருக்குதுன்னு சொல்லப்படுதே?''”
’"ஆமாங்க தலைவரே, இப்போது நடந்த டிரான்ஸ்பர்கள் எல்லாமும் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.சின் விருப்பப்படிதான் நடந்தது என்கிறது அதிகாரிகள் தரப்பு. அடுத்து, முதல்வரின் நம்பர் 2 செயலாளரான உமாநாத்தும் விரைவில் மாற்றப்பட இருக்கிறாராம். கடந்த ஆட்சிக் காலத்தில் அப் போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருடன் மிக நெருக்கமாக இருந்த இந்த உமாநாத், அப்போது நடந்த கொரோனா உபகரணக் கொள்முதல் முறைகேடுகளில் அதிகம் பேசப்பட்டவர். இவர் மீது அப்போதே புகார்கள் ஏகத்துக்கும் குவிந்ததை மறக்க முடியாது. ஆட்சி மாற்றத்தின் பிறகும் இவர் இன்றுவரை அதே பதவியில் தொடர்வது வியப்பாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஐ.பி.எஸ். தரப்பிலும் அதி ரடி டிரான்ஸ்பர்கள் இருக்கலாம் என்கிறார்கள்.''”
"காவல்துறையில் நிறைய அதிகார நாற்காலிகளை நோக்கிய காய் நகர்த்தல்கள் தெரியுதே?''”
"ஆமாங்க தலைவரே, இப்போதைய டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு ஓய்வு பெறுகிறார். ஜூன் மாதவாக்கில் சங்கர் ஜிவால், அவர் இடத் தில் டி.ஜி.பி.யாக அமர்வதற்கான மூவ்கள் தெரி கிறது. அதேபோல் சென்னை கமிஷனர் பதவியைக் குறிவைத்திருக்கும் உளவுத்துறை அதிகாரியான டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், தான் அமர முடியாத பட்சத்தில் அதில் அமல்ராஜையாவது அமர்த்திவிடவேண்டும் என்ற வியூகத்தில் இருக்கிறாராம். லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி.யான அபய்குமார், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற இருப்பதால், அவர் இடத்திற்கு சங்கர் ஐ.பி.எஸ்.சைக் கொண்டுவர நினைக்கிறாராம் டேவிட்சன். இப்படி நிறைய மூவ்களை அங்கே பார்க்க முடிகிறது.''”
"அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லண்டன் பறந்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே அன்னிய தொழில் முதலீடுகளைக் கவர, முதல்வர் ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்லவிருக்கிறார். அது தொடர்பான சில முன்னேற்பாடுகளை கவனிக்கத் தான் அமைச்சர் உதயநிதி லண்டன் சென்றிருக் கிறாராம். முதல்வர் அங்கே செல்ல இருக்கும் இடங்களுக்கு அவர் அங்கே முன்னோட்ட விசிட் டும் அடிக்க இருக்கிறார். கடந்தமுறை முதல்வ ருடன் வெளிநாடு சென்ற தங்கம் தென்னரசுக்கு பதிலாக, இந்தமுறை புதிய தொழில்துறை அமைச்சரான டி.ஆர்.பி. ராஜா செல்ல இருக் கிறார். அதனால் அவர் தரப்பில் பரபரப்பைப் பார்க்க முடிகிறது. முதல் வருடன் செல்ல இருக் கும் அதிகாரிகளின் பட்டியல் எடுக்கப்பட்டி ருக்கும் நிலையில், இந்த வெளிநாட்டுப் பயணத் தின்போது அங்கே மேற் கொள்ளப்பட வேண்டிய செயல்கள் தொடர்பான கோப்புகளும் அதி வேகத்தில் தலைமைச் செயலகத்தில் தயாராகி வருகின்றன.''”
"திமு.க. மா.செ.க் கள் கூட்டம் பரபரப்பா நடந்திருக்கே?''”
