காடுகளை நாடாக்கிய தமிழினம்!
Common wealth Parliamentary Conference எனப்படும் உலக நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு 1981-ஆம் ஆண்டு ஃபிஜு தீவு நாட்டில் நடைபெற்றது. அப்போது நான் தமிழக மேல்-சபையின் துணைத் தலைவர் என்ற முறையில் கலந்துகொண்டேன். 25 நாட்கள் அங்கிருந்தபோது, அங்கங்கே கரும்புத் தோட்டத்தில் பாடுபடும் நம் தமிழ்ச்சாதி மக்களை நாள்தவறாமல் சந்தித்தேன். அவர்கள் கரும்புத் தோட்டங்களின் ஓரங்களில், கோயில் திடல்களில் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் கலந்துகொண்டேன். அவர்கள் சிந்திய கண்ணீரும், நான் சிந்திய கண்ணீரும் அந்த நிலத்தை நனைக்கும் அளவிற்கு நெஞ்சம் நெகிழ்ந்துபோன நிகழ்வுகள் அவை. அங்கே கொத்தடிமையாக, கூலிக்காரனாக இருக்கும் தமிழனும், கூடகோபுரம், மாடமாளிகை கட்டிக் கொண்டு கோலாகல வாழ்வு வாழ்ந்துவரும் குஜராத்திக்காரனும் இந்தியர்கள்தான். இதைப் போல வெட்கக்கேடு; வேதனை என்ன இருக்கிறது? தமிழ்நாட்டு இந்தியனின், தமிழனின் வேர்வையில்; ரத்தத்தில் வடநாட்டு இந்தியன் நீச்சல்குளம் அமைத்து நீந்திக்கொண்டிருக்கிறான். இரண்டு சாதியும் இந்தியன் என்ற சாதிதான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஃபிஜு தீவையும் வெள் ளைக்காரன்தான் ஆண்டான். புதர் மண்டிய காடாக இருந்த ஃபிஜுவை பொன் கொழிக்கும் நாடாக மாற்ற... 200 ஆண்டு களுக்கு முன் னால் தெற்கே இருந்து தமி ழர்களையும், மலையாளி களையும், தெலுங்கர் களையும், கொஞ்சம் கர்நாடகத்துக் காரர்களையும் வெள்ளைக்காரன் கொண்டுபோனான். ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு நீள- அகலம் என புதர் மண்டிய நிலத்தை அழிக்கவேண்டும் என காடு கெடுத்து, நாடாக்கும் பணியைக் கொடுத்தான் வெள்ளைக் காரன்.
ஃபிஜூ தமிழர்கள் கரும்புத் தோட்டத்தின் ஓரங்களில், கோயில் திடல்களில் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் கலந்து கொண்டேன். கந்தசாமி கோயில் திடலில் என்னை வரவேற்க தமிழர்கள் திரளாக திரண்டிருந்தார்கள். அங்கே என்னை வரவேற்று பேசியவர், ""தமிழ்நாட்டிலிருந்து மகான் வந்திருக்கிறார்'' எனக் குறிப்பிட்டார்.
நான் பேசும்போது... ""தமிழகத்திலிருந்து தமிழர்கள் இங்கே வந்து பல தலைமுறைகள் ஆகிவிட்டது. நீங்கள் சரியான தமிழ் உச்சரிப்பை மறந்துவிட்டீர்கள். அதனால்தான் என்னை "மகான்' என்று தவறுதலாக உச்சரித்துச் சொன்னீர்கள். நான் மகான் அல்ல... உங்கள் மகன்'' என்றேன்.
இதைக் கேட்டதும் கூட்டத்தினர் தேம்பி அழுதுவிட்டனர்.
ஃபிஜுவில் இந்தி ஆதிக்கம் நிலவியதால்... தமிழ் மக்களிடம் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்த ஆலோசனை சொன்னேன். குழந்தைகள் தமிழ் கற்பதற்கான சில ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஃபிஜுவிலிருந்து தமிழகம் திரும்பினேன்.
