மணிப்பூர் ஆயத்தமாகி நிற்கிறது, இரண்டு கட்டமாக நடைபெறும் சட்ட மன்றத் தேர்தலுக்கு. 2017-ல் மொத்தமுள்ள 60 தொகுதி களில் 28 தொகுதிகளை காங்கிரஸ் வெல்ல, 21 தொகுதி களை வென்ற பா.ஜ.க. கூட்டணி, அன்றைய ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா துணையுடன் காங்கிரஸின் காதில் பூவை வைத்து அழகுபார்த்தது.
பழசை மறந்துவிட்டு விறைப்பாகத் தேர்தலுக்கு தயாராகி நிற்கிறது காங்கிரஸ். ஆயுதப் படைச் சட்டம் வாபஸ், ஆண்டுக்கு புதிதாக 50,000 வேலைவாய்ப்பு, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு மூன்றிலொரு பங்கு ஒதுக்கீடு, வயதானவர்களுக்கு இலவச சட்ட உதவி என நீளமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இதற்குமுன் தொடர்ந்து மூன்று முறை மணிப்பூரில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான். அப்போதெல்லாம் ஆயுதப்படை சட்டத்தை அகற்றச் சம்மதிக்காத காங்கிரஸ், ஆட்சியை இழந்த பிறகாவது மனம் மாறியிருப்பது நல்ல அறிகுறிதான். முதல்வர் வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும் முன்னாள் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங் தலைமையில் தேர்தலை எதிர் கொள்கிறது காங்கிரஸ்.
பா.ஜ.க.வின் கரன்சிக் கட்டுகளுக்கும் ஆசை வார்த்தைகளுக்கும் காங்கிரஸிலிருந்து கிட்டத்தட்ட 10 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி, கட்சித் தலைமையின் கவலையை அதிகரித்திருக்கின்றனர். கோவாவைப் போலவே மணிப்பூரிலும் வேட்பாளர்களை கோவில், தேவாலயம், மசூதி முன்பு "கட்சி தாவமாட்டேன்' என சத்தியப் பிரமாணம் செய்யவைத்தே சீட் கொடுத்திருக்கின்றனர்.
பா.ஜ.க., தேசிய மக்கள் கூட்டணி, ஜனதா தளம்(யூ), நாகா மக்கள் முன்னணி என பிரதான கட்சிகள் அனைத்துமே தனித்துப் போட்டியிடுவது காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்புதான். மணிப்பூர் மக்களின் மனநிலை குறித்த தன் நீண்ட கால அனுபவத்தை வெற்றிவாய்ப்பாக மாற்ற வியூகம் வகுக்கிறது காங்கிரஸ் தலைமை. தனித்துப் போட்டியிடுவதைக் காட்டிலும் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி போன்றவற்றை கூட்டணியில் இணைத்திருந்தால் வலுவான போட்டியை ஏற்படுத்தியிருக்கலாம்.
60 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது பா.ஜ.க. அதில் 10 பேர் காங்கிரசி லிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவியவர்கள். கடந்த முறை வாய்ப்பளிக்கப்பட்ட பலருக்கும் சீட் மறுக்கப்பட, மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங், மோடி உருவப் பொம்மைகள் மாநிலமெங்கும் கொளுத்தப்பட்டு வலுவான எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கிறது.
தேர்தலுக்குத் தேர்தல் வாக்கு சதவிகிதத்தை யும் தொகுதி எண்ணிக்கையையும் அதிகரித்துவரும் பா.ஜ.க., இந்தத் தேர்தலிலும் தன் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறது. அதனால்தான் கூட்டணியின்றி களம் காண்கிறது. எதிர்க்கட்சிகளில் செல்வாக்குள்ளவர் களை மட்டும் தன் முகாமுக்கு இழுத்து பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்துகிறது.
