"ஹலோ தலைவரே… இடைக்கால பட்ஜெட்டோடு தமிழக சட்டமன்றம் 17-ஆம் தேதி கூடுது. தேர்தல் காலம்கிறதனால பட்ஜெட்டை மிகக் கவனமா தயாரிச்சிருக்காராம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.''”
"ஆமாம்பா, நானும்கூட கேள்விப்பட்டேன்.''”
"அதைப் பார்த்துட்டு சிறப்பா தயாரிக்கப் பட்டிருக்குன்னு நிதியமைச்சரை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். அதேசமயம் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கருப்புச் சட்டை போட்டுக்கொண்டோ அல்லது சட்டையில் கருப்பு பேட்ஜை குத்திக்கொண்டோ சட்டப்பேரவைக்கு போகலாமான்னு அ.தி.மு.க.வுல ஒரு ஆலோசனையும் நடந்திருக்கு.”
"இந்த மாணிக்கம் தாகூருக்கு என்னாச்சு..? தி.மு.க.வுடன் மல்லுக்கட்டுவதன் பின்னணி என்ன?’ கொஞ்சம் விவரமா சொல்லுப்பா...''’
"தலைவரே.. தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சிய வெளிலயிருந்து யாரும் வந்து கெடுக்க வேண்டிய தில்லை.. அவங்கள அவங்களே கெடுத்துக்குவாங்க. விருதுநகர் எம்.பி. தொகுதிக்கும் மாணிக்கம் தாகூருக்கும் என்ன சம்பந்தம்? விருதுநகர்ல போட்டியிட உள்ளூர்ல காங்கிரஸ்காரங்க யாருமே இல்லையா? அப்படின்னு நிறைய பேர் அப்பவே பேச ஆரம்பிச்சாங்க. அதுக்குக் காரணம் ஒண்ணுதான். டெல்லி தலைமை எப்பவுமே தங்களோட நலனைத்தான் முதல்ல பார்க்கும். லோக்கல் காங்கிரஸ் தலைவர்கள் அவங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. ‘மாணிக்கம் தாகூர் நமக்கு சரியா வருவாராங்கிற ஒரே கணக்குதான். அந்த டெல்லி சிபாரிசுலதான், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூரை வலிய கொண்டுவந்து விருதுநகர்ல திணிச்சாங்க. இங்க தி.மு.க.வ பத்தி தெரியாதா? காங்கிரஸ் கட்சி யாரை வேட்பாளரா நிறுத்தினாலும், ‘நமக்கென்னன்னு நினைச்சு, கூட்டணி உறவுக்காக ரொம்ப ஸ்ட்ராங்கா கை கொடுத்தாங்க. இதுல உண்மையிலேயே கொடுமை என்னன்னா.. தங்களோட தொகுதிக்கு துளியும் சம்பந்தமில்லாத மாணிக்கம் தாகூரை ஜெயிக்க வச்சு, ஆகச்சிறந்த பார்லிமென்டேரியன், வைகோ மாதிரியான தலைவரை விருதுநகர் தொகுதில தோற்கடிச்சதுதான். மாணிக்கம் தாகூர்னு வட நாட்டுக்காரன் மாதிரி பேரை வச்சுக்கிட்டு தமிழ் நாட்டு அரசியல்ல குப்பை கொட்ட முடியாது. இனிமே உன் பேரு மாணிக்கம். நான் அப்படித் தான் கூப்பிடுவேன். நீயும் பேரை மாத்திக்கன்னு அட்வைஸ் பண்ணுனது யாரு தெரியுமா? நம்ம அண்ணாச்சி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.தான். விருதுநகர் தொகுதி அவருக்கு ஒரு அரசியல் முகவரி. அவ்வ ளவுதான்.. இங்க ஜெயிச்சா போதும்.. டெல்லி போயி அரசியல் லாபி பண்ணணும். தொகுதி பிரச் சனை, கட்சி கட்டமைப்பு, உள்ளூர் தலைவர்கள் - இதெல்லாம் அவரு கணக்குல வராது. அவரோட மைண்ட் எப்பவும் தன்னை சுத்தியே ஓடும். நான் மேலிடத்து ஆளு. ராகுல் காந்திக்கு ஃப்ரண்ட் அப்படீன்னு, தமிழ் நாட்டுல கெத்து காட்டுறதுல ஒரு குறைச்சலும் இல்ல.''”
"தொகுதியில காங்கிரஸ் கட்சி வட்டாத்துல எம்.பி.க்கு என்ன கெட்ட பேரு?''
"தலைவரே அத நான் சொல்றதவிட அவங்க குரல்ல கேக்கு றதுதான் சரியாயிருக்கும்.''
