தமிழர்களுக்கு இந்திரா என்ன செய்தார்?

சாஸ்திரி- சிறிமாவோ ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகவும் போட்டுக் கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் இந்தியாவைக் காக்க வேண்டிய நிர்ப்பந் தத்தில் போட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தில் போட்ட கையெழுத்தின் மூலம், அந்த மனிதர், எங்கள் தமிழ்க் குடியில் ஆளுக்கொரு திருவோட்டைக் கையிலே கொடுத்தார்!

சிறுகச் சிறுக நம் தமிழ்க் குடிமக்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தார்கள். இந்தத் தமிழ்நாடு வந்தாரை யெல்லாம் வாழவைக்கும் என்று கூறுகிறார்களே... ‘வந்தாரை’ என்பது நாடு கடத்தப்பட்டு வந்த நம் சொந்தங்களுக்குப் பொருந்தாது. வட்டிக் கடை வைத்துச் சுரண்டிக் கொழுக்க வந்த வடநாட்டுக்காரர்களைத்தான் வாழவைக்கும்! தமிழர்களை வாடவைக்கும்! இதுதான் இந்தத் தமிழகத்தின் யோக்கியதை! தமிழகம் வந்த தமிழர்கள் எத்தனைபேர் எங்கெங்கே வேலைதேடி அலைந்தார்களோ? வேலை கிடைக்காமல் வீதிவீதியாய் பிச்சை எடுத்தார்களோ? பசிக்கும், பட்டினிக்கும் ஆளாகி பதைக்கப் பதைக்க கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டார்களோ? யாருக்குத் தெரியும்?

சாஸ்திரி என்ன தமிழின விரோதியா?

Advertisment

தமிழருக்கு எதிராக சதித்திட்டம் தீட்ட நினைத்தவரா?

இல்லை. நல்லவர்... நேர்மையான மனிதர்தான்.

அப்புறம் ஏன் இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற மாடாய் உழைத்த தமிழ் மக்களை, சிறிமாவோ பண்டாரநாயகா இந்தியாவுக்கு நாடுகடத்தியதை அந்த நல்லவர் ஒப்புக் கொண்டார்? ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்?

Advertisment

ii

தனிப்பட்ட மனிதராக சாஸ்திரி நல்லவர்தான். ஆனால் இந்திய பிரதமராக ஆகிவிட்ட பின்னால் இந்தியாவின் பாதுகாப்புதானே முக்கியம். தமிழர்களை பலிபீடத்தில் ஏற்றாமல் இந்தியாவை எப்படித்தான் பாதுகாப்பது? பாரததேவியின் பாதுகாப்பிற்கு நரபலி கொடுக்க நம் தமிழர்களை விட்டால் யார் இருக்கிறார்கள்? இந்தியாவின் பூகோள சாஸ்திரம் இப்படி இருக்கும்போது சாஸ்திரிமீது எப்படி குற்றம் சொல்ல முடியும்?

சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட சாஸ்திரி, அடுத்ததாக டாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாஸ்கோ சென்றார். கையெழுத்துப் போட்ட சாஸ்திரியிடம் இயற்கை தேவன் மரண ஒப்பந்தம் தயாரித்து கையெழுத்திடச் சொன்னான். மறுக்க இயலாமல் கையெழுத்திட்ட சாஸ்திரி, நிரந்தரமாக கண்களை மூடிக்கொண்டார். ஆனாலும் சாஸ்திரி மரணம் இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது.

சாஸ்திரி போனார்! இந்திரா காந்தி வந்தார்!

இந்தியாவின் முடிசூடா மகாராணியாக அரியணை ஏறினார்! ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!’ என்று இந்தியா இந்திராவை இருகரம் நீட்டி வரவேற்றது, வாழ்த்துப் பாசுரம் பாடியது!

இந்திரா காந்தி அஞ்சாநெஞ்சம் படைத்தவர். ஆளுமைத் திறமும் ஆண்மையும் வாய்க்கப்பெற்ற ஆற்றல் மிக்க தலைவி. நேருவின் மகள் என்பதைத் தாண்டி, அவருக்கென்று தனித்தன்மைகள் நிரம்பவே இருந்தன. எதையும் சாதிக்க தன்னால் ஆகும் என்று காட்டியவர். தவறோ... சரியோ... நியாயமோ... அநியாயமோ... எதைப்பற்றியும் கவலைப்படாமல் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அதனால் நல்லதும் நடந்தது! கெட்டதும் நடந்தது! தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் இழுத்துக்கொண்டுபோய் சிறையில் பூட்டினார். தன் தந்தையின் வயதுடைய ஜெயப்பிரகாஷ் நாராயணனைக்கூட விட்டு வைக்கவில்லை; அவரையும் கைது செய்தார்! காராக் கிருகத்தில் அடைத்தார்.

அடுத்தவரை விழவைத்த இந்திராகாந்தி, தான் பறித்த குழியில் தானே விழுந்திருக் கிறார். ஆனாலும் மீண்டும் எழுந்தார். இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியா, இந்திரா இல்லாமல் இந்தியா இல்லை என்கிற ஆராதனைப் பாடல்கள் முழங்கின.

