கச்சத்தீவின் கண்ணீர்க் கதை!

ச்சத்தீவு அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால், அன்றைய இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகாவுக்கு 1974-ஆம் ஆண்டு தானமாக தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு என்பது தண்ணீரில் மிதக்கும் தங்கச் சுரங்கம்; வைரச் சுரங்கம். அந்த பொக்கிஷத்தை, தமிழரின் நிலத்தை, தமிழ் மீனவ மக்கள் வலை உலர்த்த பயன்படுத்திய பகுதியை.... ஒரு சின்ன திட்டுதானே? என எண்ணி தூக்கிக் கொடுத்திருந்தால்... அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்கமுடியாது.

aa

ஒரு நாட்டிற்கு உரிமைப்பட்ட... ஒரு அங்குல மண்ணாக இருந்தாலும்கூட... அதை பாதுகாப்பதில்தான் அந்த நாட்டின் மானமே அடங்கி இருப்பதாக நான் கருதுகிறேன். ஆனால்... கச்சத்தீவு?!

Advertisment

கச்சத்தீவு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கச்சத்தீவு பற்றி பல அறிஞர்கள் தந்த செய்தியை நான் ஓரளவு படித்துப் பார்க்க நேர்ந்தது. அதில் குறிப்பாக தோழர் செம்பியன் அவர்கள் எழுதிய ‘கச்சத்தீவு’ என்ற நூல் எனக்கு பேருதவியாக இருந்தது. கச்ச்சத்தீவின் இன்றியமையாச் சிறப்புகளை அவரே தன் நூலில் வரிசைப்படுத்துகிறார்; அதை நான் இங்கு அப்படியே தருகிறேன்.

கச்சத்தீவின் முக்கியத்துவம் ஆவணங்கள்:

கச்சத்தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரப் பகுதியை ஆண்ட சேதுபதிகளுக்கு வருவாய் தரும் தீவாக இருந்த ஒன்றாகும். 1947-இல் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் வரும்வரை, சேதுபதியின் ஆட்சியில் இருந்த இந்தத் தீவு, முத்துக்குளிக்கும் இடமாக பயன்பட்டு வந்திருக்கிறது. இங்கே பரவலாகக் காணப்படும் ‘உவரி’ என்ற செடிவகையை ராமநாதபுரம் மக்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்துவதுண்டு. அவர்கள் தீராத நோய்களுக்கு உமிரி பயன்படும் என்று நம்பினார்கள். அதனால் உமிரிச் செடியை கொண்டுவர கச்சத்தீவுக்குச் செல்வதுண்டு. இங்கே கிடைத்த சாயா வேர் போன்ற வேர் வகைகளும் ராமநாதபுரம் மக்களுக்குப் பயன்பட்டன. இந்த வேர் வகைகளைக் கொண்டுவருவதையே வணிகத் தொழிலாக சோழ மண்டல மரக்காயர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

Advertisment

கச்சத்தீவில் முத்துக்குளிக்க, அங்கிருந்த வேர்கள், செடி வகைகளைக் கொண்டுவர, மீன் பிடித்துறையாக அதனைப் பயன்படுத்த எவரேனும் விரும்பினால் சேதுபதியின் இசைவைப் பெற்றாக வேண்டும். சேதுபதி ஆட்சி அந்தத் தீவினை குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்றது. இதற்குச் சான்றுகள் பல உள்ளன.

*ஜனாப் முகமது அப்துல் காதர் மரக்காயர், முத்துச்சாமிபிள்ளை என்பவர் களுக்காகக் கச்சத்தீவை ஐந்தாண்டுகளுக்கு குத்தகையாக ஒப்பாவணம் (Lease deed) செய்து கொள்ளப்பட்டது. நாள் 23.6.1880 ராமநாதபுரம் துணைப்பதிவாளர் அலுவலகம் 2.7.1880-ஆம் நாளைய ஆவண எண்: 510/80

*ராமநாதபுரம் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் 4.12.1885-ஆம் நாளன்று கச்சத்தீவு குத்தகைக்கு விடப்பட்டு ஒப்பாவணம் செய்யப்பட்டது. ஆவண எண் 134/85

*1.7.1947-ல் இருந்து 30.6.1949 வரை கச்சத்தீவு குத்தகையாக விடப்பட்டது. குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாள் 26.7.1947. ராமநாதபுரம் துணைப்பதிவாளர் அலுவலக எண் 278/48

*19.2.1922-ல் ராமநாதபுரத்தின் திவானாக இருந்த திரு.ஆர்.சுப்பையா நாயுடு என்பவர், ஆர்.இராஜேசுவர சேதுபதிக்கு தம் கடல் எல்லைகளைப் பற்றித் தந்த விளக்கங்களில் கச்சத்தீவைப் பற்றிய விவரம் அடங்கியுள்ளது (Endorsment) ஏற்பிசைவு செய்து கொள்ளப் பட்ட நாள் 27.2.1922

