பாட்டு அருமை; வாழ்க்கை வெறுமை!
அண்ணன் எம்.ஜி.ஆர். நடித்த "குடியிருந்த கோவில்' படத்திற்காக நான் எழுதிய "நான் யார்? நான் யார்? நீ யார்?'’ பாடல் எனது முதல் திரைப் பாடலாக அமைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆனால்... எனது பொருளாதார நிலை அந்த மகிழ்ச்சியை முற்றாக அனுபவிக்க முடியாமல் என்னை வாட்டியது. இந்தப் பாடலை நான் எழுதினேன் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியாது அப்போது. அதனால்... என் வறுமை நீடித்தது.
"குடியிருந்த கோவில்' படத்திற்குப் பிறகு, கே.சங்கர் இயக்கத்தில், பாடகர்கள் டி.எம்.சௌந்திர ராஜனும், ஏ.எல்.ராகவனும் நடித்து... இருவரும் இணைந்து தயாரித்த "கல்லும் கனியாகும்'’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
"எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்'
-இதுதான் அந்த பாட்டின் பல்லவி.
இந்தப் பாடல் எழுதியதற்காக எனக்குத் தரப்பட்ட பணத்தைக் கொண்டு ஊருக்குப் போனேன். அந்தச் சமயம் என் அம்மா மறைந்து... அப்பா மட்டும் தனி யாக இருந்தார். உடல்நலமும் குன்றியிருந் தது. அப்பாவைப் பார்த்துவிட்டு வருவதற் காகத்தான் ஊருக்குச் சென்றேன்.
பழங்களும், ரொட்டியும் வாங்கிக் கொடுத்துவிட்டு... அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.
நான் வசித்த ராயப்பேட்டை வீரபத்திரன் தெரு வீட்டின் உரிமை யாளர் கோபால் டீக்கடை நடத்தி வந்தார். தீவிர தி.மு.க.காரர். என் மீது அன்புகாட்டிவந்தார். நானும் தி.மு.க. காரன் என்பதால் என்மீது கூடுதல் அன்பு. வாடகை தர தாமதமானாலும்... கடிந்துகொள்ளமாட்டார். ஆனால் அவரின் மனைவியும், மகளும் வாடகை தர இயலாமல் தவிக்கும் என்னை அவமானப்படுத்துவார்கள்.
வருமானம் இல்லாமல் சிரமப் பட்டதால்... மனைவி, குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு, நான் மட்டும் இங்கே தங்கியிருந்தேன்.
ஒருநாள்... உடல் மிகவும் களைப் பாக இருந்ததது. குடிக்க சிறிது சுடுநீர் வைத்துத் தரும்படி கேட்டேன். ஹவுஸ் ஓனரம்மாவும், அவரின் மகளும் ஏளன மாக சிரித்து... நக்கல் செய்தார்கள். நான் மிகுந்த வேதனையடைந்தேன்.
மிகுந்த சிரமத்துடன் பணம் திரட்டி... இரண்டுமாத வாடகையை அந்தம்மா ளிடம் கொடுத்துவிட்டு... வீட்டு சுவரில் பென்சிலால் எழுதினேன்.
"திட்டேறி வீங்கித் திமிரேறி நிற்கின்ற
கொட்டு முழவொத்த
கொடு முலையீர் திட்டுகிறீர்
பட்டுடுத்திப் பாலுண்டு
பல்லாண்டு வாழ்வதில்லை...
விட்டுவிட்டுப் போவதுதான் வீடு!’
-அறம் பாடுவதுபோல என் வேதனையை அதில் எழுதினேன்.
(சில காலம் கழித்து.... எனக்கு ஓரளவு வசதிவந்த நிலையில்....
நானும், என் மனைவியும் மைலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள சாந்தி விஹார் ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றிருந்தோம்.
நாங்கள் வீரபத்திரன் தெருவில் குடியிருந்த போது... அதே தெருவில் குடியிருந்த ஒரு பெண்மணி என் மனைவியைப் பார்த்துவிட்டு... பேசிக் கொண்டிருந்தார்.
