ராஜீவ் காந்தியின் தப்புக் கணக்கு!
இந்திராகாந்தி அவர்களுக்கு ஈழ தேசம் அமைத்துத் தரும் விருப்பம் இருந்ததையும், அதை உருவாக்கிக் கொடுத்தால், திராவிட அரசிய லாளர்களால் முன்பு முன்னெடுக்கப்பட்ட தனிநாடு கோரிக்கைகள் தமிழ் ஈழத்தை முன்னுதாரணமாக வைத்து மீண்டும் எழுப்பப் படும்’ என்பதால் தனி ஈழம் அமைத்துத்தரும் முயற்சிகளை எடுக்க இந்திராகாந்தி அம்மையார் தயங்குவதையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் மூலம் அறிந்தேன்.
அந்தச் சமயம் சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த தழிழ் ஈழ ஆதரவு மாநாட்டில் நான் இந்திராகாந்திக்கு கோரிக்கை வைத்துப் பேசினேன்.
""இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களே! நீங்கள் முக்திவாகினியை அனுப்பி வங்கதேசத்தை மீட்டுத் தந்ததுபோல, ஈழத்துக்கு நீங்கள் படை அனுப்ப வேண்டாம். ஈழத்தை ஆதரித்து ஒரு வார்த்தை மட்டும் கூறுங்கள். எங்கள் பிள்ளைகள் தாங்களாகவே போரில் நின்று, ஈழத்தை வென்றெடுப்பார்கள். ஈழம் அமைந்தால் அதன் தாக்கம் தமிழகத்தில் இருக்கும் என்று சந்தேகப்படாதீர்கள்.
ஒருவகையில் ஈழம் விடுதலை பெறுவது இந்தியாவுக்கே பாதுகாப்பாக இருக்கும். விடுதலை பெறப்போகிற ஈழத்தில்தான் திரிகோணமலை இருக்கும். இந்தியாவுக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த சக்தியும் திரிகோணமலைப் பக்கம் நுழைய முடியாதபடி தமிழீழ அரசு தடுத்து நிறுத்தும். (இந்தியாவின் திரிகோணமலை அச்சம் பற்றி பிறகு விரிவாகச் சொல்கிறேன்) ஈழம் விடுதலையானால் உண்மையில் இந்தியாவுக்கு பாதுகாப்பு ஏற்படுமே தவிர பாதகம் ஏற்படாது.
தமிழீழ மக்கள் மானத்தோடும், மரியாதையோடும், சுதந்திரத்தோடும் வாழ்வதற்குத் தமிழீழ போராட்டத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவை மட்டும், அருள் கூர்ந்து அளியுங்கள்'' என்று பேசினேன்.
அன்று பேசியதை இன்று... இதோ... இந்த நிமிஷத்தில் நினைத்துப் பார்க் கிறேன். ஒருவேளை... இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தால், அவர் நிச்சயம் ஈழ விடுதலைக்கான நியாயத்தை உணர்ந்து பார்த்து, ஈழ விடுதலைக்கு ஆதரவு தெரிவித் திருப்பார்.
புரட்சித்தலைவர் அண்ணன் எம்.ஜி.ஆர். இருந்திருந்தால்.... விடுதலைப் போருக்கு வேண்டிய பொருளுதவியை இன்னும் அதிகமாகத் தந்து, ஆதரித்து, தமிழ் ஈழநாடு உருவாக உறுதுணையாக இருந்திருப்பார்.
அதெல்லாம் அவர்கள் இல்லாததால் நிகழாமல் போய்விட்டதே!
தமிழீழ நாடு உருவாக உதவுவதற்கு இந்திராகாந்திக்கு தயக்கம் இருந்தாலும்கூட, தமிழீழம் உருவாக வேண்டியதன் நியாயத்தை உணர்ந்திருந்தார்.
ஆனால் இந்திராகாந்தி சிந்தித்துப் பார்த்ததைப்போல... ராஜீவ்காந்தி நிதானமாக சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டார். நல்ல ஆலோசனைகள் சொல்கிறவர்கள் அவரின் பக்கத்தில் இருக்கவில்லை. கொம்பு சீவிவிடுகிறவர்கள்தான் அவரின் அருகில் இருந்தார்கள்.
"நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் விடுதலைப் புலிகளை ஒழித்துவிடலாம்'’என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொடுத்தவர் களைத்தான் முதலில் நம்பினார்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
என்று வள்ளுவர் சொன்னபடி... செய்யக் கூடாதை செய்யாமல் கெடுத்து, செய்யக் கூடியதை செய்யாமல் கெடுத்து, கெட்டார் ராஜீவ்காந்தி.
"இந்தியாவின் தெற்கே இருந்து, எதிரிநாடுகளின் அச்சுறுத்தல் நிலவழியாக இந்தியாவுக்கு வரவேண்டுமானால், அது இலங்கையின் திரிகோணமலை வழியாகத் தான் வரும்' என இந்தியா நினைத்தது. அதனால்தான் இலங்கையின் நட்புறவு இந்தியாவுக்கு எப்போதும் தேவை. "இலங் கையின் தயவுக்குப் பதிலாக திரிகோணமலை நேரடியாக இந்தியாவின் கட்டுப் பாட்டுக்கு வந்தால் எப்படி இருக்கும்' என இந்தியா திட்டமிட்டது. ‘"புலிகள் ஒழிந்தல் போதும்'’ என சிங்கள அரசும் நினைத்தது.
அதனால்தான் இந்திய ராணுவம் "அமைதிப் படை' என்ற பெயரில் அனுப்பப்பட்டது இலங் கைக்கு.
இந்தியாவுக்கு இப்படி இரண்டு முகங்கள் இருந்தது முதலில் தளபதி ஹரிகிரட் சிங் உட்பட இந்திய ராணுவத்திற்கே தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் பிற்பாடு அந்த உண்மைகளை.... ராஜீவ்காந்தியை விடுதலைப் புலிகள் கொன்றிருக்க காரணமில்லை என்பதை வெளிப்படுத்தினார் ஹரிகிரட் சிங்.
இந்தியாவின் இன்னொரு மாநிலமாக தமிழ் ஈழதேசத்தைத் தன், ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதுதான் ராஜீவ்காந்தியின் நோக்கமாக இருந்தது. இந்தியாவில் இருக்கும் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்ன மரியாதை; என்ன உரிமை என்பது உலகத்திற்கே தெரியும். இந்தத் தமிழகம் போதாது என்று, ஈழத் தமிழகமும் இந்தியாவிற்கு கட்டுப்பட்ட மாநிலமாக இருக்கட்டும் என்று நினைத்தார்.
தமிழ் மாநிலத்திற்கு ஒரு பொம்மை அரசு, அதன் ஆட்சி பரிபாலனத்திற்கு முழு அதிகாரத்தோடு, இந்தியாவில் மவுண்ட்பேட்டன் பிரபு இருந்ததைப் போல தீட்சித் பிரபுவை வைசிராய் ஆக்கிவிடுவது என்ற தோராயமான ஒரு கணக்கு... தீட்சித் அந்தக் கனவில்தான் மிதந்துகொண்டிருந்தார்.
இலங்கையுடனான ஒப்பந்த விஷயத்தில், விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையில் ராஜீவ்காந்தி, ஆரம்பத்தில் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை.
தம்பி பிரபாகரனை ராஜீவ்காந்தி அலட்சியப்படுத்தியதைச்...
(சொல்கிறேன்)
படம் உதவி: ஞானம்
----------------------------------------------------------------
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை!
நடிகை ஸ்ரீப்ரியா தயாரித்து, பாம்புப் பெண்ணாக... நாயகியாக நடித்த படம் "‘நீயா'. துரை இயக்கத்தில், சங்கர்-கணேஷ் இசையில்... கமல், விஜயகுமார், ஜெய்கணேஷ், லதா, மஞ்சுளா உள்ளிட்டோர் நடித் திருந்தனர். விஜயகுமாருக்கும், மஞ்சுளாவுக்கு மான டூயட்டாக அமைந்த, எஸ்.பி.பாலசுப்பிர மணியம் -பி.சுசீலா பாடிய, நான் எழுதிய இனிமையான பாடல் இதோ...
பல்லவி:
உனை எத்தனை முறை பார்த்தாலும்
சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும்
இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும்
சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம்
முடிவதில்லை
சரணம்-1
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும்
இன்னும் இன்னும் கொஞ்சம் என்பேனே
சரணம்-2
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
ஆடிக் கலந்து ஆசை கனிந்து
அளித்திடும் இன்பங்கள்
என்ன என்ன இன்னும் சொல்வேனோ
ஆண்:
நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும் இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே
(பாட்டுக் கச்சேரி தொடரும்)