ஐந்தாண்டு ஆட்சியில் ஆயுதப் படை சட்டம் வாபஸ் கோரிக்கையைத் தவிர, எதிர்மறையான விஷயம் எதுவும் பா.ஜ.க.வுக்கு இல்லை. அதனால் துணிவே துணையென களமிறங்குகிறது. மாநிலத் துக்கு மாநிலம் பா.ஜ.க. பயன்படுத்தும் உதாரண மான டபுள் இன்ஜின் உதாரணத்தை, மணிப்பூருக் கும் மோடி தெரிவித்திருக்கிறார். அதாவது பா.ஜ.க. வுக்கு மாற்றான கட்சி ஆட்சிக்கு வந்தால் மத்திய நிதி தாராளமாகக் கிடைக்காது எனும் மிரட்டலின் பாலீஷ் செய்யப்பட்ட வாசகங்கள்தான் அவை. சீட்டு மறுக்கப்பட்ட 11 பா.ஜ.க.வினர் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, ஜனதா தளம்(யூ) என இதர கட்சிகளின் கதவைத் தட்டியிருக்கின்றனர். இதர கட்சிகளான நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, ஜனதா தளம் போன்றவை குறைந்த சதவிகித மக்களின் ஆதரவையே கொண்டவை. இவை ஒட்டுமொத்த மணிப்பூர் மக்களின் வாக் கைப் பெறுமளவுக்கு பெரிய கட்சியாக வளர்ச்சி யடையாதவை. சரி, இந்தக் கட்சிகளாவது கை கோர்த்து, தேசிய கட்சிகளுக்கு ஒரு வலுவான மாற்று என களம் நின்றிருக்கலாம். அதுவும் நடக்கவில்லை.
ஜனதா தளம் (யூ) கட்சிக்கு மணிப்பூரில் பெரிய அடித்தளம் கிடையாது. இருந்தபோதும் 37 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க.வில் இடம் மறுக்கப்பட்டவர்கள், பெரிதாய் மக்களுக்கு முகம் தெரியாதவர்கள்தான் இக்கட்சியின் வேட் பாளர்கள். கொரோ னா கட்டுப்பாடும் இருக்கிற நிலையில் ஜனதா தளம், சமூக ஊடகப் பிரச்சாரத் தையும், சிறிய அளவிலான கூட் டங்களையும் நம்பி யே செயல்படுகிறது. பீஹார் வேறு, மணிப்பூர் வேறு என்பதை தேர்தல் முடிவில் அறிய வருவார்கள் என பா.ஜ.க. கேலிசெய்கிறது.
"அருணாசலப்பிரதேசத்தில் 7 தொகுதிகளில் ஜனதா தளம்(யூ) வென்றுகாட்டியதை நாங்கள் மறக்கவில்லை. அதுபோல பெரிய கட்சிகளுக்கு எங்களது வெற்றி ஆச்சர்யமாக அமையும்'' என்கிறார் கட்சியின் மாநிலத் தலைவரான ஹாங்கன்பாவ்
நாகா மக்கள் முன்னணி மொத்தத்தில் பத்து தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. மகாராஷ் டிரத்தில் முட்டிக்கொண்டது முதல் பா.ஜ.க.வுடன் மல்லுக்கட்டும் சிவசேனாவும் மணிப்பூர் தேர் தலில் களமிறங்குகிறது. ஆனால் ஆழம் பார்ப்பதற்காக வெகுசில தொகுதிகளிலேயே போட்டியிடுகிறது.
தண்ணீர்ப் பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், ஆயுதப் படைச் சட்டம், சமீ பத்தில் கர்னல் விப்லப் திரிபாதியைக் குடும் பத்துடன் கொன்ற கிளர்ச்சியாளர்கள் போன்றவை தான் மணிப்பூரின் பிரதான பிரச்சினைகள். கருத்துக் கணிப்புகளைப் பொய் யாக்க, காங்கிரஸ் புதிய வியூகங் களை வகுத்தாக வேண்டும்!