"ம்...''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/rang1-2026-02-16-15-57-52.jpg)
"அடிப்படையிலே எங்க கட்சிக்காரங்க யாரையும் அவர் பொருட் படுத்துறதே இல்ல. கல்யாண வீடு, சடங்கு வீடு, இழவு வீடு எல்லாத்துக்கும் அப்பப்ப வருவார், தலையைக் காட்டுவார், போயிடுவார். அதுக்கு மேல கட்சித் தொண்டனுக்கு எதுவும் பண்ணல. அதிகாரம், பொறுப்புனு இப்ப பேசுறார். ஆனா நடைமுறையில என்ன கிடைச்சது? விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் - ஒரு காலத்துல காங்கிரஸ் வலுவா இருந்த நகராட்சிகள். இப்ப? ஒரு துணைத் தலைவர் பதவி கூட வாங்கிக் கொடுக்க முடியல. சிவகாசில ஒரு துணை மேயர் பதவிக்கே வழி செய்ய முடியல. வாய்ப்பு இருந்தும் அமைச்சர்கள் கிட்ட பேசி எதுவும் பண்ணல. ஒரு காலத்துல நகராட்சித் தலைவர்கள் இருந்தாங்க. யூனியன்கள்ல பதவிகள் இருந்தது. இப்போ எந்த நகராட்சியிலயும் இல்லை.. எந்த யூனியன்லயும் இல்லை. இப்படியிருந்தா கட்சி எப்படி வளரும்? அன்னைக்கு இல்லாத உணர்வு.. திடீர்னு இப்ப வந்துருச்சா? கீழே உழைக்குற தொண்டர்கள் பலனடைய வேண்டிய நேரம் வந்தா, வாய்ப்புகளை கைவிட்ருவாங்க. பாராளுமன்றம், சட்டமன்றம் வந்தா சீட் எண்ணிக்கை பேசுவாங்க. உள்ளாட்சித் தேர்தல் வந்தா? மேல இருந்து யாரும் முன்வரமாட்டாங்க. இதான் கீழ்மட்டத் தொண்டர் களோட மனக்குமுறல். எலக்ஷன் வரைக்கும் நமக்குத் தேவை. முடிஞ்சதும்? தொண்டர்கள் புறக்கணிப்பு. அப்புறம் எப்படி கட்சி வளரும்? இந்த மாவட்டத்துல கம்யூனிஸ்டுகளே சில இடங்கள்ல பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகள் வாங்குறாங்க. நம்ம காங்கிரஸுக்கு இந்த மாவட்டத்துல? பூஜ்யம்.. மூத்த தலைவர்கள் எல்லாம் இப்ப வெறும் பார்வையாளர்கள்தான். இதான் உண்மை... இதுதான் தலைவரே தொண்டர்கள் வாய்ஸ்.''
"இந்த மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்ர வர்த்தியும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள்னு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒருவரே கிழிச்சி தொங்கவிட்டிருக்காரே?''
"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, பா.ஜ.க., த.வெ.க.வோட மறைமுக டீலிங்கை அம்பலப்படுத்தியிருக்காரு. இதைப்பற்றி சொல்றப்ப, "கூட்டணியில் கணக்கு பார்க்கக்கூடாது. மதச்சார்பற்ற கட்சிகள் அனைத் தும் ஓரணியில் நின்று வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு எதிராகவும், கொள்கையே இல்லாத த.வெ.க.வுக்கு எதிராகவும் நாம் களம் காணவேண்டும். கொள் கையே இல்லாத கட்சியை விஜய் நடத்திக்கிட்டி ருக்கார். தி.மு.க. எதிர்ப்பு மட்டுமே ஒரு கொள் கையாக இருக்க முடியாது. கரூர் சம்பவத்துக்கு பிறகு பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லாதவரோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி யமைக்க எந்த வாய்ப்பும் இல்லை. இப்படி பேசுவதால் தி.மு.க. கைக்கூலி என்று சொல்வார்கள். நான் மாணிக்கம்தாகூர், பிரவீன் சக்ரவர்த்திபோல் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கைக்கூலியாக இல்லாமல், தி.மு.க. கைக்கூலியாக இருப்பதில் பெருமையடை கிறேன். தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக உடன்பாடு கையெழுத்திட்ட மறுநாள், பா.ஜ.க.வின் கைக்கூலிகள் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். ராகுல்காந்திக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. பிரவீன் சக்கரவர்த்திக்கும் தமிழ்நாடு காங்கிரசுக் கும் என்ன தொடர்பு இருக்கு? யார் என்ன பேசினாலும், என்ன சலசலப்பு ஏற்பட்டாலும் அறிவாலயத்தில் ஐவர் குழு சென்று பேசி இந்தக் கூட்டணி நிச்சயமாக முடிவு செய்யப்படும்' என்று மாணிக்கம் தாகூரையும், பிரவீன் சக்ரவர்த்தியையும் கிழிச்சி தொங்கவிட்டிருக்கார் தலைவரே.''
"தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர், பியூஷ்கோயல் பண்ண வேண்டிய வேலையை சமீபநாட்களா பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் பண்ணிக்கிட்டிருக்காரே..''”
"நாடாளுமன்றம் நடந்துக்கிட்டு இருந்ததினால அவரால தமிழகத்துக்கு வரமுடியலையாம். அதனாலதான் பி.எல்.சந்தோஷ் வந்துபோயிக்கிட்டு இருக்காரு, 14-ஆம் தேதி சென்னையில் பா.ஜ.க. தலைவர்களுடன் நீண்ட ஆலோ சனையில் ஈடுபட்டாரு சந்தோஷ். அப்போ, அ.தி.மு.க.விடம் கேட்டுப் பெறவேண்டிய தொகுதிகளின் எண் ணிக்கையையும், எந்தெந்த தொகுதிகள் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படவேண்டும் கிறதையும் இறுதி செஞ்சிருக்காங் களாம். அதன்படி, 60 தொகுதிகள் அடங்கிய பட்டியல் ரெடியாகியிருக்கு. அதை எடப்பாடியிடம் கொடுத்து, அந்த 60-லிருந்து 40 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்னு உத்தரவு போடவிருக்கு பா.ஜ.க. ஆனா, பா.ஜ.க.வுக்கு மட்டும் 40 தொகுதிகளை எடப்பாடி கொடுப்பாராங்கிறது கேள்விக்குறி. அவரைப் பொறுத்தவரை, 20 தொகுதிகள்தான் பா.ஜ.க.வுக்குன்னு தீர்மானிச்சிருக்கிறாராம்.''”
"கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளைக் கைப்பற்ற பிரதான கட்சிகள் திட்டமிடுதாமே?''”
"அ.தி.மு.க. கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க, பா.ம.க., த.மா.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப் படும் தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடவும், அதேமாதிரி, தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க.வும் திட்டமிடுறாங்க தலைவரே. தோழ மைக் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் அதிகப்படி யான சீட்டுகள், எதிரிலிருக்கும் பிரதான கட்சிக்கு ஜெயிக்கிற வாய்ப்பை ஈசியா கொடுக்கும்னு கூட்டிக்கழிச்சி கணக்கு போடுறாங்களாம்.''”
"நக்கீரன் செய்தி எதிரொலியா காரைக்குடி வடக்கு எஸ்.ஐ. பிரேம்குமார், ஏட்டையா கிருஷ்ண குமார் சஸ்பெண்டாகியிருக்காங்களாமே?''”
"ஆமாம் தலைவரே.. அதிகார துஷ்பிர யோகம் செய்த காரைக்குடி வடக்கு எஸ்.ஐ. பிரேம் குமார், ஏட்டையா கிருஷ்ணகுமார் குறித்து கடந்த இதழ் ராங்கால் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். நக்கீரனில் செய்தி வெளியான அன்று, எஸ்.ஐ.யை யும், ஏட்டையாவையும் அழைத்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் ரொம்பக் கோபமா கண்டிச்சவர், இருவருக்குமான பணிநீக்க உத்தர வினையும் அங்கேயே கொடுத்திருக்கார். அதே சமயம், காரைக்குடி வடக்கு ஸ்டேஷன் எல்கைக் குட்பட்ட இரண்டு பேக்கரிகளுக்கு "முருகன்' பெயர் கொண்ட எஸ்.ஐ. ‘"அது என்ன? ஸ்டேஷனிலிருந்து எது கேட்டாலும் பணம் கேட்கிறீங்களாமே..? சம்பளம்தான் வருதுல்ல. அப்ப பணத்தை கொடுத்து வாங்கிட்டுப் போங்கன்னு சொல்லிருக் கீங்க. போக்குவரத்து விதி களை முறைப்படி கடைப் பிடிக்கிறீங்களா? எங்க ளுக்கு ஒருநாள் வரும்' என எச்சரித்துவிட்டுச் சென்ற தகவலும் மாவட்ட எஸ்.பி. காதுக்குப் போயிருக்கு.''”
"தேனி எம்.பி. பையன் பற்றி ஒரு செய்தி அடிபடுதே என்ன விவரம்?''”
