தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகிலுள்ள நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள்- ரோஜா தம்பதி. விவசாயக் குடும்பம். இவர்களது மகள் ஐஸ்வர்யா (வயது 19).
பக்கத்து ஊரான பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நவீன் (19) டிப்ளமோ படித்துள்ளார். நவீனும் ஐஸ்வர்யாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள் என்பதால் நண்பர்களாகப் பழகி பின்னர் காதலர்களாகினர். குடும்ப வறுமை காரண மாக இருவரும் திருப்பூர் பகுதியில் வெவ்வேறு நிறுவனங்களில் வேலைசெய்து வந்துள்ளனர்.
சில மாதங்களாக இருவருமே ஒரே இடத்தில், ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். இந்த தகவலறிந்த ஐஸ்வர்யாவின் உறவினர்கள் உறவுக்காரப் பையனுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்நிலையில், ஐஸ்வர்யாவை அழைத்துவர அவரது சகோதரர் திருப்பூர் வருவதாக இருவருக்கும் தெரியவந்திருக்கிறது.
இதனால் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி நவீனும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவியதால் ஐஸ்வர்யாவின் தந்தை உள்பட உறவினர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
உடனடியாக திருப்பூர் சென்று ஐஸ்வர்யா வேலைசெய்த நிறுவனத்தில் விசாரித்து பெண்ணைக் காணவில்லை என்றதும், பல்லடம் காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யாவின் தந்தை. புகாரின் பேரில் நவீனின் நண்பர்களிடம் விசாரித்து ஐஸ்வர்யா - நவீன் தங்கியிருக் கும் இடத்தைக் கண்டுபிடித்த போலீசார், ஜனவரி 2-ஆம் தேதி ஐஸ்வர்யாவை மீட்டு காவல் நிலையம் அழைத்துவந்து அவரது தந்தை பெருமாள் மற்றும் உறவினர்களுடன் அனுப்பிவைத்துள்ள னர். தந்தை வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஐஸ்வர்யாவை, சில நாட்களாக வெளியில் காணாததால் சந்தேகமடைந்த நவீன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில், போலீசாருக்கு மற்றொரு வீடியோ கிடைத்துள்ளது. அதில் ஐஸ்வர்யாவை அவரது தந்தை உள்பட உறவினர்களே கொன்று எரித்துவிட்டதாகத் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா உள்ளிட்டவர்களைத் தேடினர் போலீஸார். அவர்கள் ஐஸ்வர்யாவை எரித்த தடயம்கூட இல்லாமல் சாம்பலையும் அள்ளிக் கொட்டிவிட்டு தலைமறைவாகியிருந்தனர். அவர்களைத் தேடிப்பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல் லாமல் ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து நடத்திய விசாரணையில், “"ஜாதி மாறி திருமணம் செய்ததால் எங்களுக்கு அவமானமாக இருந்தது. கௌரவமாக வாழ்ந்த நாங்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. அதனால் ஐஸ்வர்யாவை கொன்று மயானத்தில் வைத்து எரித்துவிட்டோம்'’எனக் கூறியுள்ளனர்.
அதனை மறைத்து ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக உறவினர்களிடம் சொல்-, அவர்கள் உதவியுடன் உடலை எரித்துவிட் டோம் என்று கூறி, யாரெல்லாம் உடனிருந்தனர் என்பதையும் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த போலீசார் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா இருவரை யும் கைதுசெய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை, பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் கண்டறிந்த பல்லடம் போலீசார், வழக்குப் பதிவு செய்யாமல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தா மல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பி வைத்ததால்தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். இந்நிலையில் பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ்வர்யாவின் கணவர் நவீனுடன் பேசியபோது, “"நானும் ஐஸும் ஒண்ணா படிச்சவங்க. 5 வருசமா காத-ச் சோம். போன மாசம் அவங்க அண்ணன் வந்து ஊருக்கு கூட்டிப்போறதா சொன்னதால அங்கிருந்து வெளியேறி நண்பர்கள் துணையோட திருமணம் செஞ்சுகிட்டு நண்பன் ஏற்பாடு செஞ்சிருந்த வீட்டில் தங்கியிருந்தோம். இந்த தகவல் தெரிஞ்சு அவங்க அப்பா, உறவினர்கள் வந்து நாங்க தங்கியிருக்கும் இடத்துக்கு பல்லடம் போலீசாரை அனுப்பி கூட்டிப் போனாங்க. ஐஸ் போகமாட்டேன்னு சொன்னா. நானும் வருவேன்னு சொன்னேன். போலீஸ்காரர் "நீ வராத...… வந்தா அடிப்பாங்க'ன்னு சொல்-ட்டுப் போயிட்டார். அப்பவே நானும் ஒரு பைக்ல ஸ்டேசன் போனேன். ஐஸ் அப்பா அவளை கார்ல கூட்டிப் போறதைப் பார்த்துட்டு, அந்த கார் பின்னாலயே பைக்ல அவங்க ஊர் வரைக்கும் போயிட்டு எங்க வீட்டுக்குப் போயிட்டேன். மறுநாள் என் நண்பன் போன் பண்ணி அந்தப் பொண்ணைக் கொன்னுட்டாங்கன்னு சொன்னான். அதைக் கேட்டு அவங்க வீட்டுக்குப் போகக் கிளம்பினேன். எங்க வீட்ல தடுத்து நிறுத்திட்டாங்க. அப்பறம்தான் போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுத்தேன். எங்களை விட்டிருந்தா நாங்க எங்கயோ போய் பொழைச் சிருப்போம்''’என்றார் கண்ணீருடன்.
பகுத்தறிவுக்குப் பேர்போன தமிழகத்தில் ஜாதியப் பெருமிதமும் ஆணவக்கொலை மனோபாவங்களும் அதிகரித்துவருவது கவலை யளிக்கிறது.
-செம்பருத்தி