""தமிழ்... உனக்கு சமாச்சாரம் தெரியுமா?''
""என்னம்மா?''
""நீங்க குடியிருந்த... கோபாலோட வீடு ஏலம் போயிருச்சு. இப்போ அவங்க டுமில் குப்பத்துல குடியிருக்காங்க'' என அந்தப் பெண்மணி சொன்ன தைக் கேட்டதும்... எனக்கு மிகுந்த மனவருத்தமாக இருந்தது.
கோபாலின் வீடு ஏலம் போனது... தன்னிச்சை யானதாக இருக்கலாம். ஆனால்... ‘நாம இப்படி வேதனையோட எழுதிவச்சதுனாலதான் இப்படி ஆச்சோ...’ என என் மனம் துன்பப்பட்டது. அப்போதே ஒரு முடிவெடுத்தேன். அன்று முதல் நான் யாரையும், தப்பாக பேசுவதில்லை... எழுதுவதுமில்லை)
கோபாலின் வீட்டில் குடியிருந்த நான்... மனைவி, குழந்தைகளை அனுப்பிவிட்டு, வீட்டையும் காலி செய்துவிட்டதால்... தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தேன்.
இரவில் சாந்தோம் பீச் மணலில்தான் உறக்கம். சிறிது மணலைக் குவித்து, அதன் மீது பேப்பரை விரித்து... அதை தலையணையாக்கிக் கொள்வேன்.
‘நான் யார்? நான் யார்?’ என பாட்டெழுதி விட்டு..... நான் யாரோ போல கடற்கரைமணலில் கிடந்தேன்.
இரவுப்பொழுது இப்படி கழிந்ததும்... காலையில்... லஸ் கார்னரில் சுகநிவாஸ் ஹோட்டலுக்குச் சென்றுவிடுவேன். ஹோட்டலிலேயே பல்தேய்த்து, முகம் கழுவிக்கொண்டு... இரண்டு இட்லி வாங்கிச் சாப்பிடுவேன். இரண்டு இட்லி வயிற்றுக்கோ போதாது. அதனால்... சாம்பாரை அதிகம் வாங்கி... வயிற்றை நிரப்புவேன்.
காலைச் சாப்பாடு முடிந்ததும்... பகல் பொழுது முழுக்க... நாகேஸ்வரராவ் பார்க்கில் தங்கிவிடுவேன். பக்கத்தில் ரேடியோ ரிப்பேர் சரிசெய்யும் ஒருவரின் நட்பு கிடைத்தது. அவருடன் பேசி பொழுதைக் கழிப்பேன்.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில், கேசரி ஹைஸ் ஸ்கூல் எனும் தெலுங்கு மீடியம் ஸ்கூலில், விருப்பப் பாடமாக தமிழும் இருந்தது. அந்தப் பள்ளியில் தமிழாசிரியர் வேலை கிடைத்தது.
கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் டைரக்டர் கே.சங்கரின் உதவியாளர்கள் இருவர் ஒரு அறையில் தங்கியிருந்தனர். அங்கு சென்று தங்கினேன்.
கோடம்பாக்கத்திலிருந்து நடந்தே ராயப் பேட்டை கேசரி ஸ்கூலுக்கு வருவேன். வேலை முடிந்ததும்... நடந்தே கோடம்பாக்கம் செல்வேன்.
தமிழாசிரியர் வேலைக்கான மாதச் சம்பளம் வரத் துவங்கியது. அது போதாத வருமானம் என்றாலும் குடும்பத்தைப் பிரிந்து எவ்வளவு நாட்கள்தான் இருப்பது?
புதுப்பேட்டையில் ஒரு வீடு பிடித்தேன். மனைவி, குழந்தைகளை கிளம்பிவரச் சொன்னேன்.
