வங்கமும் ஈழமும்

மா மகேஸ்வரனும் ஒரு போராளிதான் என நான் எதார்த்தமாக நம்பிக்கொண்டிருந்த காலம் அது.

Advertisment

ஒரு காலகட்டத்தில் போராளிக் குழுவின் இரண்டு பிரிவினரிடையே சென்னையில் வைத்து மோதல் ஏற்பட்டது. பாண்டி பஜார் பகுதியில் தம்பி பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் ஒரு வரை ஒருவர் சுட்டுக் கொண்டனர். இதனால் இரண்டு அணியைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள். வழக்கும் நடந்தது. வழக்கு முடிகின்றவரை தான் இந்திய மண்ணில் அவர்கள் இருக்க முடியும். வழக்கு முடிந்துவிட்டால் இரு தரப்பையும் இலங்கைக்குத்தான் அனுப்ப நேரிடும். இதுதான் எதார்த்த நிலை.

இந்தப் பிள்ளைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் என்ன நடக்கும்? இலங்கை வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்ட போராளிகள் குட்டி மணியும், தங்கத்துரையும் சித்ரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்டார்களே... அதிலும், ‘என்னைத் தூக்கிலிட்டு கொன்றபின் என் கண்களை தானமாக கொடுத்துவிடுங்கள். என் கண்களின் வழியே சுதந்திர ஈழத்தை என்றாவது காணும் வாய்ப்பு அமையும்’ என்று சொன்னதால்... குட்டி மணியை சித்ரவதை செய்து, உயிருடன் அவனின் கண்களைப் பிடுங்கி, பூட்ஸ் காலால் நசுக்கி, அவனைக் கொன்றார்களே... அப்படியான விபரீதம் நடந்துவிடுமோ?’ என என் மனம் பதை பதைத்தது. அப்போது நான் சட்டமன்ற மேலவையில் துணைத் தலைவராக இருந்தேன். எப்படியாவது, அந்தப் பிள்ளைகளை நாடு கடத்தவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே... என்ற பொறுப்பில், நான் தமிழ்நாட்டு தலைவர்கள் பலரையும் பார்த்துப் பேசினேன்.

இறுதியாக ஒருநாள்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் எம்.பி., அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் பெரிய விபத்துக்கு ஆளாகி, இரண்டாண்டுகள் படுத்த படுக்கையாக இருந்து தேறியிருந்தார். இரண்டாண்டுகளுக்குப் பின் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

Advertisment

முழு விபரங்களையும் அவரிடம் சொல்லிவிட்டு, "நீங்கள் பிரதமரிடம் பரிந்துரை செய்து, இந்தப் பிள்ளைகளை நாடுகடத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டேன்.

""கவிஞரே நாங்கள் ஈழ விடுதலையை ஆதரிக்க மாட்டோம். ஆனால் அதே நேரத்தில் அந்தப் பிள்ளைகளை நாடுகடத்தாமல் பார்த்துக் கொள்வதை என் கடமையாகக் கருதுகிறேன். இன்றிரவு டெல்லிக்கு புறப்படுகிறேன். நாளை மாலையில் பிரதமரைச் சந்திப்பதற்கான அனுமதியை வேறொரு காரணத்திற்காக நான் பெற்றிருக்கிறேன். அப்போது இந்த விஷயத்தையும் பிரதமருடன் கண்டிப்பாக பேசுகிறேன். கவலைப்பட வேண்டாம். பிரதமரைப் பார்த்து பேசியபின், நாளை இரவே நான் உங்களுடன் தொலைபேசியில் பேசுகிறேன்'' என்று சொல்லி, என்னை அன்புடன் அனுப்பிவைத்தார் தோழர் கல்யாணசுந்தரம்.

மறுநாள்... இரவு பத்து மணிக்கு, தோழர் தொலைபேசியில் என்னோடு பேசினார்.

""கவிஞரே... நான் அம்மாவைச் (பிரதமர் இந்திராகாந்தி அவர்களை) சந்தித்துப் பேசினேன். "அந்தப் பிள்ளைகளை நான் கொழும்புவிற்கு அனுப்ப மாட்டேன்' என உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள். நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள். நான் சென்னை வந்தபிறகு நேரில் பேசுவோம்'' என்றார். நான் அவருக்கு நன்றி சொன்னேன். (தோழர் மறைந்தபிறகும்கூட அந்த உதவியை மறவாமல் இன்றும் அவருக்கு நன்றி செலுத்திக் கொண்டுதானிருக்கிறேன் மனதில்)

Advertisment

indiragandhi

முக்தி பாகினி (Mukti Bahini)என்பது வங்காளதேச விடுதலைப் படைகள் பெயர். வங்கதேச விடுதலைப் போரின்போது, பாகிஸ் தான் இராணுவத்தில் இருந்த வங்காளப் போர் வீரர்கள் மற்றும் படை அதிகாரிகளைக் கொண்டு முக்தி வாகினி படை அமைக்கப்பட்டது. இந்தப் படையில் வங்காள இளைஞர்கள் - மாணவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் இணைந்தனர். இந்திய இராணுவத்தின் ஒத்து ழைப்புடன் முக்தி வாகினி நடத்திய வங்காளதேச விடுதலைப் போரின் முடிவில், கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதி டிசம்பர் 1971-இல் வங்காளதேசம் எனும் புதிய நாடு உருவெடுத்தது. இந்த தேசம் உருவானதற்கு முக்கியமாக இருந்தவர் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்.