"தேனி கொடுவிலார்பட்டி அருகில் "தேனி பாண்டியம்மாள் அகாடமி' எனும் கல்வி நிறுவனத்தை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் நிஷாந்த் தங்க தமிழ்செல்வன் திறக்கவருகிறார் என மாவட்டம் முழுமைக்கும் போஸ்டர் ஒட்டியுள்ளது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம். இவர் தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வனின் மகன். "உச்சநீதிமன் றத்தில் நேரடியாக வழக்குத் தாக்கல்செய்து வாதிடும் "Advocate#on-Record" (AOR)ஆக குறைந்தது 5 ஆண்டுகள் வழக்கறிஞர் அனுபவம் (மாநிலப் பட்டியலில்) அகில இந்திய பார் கவுன்சில் (AIBE) தேர்ச்சி, மற்றும் உச்சநீதிமன்றம் நடத்தும் AOR தேர்வில் வெற்றிபெறுவது கட்டாயம். உச்சநீதிமன்றம் நடத்தும் Advocate-on-Record தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். இப்படி யிருக்க, தகுதியேயில்லாத ஒருவர் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடுகிறார் என் பதுபோல் போஸ்டர் ஒட்டுவது எப்படி சரியாகும்? உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு தேனி மாவட்ட மக்கள் பிரதி நிதியின் மகனே தவறுசெய்யலாமா? இதனால் மாவட்ட மக்கள் மத்தியில் வழக்கறிஞர்கள் மீதான நம்பிக்கை யை இழக்க நேரிடும். திறப்பு விழா காணும் கடைக்காரர் தன்னிச்சையாக இந்த விளம்பர வாசகத்தை இணைத்து விளம் பரப்படுத்தியுள்ளார் என்ற பாணியில் எடுத்துக்கொண்டாலும், இது ஏற்புடையது அல்ல. என்று சமூக வலைத்தளத்தில் கொந்தளித்து வருகின்றனர் இளம் வழக்கறிஞர்கள்.''
"தென்மாவட்டத்தைச் சேர்ந்த அந்த முன்னாள் அமைச்சருக்கு துணைமுதல்வர் கனவு இருக்குதாமே?''
"உங்க கழுகுக் கண்ணுல படலைன்னாதான் ஆச்சரியம் தலைவரே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றிபெறும். அண்ணன் எடப்பாடி முதலமைச்சராக பதவியேற்பார். நான் துணை முதலமைச்சரா பதவியேற்பேன்னு என் ஜாதகம் சொல்லுது என தனது பெரிய பல் தெரிய சிரிக்கின்றாராம் தென்மாவட்டத்தைச் சேர்ந்த "மங்கலத்துக்காரர்'. ஓ.பி.எஸ்.ஸுக்குப் பிறகு அந்த சமூக ஓட்டுக்களைக் கொண்டுவர அவரை விட்டால் யார் இருக்கா? கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சர். நம்முடைய சமூகத்தை சேர்ந்தவர் துணை முதல்வர். இந்த காம்பினேஷன் எப்படி இருக்கு? என அவரது ஆதரவாளர்களும் உசுப்பேத்திவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'ஜெயசுதர்சன், பிரபாகரன், கிருஷ்ணமுரளி, ராஜவர்மன், ரவிச்சந்திரன், தூவல் முனியசாமி, மகேந்திரன், மாணிக்கம், பெரியபுள் ளான், பாளை ஜெரால்டு உள்ளிட்டவர்கள் மங்கலத்துக்காரரின் ஆட்கள், "எங்களுக்குத்தான் சீட்' எனக்கூறிய நிலையில் 64 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இவர்கள்தான் வேட்பாளர்கள் என எடப்பாடியிடம் பட்டியல் கொடுக்க நாள் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றாராம் மங்கலத்துக்காரர்.''
"சசிகலா -எடப்பாடி பஞ்சாயத்து அமித்ஷா வரை போயிருக்காமே?''”