பிரிட்டிஷ் ஆட்சி எந்தெந்த நாடுகளில் இருந் தனவோ அந்தந்த நாடுகளில் எல்லாம் காட்டை அழித்து, நாட்டை உண்டாக்கும் வேலைக்கு மக்களை கூட்டிச் சென்றான். அப்படி தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள்தான் மலையகத் தமிழர்கள்.
அய்யா ஆனைமுத்து அவர்களது நூலிலிருந்து தரப்பட்ட விபரங்களைச் சொல்கிறேன்.
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களாம் தூத்துக்குடி, மதுரை, ராம நாதபுரம், திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களிலிருந்து மிக அதிக எண்ணிக்கையினரும், தஞ்சாவூர், சேலம், வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங் களிலிருந்து கணிசமானவர்களும், இலங்கையில் காடுகளிலும், மலைகளிலும் உடலுழைப்புச் செய்யும் கூலிகளாக 1796 முதலே வெள்ளைக் காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுள் சிறு வணிகமும், வட்டிக் கடையும் நடத்தும் சில சாதி மக்களும் இலங்கைக்குச் சென்றனர்.
1800-க்கும், 1920-க்கும் இடையில் அப்படிச் சென்ற தமிழர்களின் வாரிசுகள், தமிழர்களின் வழிவந்தவர்கள். இப்போதும்... இத்தனை ஆண்டுகளாகியும் மலையகத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாகவே உள்ளனர். இவர்களைத்தான் இலங்கை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என அழைக்கிறோம்.
இலங்கையில் இவர்களின் நிலை 1820- 1947 வரையில் எப்படி இருந்தது? 1948- 1964-க்கும் இடையே எப்படி இருந்தது? 1965-க்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளில் இவர்களின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றங்கள்- பின்னடைவுகள் ஏற்பட்டன? ஏன்? யாரால் இவையெல்லாம் ஏற்பட்டன? இவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கல்வியில், பொருளாதாரத்தில், அரசியலில், சமூகத்தில் எந்த அளவுக்கு இவர்களைப் பாதித்துள்ளன. இந்தப் பாதிப்புகளிலிருந்து இவர்களை மீட்டெடுத்திட யார் யார் என்னென்ன முயற்சிகள் மேற்கொண் டார்கள்? இம் முயற்சிகளுக்குப் பிறகும் இன்று இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களின் உண் மையான நிலை என்ன? என்பதை அறிவதும், இவை பற்றிச் சிந்திப்பதும், சிந்தனையில் தட்டுப்படும் வேண்டப்பட்ட நல்ல பணிகளை இலகையிலும், இந்தியாவிலும் செய்வதுமே நம் பணியாகும்.
இதே சமகாலத்தில் தமிழகத்திலும், கேரளாவி லும், மலபார், கொச்சி, திருவாங்கூர் பகுதிகளிலு மிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப் பட்ட இஸ்லாமியர்கள் (south indian moors) தென்னிந்திய மூர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் வழி வந்தவர்கள், தமிழர்களும், மலையாளிகளுமாக 15 லட்சம் பேர்கள் இலங்கையில் வடக்கு- கிழக்கு மாகாணத்திலும், மத்திய மற்றும் மேற்கு மாகாணத் திலும் வாழ்கின்றனர். அவர்களில் பெரும் பாலோரின் நிலைமையும் இரங்கத்தக்கதே ஆகும்.
ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் பகுதிகளிலிருந்து, கர்நாடகத்தின் சில பகுதிகளிலிருந்து ஆங்கி லேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வழிவந்தவர்களும் இன்றும் இலங்கையில் உள்ளனர். இவர்கள் மிகச் சிறுபான்மையினர். இவர்களெல் லாம் இலங்கை இந்திய வம்சாவளியினர் என்று அறியப்பட்டவர்கள். தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து 1820-க்குப் பிறகு வந்த தொழிலாளர்கள் பெரும்பாலோர் சமூகத்தின் கீழ் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பறையர், பள்ளர், முத்தரையர், மீனவர், முக்குலத்தோர், நாடார், சாணார், வன்னியர், நத்தமர், மருத்துவர், மொட்டை வேளாளர், கவுண்டர் எனப்படும் சூத்திர வகுப்பு உள்சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள்தாம் காப்பித் தோட்டம் அமைப்பதற்கு 1824-ல் கம்போலாவை (Gampola) அடுத்த கன்னொருவா (Gannoruva) பகுதிக்கு வந்தவர்கள். இவர்கள்தாம் தேயிலைத் தோட்டங்கள் அமைத்த வர்கள். ஜார்ஜ் பேர்டு (George Bird) என்கிற ஆங்கிலேயன்தான் இங்கே இப்பணியைத் தொடங் கியவன். ஜார்ஜுக்கு இப்படிப்பட்ட உடலுழைப்புக் காரர்களை வரவழைத்துக் கொடுத்தவன் பர்னஸ் (Barnas) என்கிற ஆங்கிலேயனே.
காப்பித் தோட்டமும், தேயிலைத் தோட்டமும் உண்டாக்குவதற்குக் காடுகளையும், மலைகளையும் வெட்டித் திருத்துவதோடு இவர்கள் நிற்கவில்லை. இவர்கள்தான் இலங்கையில் தரைவழிச் சாலைகளை அமைத்தவர்கள். ரயில்வே தண்டவாளங்களைப் பதித்தவர்கள். சாலைகளிலும், ரயில்வே தடங்களிலும் பாலங்களைக் கட்டியவர்கள். ரயில் நிலையங்களைக் கட்டியவர்கள். துறைமுகங்களைக் கட்ட உழைத்தவர்கள். அதாவது இன்றைய இலங்கையின் பொருளாதாரச் செழுமைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் குருதியையும், வியர்வையையும் சிந்தி, மனைவி மக்களோடு 1824 தொடங்கி 1870 வரை மாடுகளைப் போல் வருந்தி உழைத்தவர்கள், மலையகத்துக்கு வந்த இத்தமிழ் மக்கள்தான். இவர்களின் வழி வந்தவர்களையே இலங்கை மலையகத் தமிழர் என்கிறோம்.
இவர்களின் கடின உழைப்பால் 1870-க்குள் 2,70,000 ஏக்கர்களில் காப்பியும், பெர்ரியும் (Coffee and Berry) பயிரிடப்பட்டன. ஒவ்வொரு பருவத் திலும் காப்பிக் கொட்டையையும், பெர்ரியையும் பறிக்க 1,20,000 முதல் 1,75,000 ஆடவரும், மகளிரும் கூலி வேலைக்குத் தேவைப்பட்டனர். இதற்காக 1870-க்குள் பத்து லட்சம் பேருக்கு மேல் ஆண் களும், பெண்களும், குழந்தைகளும் தென்னிந்தியா விலிருந்து இலங்கைக்குப் பருவகாலத்தில் வருவதும், பருவம் முடிந்தவுடனே திரும்பிப் போவதும், மீண்டும் இலங்கைக்கு வருவதுமாக இருந்தார்கள். இப்படிப் போகவும், வரவும், உழைக்கவும் நேரிட்ட காரணத்தால் 1824-க்கும், 1870-க்கும் இடையில் வந்துபோன பத்து லட்சம் பேர்களில் மூன்று லட்சம் பேர் பயணத்திலேயே செத்தொழிந்தார்கள்.
இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாகி 1824 முதல் இலங்கையை வளப்படுத்தி இன்றைய இலங்கை அரசுக்குப் பச்சைத் தங்கம் (ஏழ்ங்ங்ய் ஏர்ப்க்) என்கிற தேயிலை 38 கோடி கிலோ கிராம் விளைந் திட எருவும், நீருமாக இருந்தவர்களின் வழிவந்த வர்களைத்தான் இங்கு ‘இலங்கை மலையகத் தமிழர்கள்’ என்று நாம் குறிப்பிடுகிறோம்.
இலங்கைத் தமிழர் நலன் என்று சொல்லி இந்திய- இலங்கை அரசுகள் எத்தனை ஒப்பந்தங்கள் போட்டது? அவற்றின் நிலைபற்றிச்...
(சொல்கிறேன்)