இலங்கையில் தமிழீழ தேசத்தை உருவாக்கப் போரா டிய போராளிகளுக்கு ஆதரவாக இருந்து ஈழ நாட்டை உருவாக்க விரும்பினார் இந்திரா. ஆனா லும் அவரைத் தடுத்தது தீவிர திராவிட கொள்கைதான்.

இதுபற்றி தோழர் கல்யாணசுந்தரம் வாயிலாக நான் அறிந்துகொண்டேன். ஆமாம்... 10 நாட்கள் கழித்து, சென்னை திரும்பியிருந்த தோழர் கல்யாணசுந்தரத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சென்று சந்தித்தேன். அன்போடு வரவேற்று, நடந்த நிகழ்வை விபரமாகச் சொன்னார்...

""அம்மா அவர்கள் என்னோடு நீண்ட நேரம் ஈழப் பிரச்சினை தொடர்பாக மனம்விட்டுப் பேசினார்கள். "முக்தி வாகினியை அனுப்பி, எப்படி பாகிஸ்தானிலிருந்து வங்க தேசத்தைப் பிரித்து விடுதலை வாங்கிக் கொடுத் தோமோ; அப்படி, ஈழத்தையும் சிங்கள ஆதிக்கத்திலிருந்து பிரித்துக் கொடுத்துவிடலாம்; ஆனால், ஏற்கனவே திராவிடர் இயக்கம் பிரிவினை வாதத்தைத் தமிழகத்தில் மேற்கொண்டிருந்தது... (தனித் தமிழ்நாடு கோரிக்கை). ஈழ தேசத்தைப் பிரிக்க உதவினால்... அதன் தாக்கம் தமிழகத்தில் உண்டாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால்தான் ஈழ விடுதலையை நாங்கள் ஆதரிக்கவில்லை'’என பிரதமர் என்னிடம் சொன் னார்''’என தோழர் விளக்கமாகச் சொன்னார்.

இந்திராகாந்தி அவர்களுக்கு ஈழ தேசம் அமைத் துத் தரும் விருப்பம் இருப்பதை அறிந்த நான், ‘தனித் தமிழ்நாடு’ அச்சம் அவருக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு கோரிக்கை வைத்தேன்.

சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த தழிழ் ஈழ ஆதரவு மாநாட்டில் நான் பேசியது என்ன? என் பதையும்.... தம்பி பிர பாகரனை ராஜீவ் காந்தி அலட்சியப் படுத்தியதையும்....

(சொல்கிறேன்)

____________

தாமரைப் பூவின் சூரிய தாகம்!

ஸ்ரீப்ரியா- புதுமுகம் ஹரி பிரசாத் நடித்த படம் ‘"நட்சத்திரம்'. சிவாஜி கணேசன், கமல், கே.ஆர்.விஜயா உட்பட பல்வேறு திரை நட்சத்திரங்கள், திரை நட்சத்திரங்களாகவே சிறப்புத் தோற்றத்தில் இந்தப் படத்தில் தோன்றியிருப்பார்கள். காரணம்... திரையுலகம் சம்பந்தப்பட்ட கதை இது. அதாவது... ஒரு நடிகையின் கதை.

ஸ்ரீப்ரியா தயாரிப்பில், தாசரி நாராயணாராவ் இயக்கியிருந்த இப்படத்தில் சங்கர்-கணேஷின் மிக அருமையான கிளாஸிகல் இசையில் நான் எழுதிய "அவள் ஒரு மேனகை' பாடல் இடம் பெற்றது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மிக அழகாக இந்தப் பாடலைப் பாடியிருந்தார். பெரும் வெற்றிபெற்ற இந்தப் பாடல்.. ஒரு நடிகைக்கும், ஒரு ரசிகனுக்கு இடையேயான ரசிப்பைத்தாண்டிய, பக்திக்கு ஒப்பான மனநிலையைச் சொல்வதான சூழலில் இந்தப் பாடல் அமைந்தது.

பல்லவி:

அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை..

அவள் ஒரு மேனகை

கலையெனும் வானிடை மின்னும் தேவதை

காவிய வடிவொரு நடமாடும் பொன்மகள்

ரஞ்சனி... சிவரஞ்சனி... சிவரஞ்சனி...

ddd

சரணம்-1:

கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை

என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை

மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது

அவள் போல் இங்கே எவரும் இல்லை

சரணம்-2:

ஆடிய பாதம் ஆயிரம் வேதம்

அவளது நாதம் தமிழ்ச் சங்க கீதம்

பார்வையில் குளிரும் மார்கழி மாதம்

அதிகாலையில் வரும் பூபாள ராகம்

சரணம்-3:

அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம்

தேன் உலாவிடும் கல்யாணி ராகம்

அவள் சங்கீத பாவம் கங்கையின் வேகம்

தாமரை பூவின் சூரிய தாகம்

காலமே...

அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே

தாளமே...

அவள் கால்கள் கேட்டபடி தாவுமே

மொழியோ ஆலயச் சங்கொலி

இடையோ அசைந்திடும் கிங்கிணி

என்ன சொல்லி என்ன பாட

கம்பன் இல்லை கவிதை பாட

ஆ... ஆ... ஆ...

அவள் தஞ்சைத் தரணியில்

கொஞ்சும் அழகிய கோவிலன்றோ

நான் அவள் பக்தன் அன்றோ...

(பாட்டுக் கச்சேரி தொடரும்)