"தி.மு.க. மா.செ.க் கள் கூட்டம் 14ஆம் தேதி நடந்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விவா திக்கவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கு. பூத் கமிட்டிகள் அமைப்பது குறித்தெல்லாம் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கட்சிப்பணியில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று திருவள்ளூர் தி.மு.க. மா.செ.வான வி.ஜி.ராஜேந்திரனும், ராணிப் பேட்டை காந்தியும் கட்சித் தலைவரான ஸ்டாலினிடம் ஏகத்துக்கும் வாங்கிக் கட்டினார்களாம். தேர்தலுக்கு இப்போதே தயாராகிவருகிறது தி.மு.க.''
"காங்கிரஸின் கர்நாடக வெற்றியில் தமி ழகப்புள்ளிகளின் பங்களிப் பும் இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்குப் பல்வேறு காரணிகள் இருந்தாலும் தமிழக காங்கிரசின் செய்தித் தொடர்பாளரும் கர்நாடக தேர்தல் பொறுப்பாளரு மான சசிகாந்த் செந்திலின் உழைப்பையும் பாராட்டு கிறார்கள். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரும்,
அண்ணாமலை யைப் போலவே தமிழகத் தைச் சேர்ந்தவர்தான். அண்ணாமலை என்கிற மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி யின் தேர்தல் வியூகங்களை, இந்த மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தேர்தல் வியூகங்கள் தோற்கடித்திருக்கின்றன என்று காங்கிரஸ் தரப்பு பெருமிதமாய்ச் சொல்கிறது. சசிகாந்த்தை காங்கிரஸ், தங்களின் தேர்தல் பொறுப்பாளராக அறிவித்ததைப் பார்த்த பிறகுதான், அண்ணாமலையை, அங்கே பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக்கியதாம். இப்போது சசிகாந்த் செந்திலுக்கு. பாராட்டுகள் குவிந்தபடி இருக்கின்றன, அதேபோல் காங்கிரசின் தேர்தல் வியூக வகுப்பாளரான சுனிலின் பங்களிப்பையும் அக்கட்சியினர் உச்சி முகர்கிறார்கள்.''”
"எடப்பாடி - ஓ..பி.எஸ். தரப்பினருக்கிடையே விறுவிறுப்பாக லாவணிக் கச்சேரி நடக்கு தேப்பா?''”
"ஓ.பி.எஸ்.ஸும் தினகரனும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டதைப் பார்த்த எடப்பாடி, ’மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்திருக் கிறார்கள். இவர்களை நம்பியோர் கரைசேர மாட்டார்கள்’ன்னு காட்டமாகப் போட்டுத் தாக்கி இருந்தார். இதைக்கண்டு டென்ஷனான ஓ.பி.எஸ்., தினகரனிடம் இதைச் சொல்ல, வைத்திலிங்கத்தை விட்டு இதற்கு பதிலடி கொடுக்கச் சொல்லுங்கள். அவர்தான் இழுபறி மனதோடு இருக்கிறார்னு தின கரன் ஐடியா கொடுத்தாராம். கொஞ்சம் தயங்கி னாலும் ஓ.பி.எஸ். கொடுத்த பிரஷரால், எடப்பாடி யை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட வைத்தி லிங்கம், ’தூதுவிட்டு காலில் விழுந்து முதலமைச்சரான துரோகி எடப்பாடி, உயர்த்தி யவர்களை மாயமான் என்பதா? அந்த மாய மானும் மண்குதிரையும் இல்லையென்றால் அவர் முதல்வராகி இருக்க முடியுமா? அவர் எதற்கும் உதவாத சண்டிக்குதிரை’ என்றெல்லாம் பதிலுக்குப் போட்டுக் கும்மிவிட்டார். இதனால் சூடான மாஜி ஜெயக்குமார், பதில் சொல்ல ரெடியானபோது, ’"வேணாங்க, யாரு யாரைத் தாக்கினாலும் அடிமட்டும் என் முதுகில்தான் விழுது... தாங்க முடியலை'ன்னு அவரைத் தடுத்துட்டாராம் எடப்பாடி.''”
"சரிப்பா, ஓ.பி.எஸ். திடீர்னு கேரளாவுக்கு ரகசிய டூர் போயிருக்காரே.?''”