வேறுவேறு இடங்களில் குடியேறினாலும், கஷ்ட ஜீவனம் என்பது மட்டும் மாறாமல் இருந்தது. சத்தான ஆகாரம் இல்லாததால் எனக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைந்து... பலவீனமாகி... மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.
எனக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்துகொண்ட என் மனைவி... என்னைக் கவனித்துக்கொள்ள மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் அலைவதே வேலையாக இருந்தது..
அடுத்ததாக மைலாப்பூர் பவுடர் மில் தெருவுக்கு குடிவந்தோம். முட்டை விற்கும் விதவைப்பெண் ஒருவருக்குச் சொந்தமான வீடு அது. கீழ் வீட்டில் ஓனரம்மா குடியிருந்தார். மேலே இரண்டு போர்ஷன்களில் ஒன்றில் நாங்கள் குடியிருந்தோம். காசு விஷயத்தில் மிகவும் கறாராக இருந்தார் ஹவுஸ் ஓனரம்மா.
தீபாவளி நாளில்...
மற்றவர்கள் வெடித்துப்போட்ட பட்டாசுகளை என் குழந்தைகள் எடுத்து விளையாடுவதைப் பார்த்து என் மனைவி கதறி அழுதுவிட்டாள். நான் அவளை சமாதானப்படுத்தினேன்.
பொதுவாக நான் வீட்டில் இருக்கும்போது தான் என் பிள்ளைகள் ஓடியாடி விளையாடும். நான் வெளியே சென்றதும்... பிள்ளைகளை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு... வீட்டு வேலை களைப் பார்ப்பாள் என் மனைவி.
வேலையில் கவனமாக இருக்கும்போது... பிள்ளைகள் அடுத்தவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து ஏங்கிவிடக்கூடாதே... அவர்களிடம் கேட்டுவிடக் கூடாதே.... என்பதால் இப்படி பூட்டி வைப்பாள்.
துயரம் எங்களை விடுவதாக இல்லை. எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. கச்சேரி ரோட்டில், பார்ப்பான் ஹாஸ்பிடலில் வைத்து பச்சிலை வைத்தியம் பார்த்ததால் குண மடைந்தேன்.
அத்தியாயம் ஒன்றின் தொடக்கத்தை... மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.
எம்.ஜி.ஆர். என்கிற வசீகர நாயகன் இருக்கும் இடம் என்றாலே ஒருவித பரபரப்பும், பரவசமும் ததும்பியிருக்கும்.
அவரின் படப்பிடிப்பு நடக்கிற இடங்களும் களைகட்டும்.
அப்படித்தான் அன்று... ஜெமினி ஸ்டுடியோவில் அண்ணன் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நான் வேறொரு வேலையாக அங்கே போயிருந்தேன்.
படப்பிடிப்பு இடைவெளியில்... செட்டிலிருந்து வெளியே வந்தார் எம்.ஜி.ஆர்.
ஒப்பனையை மீறி... அவரின் தங்கநிறம் ஜொலித்தது.
""வணக்கம்'' என்றபடி... கைகூப்பினேன்.
பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு... ""நீங்க யார்?'' எனக் கேட்டார்.
""என் பெயர் புலமைப்பித்தன். உங்கள் படத்திற்காக "நான் யார்? நான் யார்?' பாடலை எழுதியது நான்தான்...''
""நீங்களா...!''’என மகிழ்ச்சியையும், வியப்பையும் காட்டியவர்... ""உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது... அடிக்கடி தயங்காம என்னை வந்து பாருங்க...''’என்றார்.
நான் மகிழ்ச்சியோடு தலையசைத்தேன்.
எழுத்திற்கான உரிய மதிப்பு கிடைக்கிற போது... படைத்தவனுக்குத்தான் எத்தனை ஆனந்தம்.
எம்.ஜி.ஆர். என்கிற பெரும் கதாநாயகனின் கைகளைப் பிடித்துக்கொண்டு... திரை இசையில் இலக்கிய நடைபோட்ட அனுபவங்களைச்...
(சொல்கிறேன்)
போட்டோ: ஞானம்