*ராமநாதபுரம் ராஜாவின் ஆட்சிச் செயலாளர் (Administrative secretary) 20.4.1950-ல் எஸ்டேட் மேலாளருக்கு எழுதிய மடலில் 445/ஏ2/50, 1929-1945-ஆம் ஆண்டுகளில் மீன்பிடித் துறைகளைப்பற்றிய கோப்புகள் (Files) அனுப்பப்பட்டிருக்கின்றன என்றும், அந்தக் கோப்புகளில் கச்சத்தீவைப் பற்றியது ஒன்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

*தூத்துக்குடியில் இருந்த முத்து மற்றும் மீன்வளத்துறையின் உதவி இயக்குநரின் கடிதத்தோடு கூடிய (1943) திரு ஆர்.கணேசன் என்பவர் தயாரித்த நிலப்படத்தில் (Map) கச்சத்தீவு குறிக்கப்பட்டுள்ளது.

*1913-ஆம் ஆண்டிலிருந்து 1928 வரைக்குள்ளான 15 ஆண்டுகளுக்குச் சங்கு, சிப்பி, மீன்வளத் துறைக்கான (Chank Fisheries) பிரிட்டிஷ் அரசு விட்ட குத்தகை இடங்களில் கச்சத்தீவு ஒன்று. 1936-ல் குத்தகை விதிகள் புதுப்பிக்கப்பட்டபோதும் கச்சத்தீவு அந்த குத்தகை இடங்களில் ஒன்றாக இருந்தது.

*ராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்துவந்தது என்பதற்கு 1822-ஆம் ஆண்டிலிருந்து வரையறையான சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி(East India Company) 1822-ல் Isthimirer sand என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுர ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்திக்கொள்ளும் இசைவப் பெற்றது. அறுபத்தொன்பது கடற்கரை ஊர்களும், எட்டுத் தீவுகளும் சேதுபதிக்கு உரியனவாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பெனி கடற்கரை ஊர்களில் வாணிபம் செய்யவும், தீவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் இசைவைப் பெற்றிருந்தது.

கடற்பரப்பு உரிமைக்காக உலக நாடுகள் அடித்துக் கொண்டிருக்கிற நிலையில்... இந்தியாவோ நமது தமிழ் நிலப்பரப்பான கச்சத்தீவை இலங்கைக்கு வாரிக் கொடுத்து விட்டது.

உலகநாடுகள் கடற்பரப்பு உரிமைக்கு ஏன் யுத்தம் செய்யக் கூட தயாராக இருக்கிறது என்பதைச்......

(சொல்கிறேன்)

_________________

மனதைத் துள்ள வைக்கும் பாட்டு!

aa

ரஜினி-ஸ்ரீதேவி நடிப்பில், எம்.எஸ்.வி. இசையில் ‘"ராணுவவீரன்'’படத்திற்கு நான் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று...

பல்லவி

ஓஓஓ... மல்லிகப்பூ வாசத்துலே -ஒன்ன

மல்லுக்கட்ட தோணுதடி

செங்கரும்பு அங்கங்கள கண்ணு ரெண்டும்

தின்னுவிடப் பாக்குதடி

தண்ணிய போட்டதும் கன்னிய பார்த்ததும்

எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே

சரணம்-1

மோகம் கங்கையென நெஞ்சினில் பொங்குது கேளு

தேகம் தீயெனவே காயுதடி தொட்டுப்பாரு

திருப்பதி லட்டாட்டம் கருப்பட்டி வட்டாட்டம்

தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு

முன்னால போகையிலே முந்தானை ஆடையிலே

பின்னால ஓடுதய்யா என்னோட கண்ணு

மாதுளை கன்னங்கள் மாம்பழ வண்ணங்கள்

தாமரை மொட்டுக்கள் சந்தோஷம் உண்டாக்குதே

சரணம்-2

ஆடு... மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு

பாடு... மாலையிடும் மாப்பிள்ளை நான் என்று பாடு

ஆத்தோரம் ஈரத்திலே காத்தாடும் நேரத்திலே

தெக்கால நானும் வந்தேன் எங்கேடி போற

ஆளான காலம் முதலில் தாளாமல் ஏங்குகிறேன்

அஞ்சாமல் கொஞ்சம் நில்லு அச்சாரம் தாரேன்

ரத்தின கம்பள சித்திர மேனியில் முத்திரை தந்திட

மெத்தையை போடட்டுமா