காட்டுப்பகுதிக்குள் காதலனுடன் வந்த இளம்பெண்ணை சீரழிக்க முயன்ற நபர், அப்பெண்ணின் காதலனை கருணையே இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் பண்ணப்பட்டி பிரிவுச் சாலையில் ஒரு காப்புக்காடு இருக்கிறது. இந்தக் காட்டுப் பகுதிக்குள் அந்நியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், ஒகேனக்கல்லுக்கு ஜோடியாக சுற்றுலா வரும் இளசுகள், இந்த காட்டுப்பகுதியில் ஒதுங்குவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

murder

Advertisment

மே 1-ஆம் தேதியன்று, தொப்பூர் அருகே உள்ள ஜருகு குரும்பட்டியான் கொட்டாயைச் சேர்ந்த பாலு மகன் முனுசாமி (25), தனது அக்காள் மகள் ரஞ்சனி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புகையில், பண்ணப்பட்டி காப்புக்காட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் காப்புக்காட்டிற்கு வெளியே, பிரதான சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இளஞ்ஜோடிகள் தனிமையில் ஒதுங்கி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், ராணுவ சீருடை அணிந்து கையில் நீளமான நாட்டுத்துப்பாக்கி சகிதமாக அவர்களை நெருங்க, முனுசாமியும் ரஞ்சனியும் வெலவெலத்துப் போனார்கள்.

அவரை, வனத்துறை அதிகாரி என நினைத்த முனுசாமி, "சாரி சார்... கிளம்பிடறோம் சார்...' என்றபடியே ரஞ்சனியை அழைக்கிறார். அதற்கு அந்த மர்ம ஆசாமி, 'அவளை எங்கே கூப்பிடுகிறாய். நீ மட்டும் முதலில் போ... அவளை பிறகு அனுப்பி வைக்கிறேன்' என்று சொல்ல, முனுசாமி அவருடன் வாக்குவாதம் செய்கிறார்.

Advertisment

திடீரென்று மர்ம நபர், தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் முனுசாமியை சுட... இடதுபுற மார்பின் மீது பாய்ந்த தோட்டா, அவரை காவு வாங்கி விடுகிறது. அதிர்ச்சி அடைந்த ரஞ்சனி விருட்டென ஓட்டம் பிடித்து, பிரதான சாலைக்கு ஓடிவந்து கூச்சல் போட... அதற்குள் அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப்பயணிகளும் திரண்டு விட, மர்ம நபரும் தலைமறைவாகிவிடுகிறார்.

murder

இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட, தர்மபுரி மாவட்ட எஸ்.பி.ராஜன் உத்தரவின்பேரில் பென்னாகரம் டி.எஸ்.பி. மேகலா மேற்பார்வையில் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் தண்டபாணி, ஏரியூர் ஆய்வாளர் பாஸ்கர்பாபு உள்ளிட்ட 10 ஆய்வாளர்கள் கொண்ட ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது.

கியூ பிராஞ்ச் மற்றும் அதிரடிப்படை வீரர்களும் சுமார் 12 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள பண்ணப்பட்டி காப்புக்காட்டுக்குள் சல்லடை போட்டு தேடி வந்தனர்.

பச்சைநிற சீருடை அணிபவர் என்பதாலும், நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர் என்பதாலும் பென்னாகரம் கூத்தப்பாடி மடம் செக்போஸ்ட் அருகே உள்ள இருளர் காலனியைச் சேர்ந்த சடையன் மகன் செல்வம் (40) என்பவர் மீது சந்தேகம் இருந்தது.

சம்பவ இடம் அருகே, செல்வத்தின் செல்போன் பயன்பாட்டில் இருந்திருப்பதும் தெரிய வந்தது. காட்டுக்குள் பதுங்கி இருந்த செல்வத்தை மே 7-ஆம் தேதியன்று அலேக்காக கைது செய்திருக்கிறது தனிப்படை. காவல்துறையினரைக் கண்டதும் தப்பிக்க முயற்சித்தபோது தானாகவே (?!) தவறி விழுந்ததில் செல்வத்திற்கு வலதுகால் எலும்பு முறிந்துபோனதாக கூறுகிறது தனிப்படை. தற்போது அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இவருக்கு நாட்டுத்துப்பாக்கி செய்து கொடுத்ததாக கூத்தப்பாடியைச் சேர்ந்த நாகராஜையும் கைது செய்துள்ளனர்.

நாம் ஒகேனக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்...

""சார்... காட்டுப்பகுதிக்குள் ரொம்பநாளாகவே ஒரு கும்பல் சுத்திக்கிட்டுதான் இருக்கு. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் இளம் ஜோடிகளை குறிவைத்து அவர்களிடம் நகை, பணம் பறிக்கிறது, சில நேரங்களில் ஆண்களைக் கட்டிப்போட்டுவிட்டு அவர்களுடன் வரும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற குற்றங்களும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. யாரும் புகார் கொடுப்பதில்லை; பயம்.

பெரும்பாலும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் இளம் காதல் ஜோடிகள் இங்குள்ள முண்டச்சி பள்ளம், சிகரலஹள்ளி ஆகிய காப்புக்காட்டுப் பகுதிகளுக்குள் ஒதுங்கினால் அவ்வளவுதான். அவர்களை சீரழிக்காமல் அந்த கும்பல் விடாது. கற்பை பறிகொடுத்த பெண்கள் இதுவரை ஏன் புகார் அளிக்கவில்லை என்று தெரியாது. ஆனால் இதெல்லாம் குறிப்பிட்ட வனப்பகுதிக்குள் நடந்துக்கிட்டுதான் இருக்கு'' என்றனர்.

mu

தனிப்படையில் இடம் பெற்றிருந்த காவல் ஆய்வாளர் ஒருவரோ, ""நாட்டுத்துப்பாக்கி புழக்கம் எல்லாம் இந்தப் பகுதியில் சர்வசாதாரணம். காட்டுப்பகுதிக்குள் மான், முயல் வேட்டைக்காக பலரிடமும் இதுபோன்ற உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் உண்டு. இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை பற்றியும் விசாரிக்கிறோம்.

இறந்தது வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பையன். இன்னும் தேர்தல் நடத்தை விதிகள்கூட முடியாத நிலையில், இந்த வழக்கு சென்சிடிவ் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை வேகமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

இதுகுறித்து நாம் பென்னாகரம் டி.எஸ்.பி. மேகலாவிடம் கேட்டபோது, ""கைது செய்யப்பட்டுள்ள செல்வத்தின் மீது ஏற்கனவே ஏரியூர், பென்னாகரம், ஒகேனக்கல் காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக தலா ஒரு வழக்கு வீதம் மூன்று வழக்குகள் விசாரணையில் உள்ளன. கொலை செய்யப்பட்ட நபருடன் வந்த சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை. நக்சல் தடுப்புப் பிரிவும் இதுகுறித்து விசாரித்திருக்கின்றனர். இந்த வழக்கில் வேறு யார், யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரிய வரும்'' என்றார்.

-இளையராஜா