விடுதலை ஒன்றே புலிகளின் இலட்சியம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர், ஈழ தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன், உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் விடுதலை வீரர்கள்- விடுதலைக்காகப் போராடிய வீரம் மிக்க தலைவர்கள் எல்லோரைக் காட்டிலும் வீரம் மிக்கவர்; ஞானம் மிக்கவர். தன் மண்ணின் மானத்துக்காக எந்த நேரமும் தன்னை அழித்துக் கொள்ளப் பின்வாங்காத தியாக சீலர்.

Advertisment

ஃபிடல் காஸ்ட்ரோ, சேகு வாரா, ஹோசிமின், மண்டேலா என்று வரிசைப்படுத்தப்படும் விடுதலை வீரர்களின் பட்டியலில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர் தம்பி.

rajivgandhi

தம்பியின் வீரம் செறிந்த போரை யாசர் அராபத் வியந்து பாராட்டியிருக்கிறார்.

Advertisment

தன் உயிருக்கு மேலே தம்பி நேசித்தது, தமிழ் ஈழ விடுதலை ஒன்றை மட்டும்தான்! தம்பி அப்படியென்றால்... அவரின் இயக்கத்துப் பிள்ளைகள் உலகில் எந்த இயக்கத்தாரிட மும் காண ஒண்ணாக் கட்டுப்பாடு மிக்கவர்கள். இயக்கத்தில் சேரும்போது கழுத்தில் சயனைட் குப்பி கட்டிக்கொள்கிறார்கள்.

"தமிழ் மண்ணின் மானத்தைக் காக்க நான் எந்தக் கணமும் சாகத் தயார்' என்பதன் அடையாளச் சின்னம்தான் அந்தக் குப்பி!

சாவுக்குப் பயந்தால் குப்பி கட்டுவோமா?

சமர் என்று வந்தால் விட்டுவிடுவோமா?’’

-என்பதுதான் அவர்கள் பாடும் வீரமுழக்க பாடல். ’வாழவேண்டிய வயதில் சாக வேண்டும், ஈழம் விடுதலை காண வேண்டும்’ என்ற லட்சிய உறுதி மிக்கவர்கள்!

Advertisment

அவர்களைப் பார்க்கும் போது நான் மலைத்துப் போயிருக்கிறேன். "அய்யோ... இந்த இளம் வயதில் தங்கள் தாய் மண்ணின் மானத்தை மீட்க சாக நினைக்கிறார்களே' என நெஞ்சு பதறி யிருக்கிறேன்.

அவர்கள் ஆயிரக் கணக்கானவர்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே பார்வை, ஒரே பாதை, ஒரே எண்ணம், ஒரே செயல்! அப்படியொரு கட்டுப்பாடு மிக்க இயக்கம் உலகில் எங்கும் இல்லை!

எனக்குப் பெரும் பாலும் எல்லா இயக்கங்களும் தெரியும். எல்லா இயக்கத் தோழர்களோடும் பழகியிருக்கிறேன். டெலோ, ஈ.பி.ஆர். எல்.எஃப்; ஈ.என்.டி.எல்.எஃப்; ப்ளோட், ஈரோஸ்; இப்படி அத்தனை இயக்கங்களையும் நானறிவேன். அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது விடுதலைப் புலிகள் இயக்கம். அவர் களுக்கு ஈழ விடுதலை ஒன்று மட்டும்தான் லட்சியம். அதைத் தவிர அவர்களின் பார்வை வேறுபக்கம் திரும்புவதில்லை.

prabhakaran

ஈழ விடுதலைக்கு அவர்கள் இந்தியாவை நாடி வந்தவர்கள். ஒரு கட்டத்தில் ஈழ விடுதலைக்கு எதிராகவே இந்தியப் படை செயல்பட்டதால், தங்கள் தாய் மண்ணைக் காப்பதற்காக இந்தியப் படையை எதிர்த்து நின்று போராடினார்கள். அவர்கள் லட்சியத்திற்கு யார் எதிராக நின்றாலும் அவர்கள் எதிர்த்துத்தான் நிற்பார்கள். அதுதான் நியாயம்! அது அவர்கள் தங்கள் கொள்கைக்கு, லட்சியத்திற்கு காட்டுகின்ற விசுவாசம்! அவர்களின் விடுதலையை எதிர்க்கிறவர் களைத் தவிர வேறு யார் மீதும் அவர் களுக்கு பகை இருந்ததில்லை. தன்னுடன் பிறந்தவனானாலும் ஈழ விடு தலையை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கிறவன் அவர்களின் பகைவன்தான். இந்த நிலைப் பாட்டிலிருந்து அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தங்களை மாற்றிக்கொண்டதில்லை.