சாஸ்திரி, இலங்கைத் தமிழர்களுக்கு தண்டனை கொடுத்தார். இந்திரா காந்தி என்ன சாஸ்திரிக்கு இளைத் தவரா? தமிழர்களுக்கு இந்திரா காந்தி என்ன செய்தார்?

1971-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக் கும் போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில்... பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் தனி நாடாக பிரிந்து விடும் என்பதைக் கண்டு கொண்ட அமெரிக்கா ‘எண்டர் பிரைசஸ்’ என்ற பெயர் கொண்ட அணு ஆயுதம் தாங்கிய தன் போர்க் கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் அனுப்பிவைத் தது நம்மை அச்சுறுத்த. அப்போது சோவியத் ரஷ்யா சிதறியிருக்க வில்லை. சோவியத் ரஷ்யா, அமெரிக்காவுக்கு எதிராகவும், நமக்கு துணையாகவும் வந்தது. அய்க்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவின் அத்துமீறிய செயலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதனால் அமெரிக்கா அடங்கிப் போனது.

அந்தச் சமயத்திலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எழுந்தது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இலங்கைக்கு ஆதாயம்! ஸ்ரீலங்காவின் சிம்மாசனத்தை அப்போதும் சிறிமாவோ பண்டார நாயகாதான் அலங்கரித்தார்.

தப்புத்தண்டா செய்கிற தனவந்தர்கள் இருப்பார்கள். ஊருக்கு ஊர் உல்லாசத்திற்கு வீடு வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர் கள் தங்கள் காரோட்டிகளை தங்கள் கைக்குள்ளே வைத்துக்கொள்ள நினைப்பார்கள். அதனால் எஜமானனே எடுபிடியாக நடந்துகொள்ள நேரிடும். சின்னச் சின்ன வீடுகளின் சேதிகள் பெரிய வீடுகளுக்குப் போகாமல் பார்த்துக்கொள்ள தங்களின் காரோட்டிகளுக்கு வாரி வாரி வழங்குவார்கள் வள்ளல்களைப் போல.

dd

ப்படித்தான் இந்தியாவும்.

ஸ்ரீலங்காவின் சிந்தைகுளிர என்ன செய்யலாம் என்று இந்திரா யோசித்தார். அவருக்கு மிகவும் தாராளமனம். அதனால் எதையாவது இலங்கைக்கு தானம் தரவேண்டும் என முடிவெடுத்துவிட்டார்.

அதன்படியே கச்சத்தீவை தன் அன்புச் சகோதரி சிறிமாவோவுக்கு தானமாக... அன்புக் காணிக்கையாக தந்துவிட்டார். 1974-ஆம் ஆண்டு இந்திரா- சிறிமாவோ ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவு தமிழரின் கையைவிட்டுப் போனது.

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்? யாருடைய சொத்து?

ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்த மான, தமிழர் பூமி கச்சத்தீவு. கடற்கோளுக்கு இரையாகிய நிலப்பரப்புப் பகுதியில் மிச்சமாய் நிற்கின்ற தீவு கச்சத்தீவு. இலங்கையைத் தாஜா செய்வதற்காக தானமாக தரப்பட்டது இந்த தமிழர் பூமி.

தமிழகத்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கையில் ஓய்வெடுக்க, வலை உலர்த்த, ஆண்டுக்கொருமுறை நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவிலே கலந்துகொள்ள என 1974 ஆண்டு வரைக்கும் விட்டுவைக்கப்பட்டிருந்த தமிழர்களின் கச்சத்தீவின் மீதான கொஞ்சநஞ்ச உரிமையையும், 1976-ஆம் ஆண்டு முற்றிலுமாகப் பிடுங்கி இலங்கைக்குக் கொடுத்துவிட்டார் இந்திரா.

ச்சத்தீவு கையகல நிலம். அதைப்போய் பெரிதுபடுத்திப் பேசுவதா?- இப்படி கேட்கிறவர்கள் இருக்கலாம். அது சின்ன நிலப்பகுதியாக இருந்தாலும் (சுமார் 300 ஏக்கர்) அது சாதாரண நிலமல்ல. தண்ணீரில் மிதக்கும் தங்கச்சுரங்கம்.

மலைபடு பொருள்கள் பற்றியும், கடல்படு பொருள்கள் பற்றியும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பேசியிருக்கின்றன. மீன் வளம் கொழிக்கின்ற பகுதி அது. அதிலும் இறால் மீன்கள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்ற பகுதி அது. கச்சத்தீவை மட்டும் தானம் தராமல் இருந்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மீனவ சமுதாயத்திற்கும் தீராத வளத்தைத் தேடித் தந்திருக்கும்.

கச்சத்தீவு தமிழரின் பூமி. பட்டா நிலம். அதை யாருக்கும் யாரும் தாரை வார்த்துக் கொடுக்கும் உரிமை இல்லை.

பாகிஸ்தானுடன் சமாதானம் செய்துகொள்ள ஜம்மு-காஷ்மீரில் ஒருபிடி மண்ணையாவது பாகிஸ்தானுக்குத் தானமாகக் கொடுக்க இந்தியா முன்வருமா?

வராது!

கச்சத்தீவை கொடுத்தது என்ன நியாயம்?

கச்சத்தீவின் மகிமைகள் என்ன என்பதைச்....

(சொல்கிறேன்)