நெல்லையிலிருந்து கடந்த மே-27 அன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாஞ் சோலைக்கு வந்துகொண்டி ருந்த அரசுப் பேருந்தை, வழக்கம்போல் மணிமுத் தாறின் மலைமீதிருக்கும் வனத்துறை சோதனைச்சாவடியிலுள்ள வனத் துறையினர் நிறுத்தி சோதனை செய்திருக்கிறார் கள். பஸ்சில் மாஞ்சோலை சென்றவர்களில் 28 பேர் சுற்றுலா செல்வதாகச் சந்தேகப்பட்டு அவர்களை வனத்துறையினர் சோதனைச் சாவடியில் இறக்கியுள்ளனர். ஆனால் அந்தப் பயணிகளோ நாங்கள் யாரும் மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்லவில்லை. மாஞ்சோலைப் பகுதிகளிலிருக்கும் தங்களது உறவினர்களின் வீட்டிற்குச் செல்வதாக சொல்ல, பயணிகளுக் கும் வனத்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பயணிகளின் விளக்கத்தை வனத்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
மலைச்சாலையின் நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணிகளின் விவகாரமறிந்த அம்பை தாசில்தாரான சுமதி, அம்பை கோட்ட வனச்சரக அதிகாரிகள் நித்யா, தமிழரசன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில்சென்று ஆய்வுசெய்து அவர் களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பயணிகள் மாஞ்சோலையிலிருக்கும் தங்கள் உறவினர்களின் வீட்டிற்குச் செல்வதை அங் குள்ளவர்கள் மூலம் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்ட அதிகாரி கள், அவர்களை மட்டும் அரசு பஸ்சில் அனுப்பிவிட்டு முறையான விளக்கமில்லாத சில பயணிகளை திருப்பி அனுப்பிவைத்தனர்.
மாஞ்சோலையிலிருப்பவர்களைப் பார்ப்பதற்காக அவர்களின் வீட்டிற்குச் செல்கிற உறவினர்கள் மட்டும் அரசுப் பேருந்தில் சென்றுவரலாம். ஆனால் அங்கு சுற்றுலா செல்பவர்கள் அரசு பஸ் தவிர்த்து வனத் துறையின் சுற்றுலா வாகனத்தில் நபர் ஒருவருக்கு 350 கட்டணம் செலுத்தித்தான் (அரசுப் பேருந்து கட்ட ணத்தைவிட 10 மடங்கு அதிகம்) செல்லவேண்டும்.
ஏன் இந்தக் கெடுபிடி? தங்களின் அடையாளங் களை வெளிப்படுத்த விரும்பாத சிலர், “"அம்பை, மணிமுத்தாறின் தரைப் பகுதியிலிருந்து சுமார் 4800 அடி உயரத்திலிருக்கிறது மாஞ்சோலை. அங்கிருந்து 1350 அடிகளுக்கும் மேலான உயரத்தில் காக்காச்சி, குதிரைவெட்டி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட எஸ் டேட் பகுதிகள். இவையனைத்தும் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் பி.பி.டி.சி. எனப்படுகிற பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி வசமிருக்கிறது. இந்த கம்பெனி நடத்துகிற தேயிலை விளைச்சல், தேயிலை தயாரிப்பு ஆலையில் மொத்தம் 2000 தொழிலாளர் குடும்பங்கள் பணியிலிருக்கிறார்கள். அவர்களுக்கான குவார்ட்டர்ஸ், பிற அடிப்படை வசதிகளனைத்தையும் பி.பி.டி.சி. செய்துகொடுத்திருக் கிறது. பல ஆண்டுகாலமாக இருக்கிற தேயிலைத் தோட் டத் தொழிலாளர்களோடு தற்போது புதிதாக வட மாநிலத் தொழிலாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சாமானியர்களின் ஊட்டி என்று சொல்லப்படு கிற மாஞ்சோலை, குதிரை வெட்டி, ஊத்து உள்ளிட்ட மலைப்பகுதிகள் குளிர்காலங்களில் காஷ்மீர் குளிர் பிரதேசத்திற்கு ஒப்பான மைனஸ் டிகிரிக்கும் கீழான குளிர்தன்மை கொண்டவை. கோடையில்கூட மாஞ்சோலை மலைப் பகுதிகள் வெயில், வெப்ப மில்லாமல் குளிர்தன்மையுடன் நீடிக்கும்.
