சுயமரியாதையை விட்டுத்தர மாட்டீங்களே...

கோவை செழியன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். கோவை கலைக் கல்லூரியில் ‘பி.ஏ’ படித்தவர். தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருக்கு நெருக்கமானவர். கோவை மாவட்ட திராவிட கழகத்தில் மிக முக்கியமானவர்... சீனியர். திராவிட அரசியல் சம்பந்தமாக கோவையில் எந்த ஊர்வலம் நடந்தாலும் அது கோவை செழியன் தலைமையில்தான் நடக்கும்.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே... கருப்புச் சட்டை அணிந்து திராவிட மாணவர் கழக அமைப்பை நடத்திவந்தேன். சிறுவயதி லேயே பெரியாரிஸ்ட்டாக இருந்ததால் என்னை கோவை செழியனுக்கு மிகவும் பிடிக்கும். எங்கு என்னைப் பார்த்தாலும் "வா தம்பி'’என பாசமாக அழைப்பார்.

mgr

Advertisment

சென்னை வந்து, சினிமாவில் பெரிய தயாரிப்பாளராகவும் ஆனார். நான் சென்னை வந்து, பாடலாசிரியராக ஆனநிலையில்... எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதாம்மாவை வைத்து தான் தயாரித்த "குமரிக்கோட்டம்' படத்தில் ஒரு பாட்டெழுத எனக்கு பரிந்துரை செய்தார் கோவை செழியன். அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் ஒரு பழக்கம் இருந்தது.

அது... புதிதாக வரும் கவிஞர்கள் அல்லது வளரும் கவிஞர்களுக்கு பாடல் எழுத பரிந்துரை செய்யப்பட்டாலும்கூட... முடிந்தளவு, புதியவர் களை தட்டிக்கழிக்க பல்வேறு உத்திகளை கையாளுவார்கள். அதற்குக் காரணம்... இசை யமைப்பாளர்களின், இயக்குநர்களின், ஏற்கனவே புகழ்பெற்ற கவிஞர்களின் விருப்பு வெறுப்பு சார்ந்ததாக இருக்கலாம்.

Advertisment

நான் எழுதிய "நான் யார்? நான் யார்' என்கிற "குடியிருந்த கோவில்' படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. மெட்டுப் போட்டிருந்தார். என்றாலும்... "குமரிக்கோட்டம்' படத்திற்கு பாட்டெழுத வந்தபோது... எம்.எஸ்.வி.க்கு என்ன நிர்ப்பந்தமோ... ""நான் போட்டுத் தருகிற மெட்டுக்கு எழுதுங்க புலவரே'' என்றார். எனக்கு எளிமையான வார்த்தைகளில் எழுதத் தெரியாது. அதற்குக் காரணம்... நான் படித்த புலவர் படிப்பும், இலக்கண இலக்கியங்களும்.

எளிமையான வார்த்தைகளை சரளமாக கையாண்டால் மெட்டுக்கு எழுதுவது சுலபம். இருப்பினும் மெட்டுக்கு எழுதுவதாகச் சொன்னேன். அப்படியே எழுதினேன். இலக்கியத் தரம் குறையாமல் எழுதினேன். "குமரிக் கோட்டம்' படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் அழகிய காதல் பாடலாக அமைந்தது. பெரும் வெற்றியையும் பெற்றது. தலைவர் எம்.ஜி.ஆருக்கும் மிகவும் பிடித்த வரிகளைக் கொண்ட பாடலாக அமைந்தது.

அந்தப்பாடல் இதோ...

எங்கே அவள் என்றே மனம்

தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக்

கேட்டதும் கண்களே பாடிவா

---

முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும்

என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்

மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை

மூடவும் வேண்டுமோ

--------

செந்தேனிலாடி பனி ஊறிநின்ற

தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை

கைவளை ஓசையும் மைவிழி ஆசையும்

காணவும் ஏங்கினேன்

-இந்தப் பாடலின் முதல் சரணத்தில்... ’காதலி நெஞ்சில் முகம் புதைக்க ஆசைப்படும் காதலன்’எண்ணத்தை "முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும், என் ஆசையின் ஓசையை கேளடி' என நான் எழுதியிருந்ததை... ""இலக்கிய தரத்தை விடாம எழுதியிருக்கீங்க புலவரே'' என மிகவும் ரசித்தார் அண்ணன் எம்.ஜி.ஆர்.

சாண்டோ சின்னப்ப தேவருக்கு கோவை ராமநாத புரம்தான் சொந்த ஊர். அங்கே ‘வீர மாருதி தேகப்பயிற்சி நிலையம்’ நடத்தி வந்தார். கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாதாந்திர சம்பள நடிகராக திரைப்படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்துவந்தார். உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும், வீர தீரக் கலைகளி லும் சிறந்தவர் சின்னப்பா தேவர்.

முதலில் அவரை "சின்னா' என்றுதான் அழைப்பார்கள். பிறகு... ‘சின்னப்பா’ எனச் சொல்லி அழைத்தனர். அதன் பின் "சின்னப்பத் தேவர்' என அழைக்கப்பட்டார். தயாரிப்பாளரானபோது... "தேவர்' என்றே அழைக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு நடிக்க வந்தபோது... சின்னப்ப தேவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருமே தேகப் பயிற்சியில், வீரதீர கலைகளில் அக்கறை கொண்டவர்கள் என்பதால்... அன்றிலிருந்து இருவரும் உயிர்த் தோழர்களாக ஆனார் கள்.

கோவை ராமநாதபுரத்தின் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் எனக்கு சொந்தக்காரர்கள்தான் அப்போது. சின்னப்ப தேவ ரும் எனக்கு உறவினர் தான்.