"சசிகலா, எடப்பாடிமேல் கடுமையான கோபத்தி-ருக்கிறார். கமுதி அருகே ஒரு புதுக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அதற்கான கால்கோள் விழாவுக்காக, தின கரனிடமிருந்து வந்த நாச்சியார் என்ற பெண்ணுடன் கலந்து கொண்டிருக்கிறார். சசிகலா, ஓ.பி.எஸ். இருவரும் எடப் பாடிக்கு எதிராகக் களம் காண்கிறார்கள். தென்மாவட்டங்கள் முழுவதும் அ.தி.மு.க.வுக்கு எதிராக முக்குலத்தோர் வாக்குகளை அணி திரட்டுகிறார்கள். இதைப்பற்றி எடப்பாடி, அமித்ஷாவிடம் புகாராகச் சொல்லியுள்ளார். அமித்ஷாவும் இதுகுறித்து சசிகலாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். நான் ஜெ.வுடன் இருந்தவள், என்னை விதவையெனத் திட்டுகிறார் எடப்பாடி என சசிகலா குற்றச்சாட்டுகளை அடுக்க, சசிகலாவையும் ஓ.பி.எஸ்.ஸையும் சமாதானப்படுத்த சாம, தான, பேத, தண்டம் என அனைத்துவழிகளையும் பயன்படுத்த ஆயத்தமாக இருக்கிறது பா.ஜ.க. முதலில் சசிகலா எதிர்பார்க்கும் சலுகைகளை அ.தி.மு.க.விடமிருந்து பெற்றுத் தருவதாக அமித்ஷா சொல்லியிருக்கிறார். அமித்ஷா அனுப்பிவைத்த ஆளிடம் அவர்களுக்கு இணக்கமாகப் பேசினாலும், அவர் சமரசமாகவில்லை. சசிகலாவுக்கு நெருக்க மானவர்களோ, சசிகலா எடப்பாடியை ஒழித்துக்கட்டும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.''”
"தே.மு.தி.க.வை ஜக்கி ரூட்டுல பா.ஜ.க. வழிக்குக் கொண்டுவந்திருக்காமே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/rang2-2026-02-16-15-58-22.jpg)
"ஆமாம் தலைவரே, பிரேமலதாவை வழிக்குக் கொண்டுவர ஜக்கி வாசுதேவைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. பிரேமலதா 300 கோடி கேட்டு இரு கழகங்களிடமும் பேரம் பேசினார். இந்நிலையில் ஜக்கி மூலம் பிரேமலதாவிடம் பேசி, கடைசியாக பிரேமலதாவுக்கு 70 கோடியும், எல்.கே. சுதீஷுக்கு ராஜ்யசபா சீட்டும் தரப்படுமென ஜக்கி உறுதியளித்திருக்கிறார். ஈஷாவில் நடைபெற்ற மகாசிவராத்திரி அன்று வேலுமணி, பிரேமலதா, எல்.முருகன் மூவரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்பிக்கையாக இருக்கிறதாம் பா.ஜ.க.''”
"சரி, நானும் ஒரு விஷயம் சொல்றேன்... தொண்டாமுத்தூ ரில் வேலுமணி தோற்றுவிடுவார் என பல ஜோசியர்களும் கூறி யிருப்பது அவரை அப்செட் ஆக்கியிருக்கு. அதனால் முடங் கிடாம வேலுமணி பல யாகங்களையும் பூஜைகளையும் தொடர்ந்து நடத்தி ஜோசியத்தை மாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இன்னொரு முக்கியமான விஷய மும் இருக்குப்பா. மதுரையில் துணை மேயராக இருந்தவரும், மு.க.அழகிரியின் வலதுகரமாக இருந்தவருமான மன்னன், தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைகிறார்.''
_____________
ப.சி. தலைமையில் புதிய அணி!
கனிமொழி -ராகுல் சந்திப்பின்போது, "தமிழக காங்கிரஸ் தலைவர்களின் நாவை அடக்கியிருக்கச் சொல்லுங்கள். ஏனென்றால் உள்ளூர் தலைவர்கள்தான் தேர்தல் நேரத்தில் லோக்கல் தி.மு.க.வினரிடம் இணைந்து பணி செய்பவர்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு உருவாகிவிட்டால் அதை எந்த தலைவராலும் ஒட்டவைக்க முடியாது''’எனத் தெளிவாக ராகுலிடம் கூறப்பட்டது. அந்த சந்திப்புக்குப் பின்புதான் மாணிக்கம் தாக்கூர் தி.மு.க.வுக்கு எதிராக வெறியோடு பேசி வருகிறார். அவரது பேச்சுக்கள் தி.மு.க.வுக்கு எரிச்சலூட்டுகிறது என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் அடுத்த எம்.பி. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டால் தன்னை தி.மு.க.வினரே தோற்கடிப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு ‘"இனி நான் எம்.பி. தொகுதிக்கு போட்டியிடமாட்டேன்''’என அறிவிக்கிறார். “இதே நிலைமைதான் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை தோற்கடிக்க தி.மு.க. தயாராகி வருகிறது. அத்துடன் "ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசை உடைத்து, புதிய அணி உருவாக வாய்ப்பு உள்ளது' என்கிறார்கள் அரசியல் கூர்நோக்கர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/16/rang-2026-02-16-15-57-27.jpg)