“கொரோனாவில் உயிரிழந்த அரசு மருத்துவர் மனைவிக்கு வேலை கொடு!…”
“கலைஞர் அரசு நிறைவேற்றிய அரசாணை 354-ஐ உடனே நிறைவேற்றிடு!”
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சேலம் மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி ஜூன் 11-ஆம் தேதி நடைபயணத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண் டுள்ளது அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு. இதுகுறித்து நம்மிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் மருத் துவர் பெருமாள்பிள்ளை, "இந்தியாவி லேயே சிறந்த கட்டமைப்பைக் கொண் டது தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை. இதுதான் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், 2021-ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது 6 ஆயிரம் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளித்த இம்மருத்துவமனை, இப்போது 15 முதல் 18 ஆயிரம் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளை நம்பி மக்கள் வருகிறார்கள் எனப் பெருமையாக சொன்னார்.
அப்படிப்பட்ட சுகாதாரத்துறை கடந்த 10 ஆண்டுகளாக சிதைக்கப்பட்டுவருகிறது. தமிழ் நாட்டின் 11,876 மருத்துவக் கட்டமைப்புகள் உள்ள பெரிய கட்டமைப்பில் 19,000 அரசு மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள் இது நியாயமா? அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும், நியமனம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை அரசு கவனத்தில் எடுக்கவில்லை.
அதோடு கலைஞர் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக போடப்பட்ட அரசாணை 354-ஐ கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறை வேற்றவில்லை. இதற்காக நாங்கள் போராடிய போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், எங்களருகில் அமர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்ததும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதிதந்தார். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி அப்படியே உள்ளது.
கொரோனாவில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வேலை தராமல் இழுக்கின்றனர். அவருக்கு உடனே வேலை தரவேண்டும் என்று சேலம் மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி ஜூன் 11-ஆம் தேதி நடைபயணத் தைத் தொடங்குகிறோம். 20 மருத்துவர்கள் கோரிக்கை முழக்கங்களோடு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக சென்னை கலைஞர் நினைவிடத்தில் முடிக்கிறோம்'' என்றார்.
மாநில அரசுக்கு எதிராக அரசு ஊழியர் சங்கங்கள் போராடிக்கொண்டுள்ள சூழ்நிலையில் அரசு மருத்துவ சங்கங்களில் ஒன்று நடைபயணம் செல்வதை அரசு எப்படி கையாளப்போகிறது என்கிற கேள்வி எழுகிறது.