த்திஸ்கர் மாநிலம். ஏப்ரல் 2-ஆம் தேதி. மாவோயிஸ்ட்டுகள் தங்கள் திட்டங்களைப் பற்றி விவாதிக்க பிஜாப்பூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் கூடுவதாக மாநில அரசுக்கு தகவல் கிடைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்தான் மாவோயிஸ்ட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் 3 காவலர்கள் உயிரிழந்திருந்தனர்.

பதிலடி தர அரசுத் தரப்பிலும் ஆவலாக இருந்தனர். மேலும், கூட்டத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் வரலாம் என்பதால், பழிக்குப் பழியும் ஆச்சு. மாவோயிஸ்ட்டுகளின் பெருந்தலைகள் பிடிபட்டால் பல்வேறு தகவல்கள் கிடைக்கலாம் என்ற ஆர்வத்தில் வேகமாகத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

m

மாவோயிஸ்ட் வேட்டைக்கு பத்துக் குழுக்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,000 பேரைக் கொண்ட படை ஆயத்தப்படுத்தப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தீவிரவாத, நக்ஸல் படைக்கெனவே பயிற்சிபெற்ற கோப்ரா யூனிட், டி.ஆர்.ஜி., ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் எனப் பல்வேறு பிரிவுகள் இதில் ஈடுபடுத்தப்பட்டன.

Advertisment

மாவோயிஸ்ட்டுகளின் பிடி வலுவாக இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு கோரியும், அவர்களிடமிருந்து பிடுங்கப்படும் நிலத்துக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லும் மாவோயிஸ்ட்டுகளைக் கட்டுக்குள் கொண்டுவரவும், முற்றிலும் ஒழிக்கவும் மத்திய- மாநில அரசுகள் போராடிவருகின்றன. டெக்லுகுடா, ஜோனாகூடா உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, படை பிரிந்துசென்று மாவோயிஸ்ட்டுகளைத் தேடத் தொடங்கியது. தேடுதலை நடத்திவிட்டுத் திரும்பும் வழியில், பெரும்பகுதியைத் திரும்ப அனுமதித்த மாவோயிஸ்ட்டுகள், ஒரு பிரிவினரை மட்டும் சுற்றி வளைத்துக் கொண்டனர்.

mm

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. சில மணி நேரங்கள் நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையின் முடிவில், தேடுதல் படையைச் சேர்ந்த 22 பேர் மரணமடைந்தனர். 31 பேர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். இறந்த, காயமடைந்த வீரர்களின் ஆயுதங்கள், துப்பாக்கிகள், குண்டு துளைக்காத ஆடைகளைக் கைப்பற்றிக்கொண்டு மாவோயிஸ்ட்டுகள் தலைமறைவாகிவிட்டனர்.

Advertisment

மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த வீரர்களில் ஒருவர் பேசும்போது, ""எங்களது திட்டங்களை மாவோ யிஸ்ட்டுகள் அறிந்திருந்தனர் என்றே தெரிகிறது. அவர்களது பேச்சுக்களை ஒட்டுக்கேட்டே திட்டங்களை வகுத்தோம். இப்போது பார்க்கையில், அவர்களது பேச்சுக்களை நாங்கள் கேட்பதைத் தெரிந்தே, அனுமதித்திருக்கின்றனர். வேண்டு மென்றே எங்களை வரவழைத்து அவர்களது பொறியில் சிக்கவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஜீராகான், டெகுலுகுடா கிராமங்களைக் கடக்கும்போது, கிராமத்தில் ஒருவர்கூட காணப்படவில்லை. அப்போதே சுதாரித்திருக்கவேண்டும். ஆனால் தாமதமாகி விட்டது'' என்கிறார்.

துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் பரவலாக டிராக்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதனை தங்களுக்கு மறைவிடமாகப் பயன்படுத்திக்கொண்டு தாக்கினர் என பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் குறிப்பிடுகிறார். இதற்கிடையில் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்ட 210-வது கோப்ரா படையைச் சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்கா காணாமல் போனது தெரியவந்தது.

அஸ்ஸாம் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து சத்தீஸ்கர் விரைந்த அமித்ஷா, ""விரக்தியில் இந்த மோசமான முடிவை மாவோயிஸ்டுகள் எடுத்திருக்கின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு, அவர்களின் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்''’என்றார்.

ஏப்ரல் 5-ஆம் தேதி, காணாமல்போன வீரர் தங்கள் வசம் இருப்பதாகவும், அவரை விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசு தங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு ஒரு நபரை நியமிக்க வேண்டுமென மாவோயிஸ்ட்டுகள் நிபந்தனை விதித்தனர். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் ராகேஷ் ஒரு குடிசையிலிருக்கும் படத்தை வாட்ஸ் அப்பிலும் வெளியிட்டனர்.

m

ஜம்முவிலிருந்த ராகேஷ் சிங்கின் குடும்பம் தங்கள் மகனை பாதுகாப்பாக மீட்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசுத் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கான நபரை நியமிக்க தாமதமாகி வந்தது. இந்நிலையில் சமூக ஆர்வலர் தரம்பால் சைனி, டெல்லம் போரையா மற்றும் 7 பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு, மாநில அரசின் ஒப்புதலுடன் மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ராகேஷை மீட்டுள்ளது.

பிஜாப்பூரைச் சேர்ந்த கணேஷ் மிஸ்ரா, இதுகுறித்துப் பேசும்போது, ""ஏப்ரல் 5-ஆம் தேதி மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரிடமிருந்து வந்த வாட்ஸ்அப் அழைப்பு, ராகேஷ்வர் சிங் அவர் களிடம் இருப்பதாக உறுதிப்படுத்தியது'' எனக் கூறினார். பிஜாப்பூர்-சுக்மா எல்லையைச் சேர்ந்த கிராமம் ஒன்றுக்கு மத்தியஸ்தர்கள் அழைக்கப் பட்டனர். அவர்கள் சொன்ன இடத்துக்கு மோட் டார் சைக்கிளில் சென்று சில மணி நேரங்கள் காத்திருந்த பின், மாவோயிஸ்ட்டுகள் தங்கள் தலைவருடன் வந்ததாகவும் பேச்சுவார்த்தையின் முடிவில் நிபந்தனைகள் எதுவுமின்றி ராகேஷ் விடுவிக்கப்பட்டதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஆனால் ராணுவ மற்றும் காவலர் தரப்பு, தங்கள் பக்கம் நேர்ந்த இழப்புக்கு பதிலடி தருவதில் முனைப்பாயிருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஒரு மோதல் சாத்தியம்தான் என்கிறார்கள் சுக்மா-பீஜப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.