எம்.ஜி.ஆரின் அழைப்பில் பேரில் சென்னை வந்து பெரும் தயாரிப்பாளராகி "தேவர் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தை உண்டாக்கி வளர்த்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் தயாரித்த பெருமையைப் பெற்ற தேவர்... எம்.ஜி.ஆரை வைத்து "நல்ல நேரம்' படத்தை எடுத்த போது...

""புலமைப்பித்தன் ரொம்ப நல்லா எழுதுறார். அவருக்கு இந்தப் படத்துல ஒரு பாட்டு கொடுங்க'' என எம்.ஜி. ஆர். சொல்லியிருக்கிறார். அதன்படி அழைப்பு வந்தது. ‘இசைத்திலகம்’ கே.வி.மகாதேவன் இசையில் "ஆயிரம் நிலவே வா' பாடலை நான் எழுதியிருந்தாலும்... அதில் இருந்த இலக்கியத் தரத்தை ஓ.கே. செய்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் பொதுவாக எளிய வார்த்தைகளில்... பாடல் எழுதப்படுவதையே மகாதேவன் விரும்புவாராம்.

நான் பாட்டெழுத போயிருந்த நேரம்... கே.வி.மகாதேவனின் உதவியாளர் அப்பு, ""புலவரே உங்க தமிழ்ல எழுதாதீங்க... எளிய வார்த்தைகளைப்போட்டு எழுதுங்க. முதல்ல தனக்குப் புரியணும்... அப்பதான் பாட்டை ஓ.கே. பண்ணுவார் கே.வி.எம். அதை ஞாபகம் வச்சு எழுதுங்க...'' எனச் சொல்லிவிட்டார்.

""ஓடி ஓடி உழைக்கணும்

ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

ஆடிப் பாடி நடக்கணும்

அன்பை நாளும் வளர்க்கணும்'' என பல்லவியை எழுதினேன் எளிமையாக.

""வயத்துக்காக மனுஷன் இங்கே... கயத்தில் ஆடுறான் பாரு... ஆடி முடிச்சு இறங்கி வந்தா... அப்புறம் தாண்டா சோறு... நான் அன்போடு சொல்லுறத கேட்டு... நீ அத்தனை திறமையும் காட்டு...''

-இப்படியாக முதல் சரணத்தையும்

""சோம்பேறியாக இருந்துவிட்டாக்கா... சோறுகிடைக்காது தம்பி.. சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டிருந்தா... துணியும் இருக்காது தம்பி...

இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்... கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்... இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு... அத்தனையும் சொல்லிப் போடு...''

-இப்படியாக இரண்டாவது சரணத்தையும் எழுதினேன்.

தெருவில் யானையை வைத்தும், உயிரை பணயம் வைத்து வயிற்றுப்பாட்டுக்காக வித்தை காட்டுபவனின் பாடல் இது என்றாலும்... திரையில் வருவது மக்கள்திலகம் எம்.ஜி. ஆராச்சே. அந்த வாத்தியாரிடமிருந்து ரசிக மாணவர்களுக்கு பாடம் சொல்லியாக வேண்டுமே. அதேபோல... இந்தப் பாட்டை எழுதும் நானும் தொழிலாள வர்க்க... சமத்துவ சிந்தனை கொண்டவனாச்சே. அதனால்... மூன்றாவது சரணத்தில்... அதற்கான அடையாளத்தைப் பொறித்தேன்.

mgr

""வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்

சட்டம் ஆகாது தம்பி

பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்

சட்டம் ஆகணும் தம்பி

நல்ல சமத்துவம் வந்தாகணும்

அதிலே மகத்துவம் உண்டாகணும்

நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்

படிப்பினை தந்தாகணும்

நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்''

-இப்படியாக மூன்றாவது சரணத்தை எழுதினேன். வயிற்றுப் பாட்டுக்கானபாட்டு என்பதற்கான எளிமை, அத்துடன் அரசியல் கொள்கை என இந்தப் பாடலை எழுதிக் கொடுத்தேன். மகிழ்ச்சியுடன் மெட்டு அமைத்தார் கே.வி.மகாதேவன்.

மறுநாள்.... சத்யா ஸ்டுடியோவில் தலைவரை சந்தித்தபோது... கேட்டார்...

""என்ன புலவரே... தேவர் உங்க ளுக்கு சொந்தக்காரராமே. தேவர்தான் சொன்னாரு...''

""அவரு என்னோட உறவினர்ங் கிறதை அவர்தானே சொல்லணும். நானே சொல்லிக்கக் கூடாதே. அதனாலதான் உங்ககிட்ட சொல்லல... அதுவுமில்லாம... இப்ப நான் உங்ககூட இருக்கிறதுனாலதான்... என்னை சொந்தக்காரன்னு சொல்றார். இல்லேன்னா சொல்வாரா?''

நான் இப்படிச் சொன்னதும் சத்தமாக சிரித்த தலைவர்... ""உங்க சுயமரியாதையை எந்தக் காலத்திலும் விட்டுத்தர மாட்டீங்களே...'' என்றார்.

""வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி... பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டமாகணும் தம்பி'' என்கிற வரிகளைக் குறிப்பிட்டு... ""சரியான வரிகள், எளிமையான வார்த்தைகள்... ஆனா அழுத்தமான கொள்கை'' எனப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.

திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் வேட்பாளரை எம்.ஜி.ஆர். அறிவித்த அன்று... நான் எழுதிவிட்டு வந்த பாடலை நல்ல சகுனமாக எம்.ஜி.ஆர். பார்த்ததைச்...

(சொல்கிறேன்)