"உண்மைதாங்க தலைவரே, 10 நாள் ரகசியப் பயணமாக கேரளாவுக்குச் சென்றிருக்கிறார் ஓ.பி.எஸ். இதையறிந்து குழம்பிப்போன எடப்பாடி, அவரை வேவு பார்க்கச் சொல்ல... சம்பந்தப்பட்ட நபர்கள், அவரை கேமராவும் கையுமாக துரத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓ,பி.எஸ். தரப்போ, அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் என்று மழுப்பலாகச் சொல்ல, விபரமறிந்த சிலர், ஓ.பி.எஸ்., அதானி நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்திருந்தார். சமீபத்தில் அந்த நிறுவனம் மோசமாக நிதி நெருக்கடியைச் சந்தித்ததால், தன் முதலீட்டை திரும்பப்பெற அவர் போராடிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அதானி தரப்போ, நாங்கள் இருக்கும் நிலையில், இப்போதைக்கு ஒரு துரும்பைக்கூட எங்களால் அசைக்க முடியாது என்று கைவிரிக்க, இதனால் ஷாக்கான ஓ.பி.எஸ். பல வகையிலும் கொடுத்த பணத்தை மீட்க, முட்டி மோதிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.''”
"விருதுநகர் மாவட்ட அதிகாரி ஒருவரைப் பற்றி பெரும் சலசலப்பு கிளம்பியிருக்கே?”
"விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி திட்ட அதிகாரி எனப்படும் ஏ.பி.ஓ.வாக பணிபுரியும் பீமராஜ் மீது ஏகத்துக்கும் புகார்கள் கிளம்பிக்கொண்டு இருக்கிறது. அங்குள்ள விவசாயிகள் தொடங்கி மகளிர் சுய உதவிக் குழுவினர் வரை அனைவரிடமும் அவர் கலெக்சன் வசூலிக்கிறாராம். தனியார் நிறுவன டெண்டர்களில் கூட அவர் மூக்கை நுழைக்கிறார் என்கிறார்கள். அமைச்சர்களான உதயநிதி, எம்.ஆர்.கே. ஆகியோர் பெயரைச் சொல்லியும் வசூல்வேட்டை நடத்துகிறாராம் பீமன். ஏற்கனவே அவர் தேனி மாவட்டத்தில் இருந்தபோது, அங்கு பெண்கள் தொடர்பான வன்கொடுமைப் புகாரில் சிக்கியதால்தான், விருதுநகருக்குத் தூக்கியடிக்கப்பட்டாராம். இவர் குறித்த புகார்கள் மேலிடத்தில் குவிந்து வருகிறதாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். செய்தித்துறை கூடுதல் இயக்குநரான சிவசரவணன், எடப்பாடியின் தீவிர விசுவாசியாம். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்தித் துறையில் முக்குலத்தோரின் ஆதிக்கம் இருந்ததற்குக் காரணம் இவர்தான் என்கிறார்கள். இந்த நிலையில், இந்த மாதம் ஓய்வு பெறவிருக்கும் இவருக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு கேட்டு, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. செய்தித்துறையை கவனிக்கும் முதல்வரின் மூன்றாவது செயலாளரான சண்முகம், அதை நிராகரித்திருக்கிறார். இருப்பினும், இவருக்குப் பணி நீட்டிப்பு வாங்க, ஒரு முக்கிய அதிகாரி முண்டி யடித்து வருகிறாராம்.''
___________
இறுதிச் சுற்று!
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 15-5-2023 திங்கள் அன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 698 நில அளவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் பொருட்டு, அடையாளமாக 15 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர். மேலும் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண் காட்சிகளையும் பார்வையிட்டார். சில முக்கிய புகைப்படங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் முதல்வருக்கு விவரித்துச் சொன்னார்கள். இந்த நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செய்தித்துறை அமைச்சார் சாமிநாதன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும், விழுப்புரத்திற்கு விரைந்தார் முதல்வர். கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவே இந்த பயணம்!
-இளையர்