எப்படியோ... இந்திய ராணுவம் ஈழத்துக்குச் சென்றது. நடந்திருக்கக் கூடாத போர் நடந்தது. ஏற்பட்டிருக்கக் கூடாத இழப்புகள் ஏற்பட்டுப் போயின. ஒரு கட்டத்தில் இந்தியப் படையை, ஈழ மண்ணிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டனர்.

படை திரும்பி வந்தது!

பகை முடிந்து போனது!

நாளைய விடியலுக்கான வழிமுறைகளில் மட்டும்தான் புலிகளின் நாட்டம் இருந்தது.

விடுதலைப் புலிகள் லட்சிய வாதிகள்; பயங்கரவாதிகள் அல்ல. பயங்கரவாதிகளுக்கு கொள்கை இருக்காது. பயங்கரவாதிகள் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அழிப்பார்கள். ஆனால் லட்சியவாதிகள் அப்படிப்பட்ட மனநோய் படைத்தவர்கள் அல்ல.

விடுதலைப் புலிகள் எந்த அளவுக்கு வீரம் மிக்கவர்களோ... அதைவிட விவேகம் மிக்கவர்கள்! ஞானம் மிக்கவர்கள்! எதைச் செய்தால் தங்கள் லட்சியம் வெல்லும்... எதைச் செய்தால் தங்கள் லட்சியம் தோற் கும் என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்துத் தெளிவான, அறிவார்ந்த முடி வை எடுக்க அவர்கள் தவறமாட்டார்கள்.

ராஜீவ் காந்திக்கு எதிராக அவர்கள் நின்றார்கள் என்றால் அது தனிப்பட்ட வகையிலான எதிர்ப்பல்ல; தத்துவார்த்த ரீதியிலான எதிர்ப்பு! இந்தியப் படையை ஈழத்திலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டதோடு, ராஜீவ் காந்தியுடன் அவர்கள் பகை பாராட்ட வேண்டிய அவசியமும் அற்றுப்போனது!

தங்கள் உயிருக்கும் மேலாகத் தங்கள் கொள்கையை- தங்கள் லட்சியத்தை நேசிக்கின்ற புலிகள், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதால் என்ன நேரிடும் என்பதை எண்ணிப்பார்க்கத் தெரியாத பாமரர்களா?

அந்தக் கொலையை புலிகள் செய்தார்களா?

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான... நம்பிக்கை யானவர் யார்?’ என ப.சிதம்பரத்திடம் ராஜீவ் காந்தி கேட்டாராம். அவர் ‘புலவர் புலமைப் பித்தன்’ என்று சொன்னாராம்.

சமரச பேச்சுவார்த்தைக்கு என்னை தேர்வு செய்ததைச்...

(சொல்கிறேன்)

__________

உலகெங்கும் நம் வீடு!

காவல்துறை அதிகாரி ஜி.திலகவதி எழுதிய கதையை வைத்து, ரூபினி, லிவிங்ஸ்டன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் ஆர்.சி.சக்தி இயக்கிய படம் ‘பத்தினிப் பெண்’. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மெட்டுக்கு நான் எழுதி, வாணி ஜெயராம் பாடிய பாடல் இது. எந்தக் காலத்திலும் உலக மக்களுக்கான... உலக மக்களுடன் பொருந்திப் போகக்கூடிய சமூகவியல் பாடல் இதோ...

பல்லவி:

உலகெங்கும் நம் வீடு

அதில் என்ன எல்லைக்கோடு

உறவல்லவோ யாவரும்

நெடுவானில் எல்லை இல்லை

பூமியில் மாத்திரம் இத்தனை கோடுகளா?

சரணம்-1:

வற்றாத கங்கை உண்டு

வாயார தண்ணீர் இல்லை

வயலுண்டு தோட்டம் உண்டு

வயிறாரச் சோறும் இல்லை

இமயத்தின் சாரல் உண்டு

இதயத்தில் ஈரம் இல்லை

பலகோடி மக்கள் உண்டு

பகையுண்டு பாசம் இல்லை

எதிர்காலம் எங்கே போகும்?rrr

யாரிடம் கேட்பது...

யார் பதில் சொல்வது...

சரணம்-2:

தான் வாழும் எண்ணம் இன்றி

தனதென்ற சொந்தம் இன்றி

வாழ்வோர்கள் சாகவில்லை

வரலாறும் போகவில்லை

எல்லோரும் வாழ்க என்று

வாழ்த்துங்கள் நெஞ்சால் இன்று

பிறர்க்காக வாழும்போது

உனக்கிங்கு துன்பம் ஏது?

தனக்காக வாழ்ந்தோரெல்லாம்

பூமியில் வந்ததும் போனதும்

யாரறிவார்?

(பாட்டுக்கச்சேரி தொடரும்)