குளிர், கோடை காலங்களுக்கேற்ற சீதோஷ்ணத் தன்மையை உள்ளடக்கியுள்ளதால் குறிப்பாக கோடைகாலங்களில் வெப்பத்தின் சூட்டைத் தணிக்க சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவிலிருக் கும். இந்த மலை ஏரியா முழுக்க முழுக்க வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் வருகிற தடை செய்யப்பட்ட, பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இதுபோன்று சுற்றுலா பயணிகளின் வரத்து கட்டுப்பாடின்றிப் போனதால் மாசில் லாத மாஞ்சோலைப் பகுதிகள், சுற்றுலா பயணி களின் புழக்கத்தாலும், அவர்கள் வீசிச்செல்கிற குப்பைகள், பிளாஸ்டிக் துண்டுகளால் மாசடைந்துபோனது. அந்தப் பகுதியின் வனவிலங்குகளின் வாழ்வியல் சூழலுக்கும் அச்சுறுத்தல் கிளம்பியதால் மாஞ்சோலைப் பகுதியின் சுற்றுச்சுழல் சீர்கெட்டுப்போகிற நிலைக்கு வந்தபிறகே அரசுகளும், வனத்துறை யும் உஷாராகி சில கட்டுப்பாடுகளைக் கடுமை யாக நடைமுறைப்படுத்தியது. அதன்படி மாஞ்சோலை மற்றும் மலைமுகடுகளிலிருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைத் தவிர அங்கு வேறு யாரும் குடியேறக்கூடாது.. அந்தத் தொழிலாளர்களின் உறவினர்கள், அவர்களின் வீடுகளின் விசேஷ நிகழ்ச்சி உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகளில் முறையான காரணத்துடன் கலந்துகொள்ள வசதியாக அரசுப் பேருந்தைப் பயன்படுத்திச் சென்றுவரலாம்.
இவர்கள் தவிர்த்து மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அரசுப் பேருந்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாகப் இவை பின்பற்றப்பட்டும் வருகிறது.
இந்நிலையில்தான் மாஞ்சோலைப் பகுதியில் சில நாட்களாவது தங்கி தகிக்கும் கோடையை ஜாலியாகக் கழிக்கவேண்டுமென்ற திட்டத்தில் சிலர், மாஞ்சோலைப் தொழிலாளர்களிடம் தொடர்பையும் நட்பையும் ஏற்படுத்திக்கொண்டு உறவினர்கள். வீட்டு விசேஷத்திற்கு குடும்பத்தோடு செல்வதாக வனத்துறை சோதனையில் சொல்லிக்கொண்டு போயிருக்கிறார்கள். இந்த வகையில் உதவியதற்காக அவர்களுக்கு நல்லதொரு அமௌண்டும் சுற்றுலா புள்ளிகளிடமிருந்து கைமாறியிருக்கிறது. ஆனால், 2018-ல் மாஞ்சோலை தாண்டி காக்காச்சி பகுதியில் கண்ணிவெடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது யாரால் நடத்தப்பட்டது? வனத்துறையின ரின் கட்டுப்பாட்டையும் மீறி அங்கே சென்றது யார்? என்று வனத்துறை, காவல் துறையினரால் தற்போதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்தே வனத்துறையினர் சோதனை, கெடுபிடிகளை டைட் செய்திருக்கின்றனர்'' என்றனர்.
இதுகுறித்து நாம் அம்பை வனச்சரக இணை இயக்குனர் செண்பகப்பிரியாவிடம் பேசியபோது, “"பாதுகாக்கப்பட்ட மாஞ்சோலை பகுதியின் சுற்றுப் புறச் சுழலை பாதுகாக்கிற வகையிலும், சுற்றுலா பயணிகள் அங்கு சென்றுவர வனத்துறையின் ஆன்லைன் பதிவுமூலம் ஏற்பாடுகளைச் செய்து வனத்துறை வாகனத்திலேயே அனுப்பிவைக்கப்படு கிறார்கள். இதில் உறவினர் என்று சொல்லிக் கொண்டு மாஞ்சோலை குவார்டர்சில் ஆதாய நோக் கில் தங்கவைக்கப்படுவதையும் நாங்கள் தடுத்து வருகிறோம்'' என்கிறார்.
இந்த கெடுபிடி இயற் கைக்கு பாதுகாப்பே!
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்