போராளிகளின் தாயாக...
என் வீட்டிற்கு விருந்தாளிகளாய்... உறவினர்களாய் வந்த போராளிகள் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான உணவு என்ன என்பதைச் சொன்னாலே... மிகவும் ருசியாக இருக்கும்.
பொதுவாழ்வில் ஈடுபடு கின்றவருக்கு ஒரு நல்ல மனைவி வாய்க்க வேண்டும். எனக்கு வாய்த்த மனைவி தமிழரசி, நான் ஈழ விடுதலைப் போராளிகளோடு பழகிய காலங்களில் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார். எந்த நேரம் யார் வந்தாலும், அவரவருக்குப் பிடித்த உணவை என் மனைவி அன்போடு பரிமாறி, பசியாற்றி அனுப்பினார். யார், யாருக்கு என்ன உணவு பிடிக்கும் என்பது அவ்வளவு அத்துபடி.
ஈழப்போராளிக் குழுவைச் சேர்ந்த மாறன் என்றொரு தம்பி... அவன் மீன்குழம்பு என்றால் மிகவும் சுவைத்துச் சாப்பிடுவான். என் வீட்டில் மீன் குழம்பு வைக்கும் நாளில்... “ "அந்தப் பையன் மாறன் எங்கயிருக்கான்னு பார்த்து வரச்சொல்லுங்க... அவனுக்கு மீன் குழம்புன்னா ரொம்பப் பிடிக்கும்'’எனச் சொல்லுவார் என் மனைவி. நானும் எப்படியாவது அவனைத் தொடர்புகொண்டு வீட்டுக்கு வரவழைப்பேன்.
மாறன் நல்ல உடை உடுத்தாமல், அழுக்காகப் போட்டுக்கொண்டு வந்தால், "ஏன் இப்படி அழுக்குத்துணி போட்டுக்கிட்டிருக்க?'’என கடிந்துகொள்வார் என் மனைவி. அவனுக்கு போட்டுக் கொள்ள ஆடை இல்லை என்று தெரிந்தால், ஆடைகள் வாங்கிக் கொண்டுவந்து தருவார். தலை பரட்டையாகக் கிடந்தால்... “"ஒழுங்கா முடிவெட்டிக்கிட்டு தலைவார வேணாமா?'’’ என்று கடிந்து கொள்வார்.
இரண்டு நாட்கள் அவனைக் காணாவிட்டால் "அந்தப் பையன் ரெண்டு நாளா வீட்டுப்பக்கம் வர லையே...'’என தன் ஆற்றா மையைத் தெரிவிப்பார்.
ஈழ விடுதலைக்குப் போராடிய பெரும்பாலான இயக்கத்தவரும் என் வீட்டிற்கு வருவார்கள், பசியாறிப் போவார்கள்.
தம்பி பிரபாகரன் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே பேபி வருவார். அவர் தன் தோளிலே போட்டுத் தூக்கிச்செல்கிற பை மிகவும் கனமானதாக இருக்கும். நான்குபேர்கள் சேர்ந்தால்தான் தூக்க முடியும். ஆனால் அவர் ஒருவரே அதை சிரமமில்லாமல் தூக்கிச் செல்வார். பேபி சைவம்... அதுவும் சுத்த சைவம். ஆனால் அவர் சாப்பிடும் உணவில்... கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு காரமாக கேட்பார். பாகற்காய் குழம்பு, வற்றல், மோர் மிளகாய் ஆகியவை பேபிக்கு விருப்பமானவை.
நாங்கள் குடும்பத்தோடு எங்காவது போய்விட்டுத் திரும்பும் வழியில் ஏதாவது சந்தை வழியாக வந்தால்... என் மனைவி சட்டென்று காரை நிறுத்தச் சொல்லி, இறங்கிப்போய், பேபிக்குப் பிடித்த பாகற்காய், பச்சை மிளகாய் எல்லாம் வாங்கிக் கொண்டு வருவார்.
தம்பி பிரபாகரனுக்கு கணவாய் மீன் மிகவும் பிடிக்கும். இதனால் தம்பி என் வீட்டுக்கு வரும்நாளில்.. குப்பம் குப்பமாகத் தேடிச்சென்று கணவாய் மீன் வாங்கிவந்து சமைப்பார்.
தோழர் பாலசிங்கம், அவரது மனைவி அடேல் பாலசிங்கம், தம்பி நடேசன், கிட்டு, ஜானி, யோகி, ராகவன், ரகு உட்பட பலரும் எங்கள் வீட்டுக்கு வந்து அளவளாவுவதும், விருந்து உண்பதும், ஆஹா... அந்த நாட்கள் எங்கள் வீடே மிகவும் அமர்க்களமாகவும், குதூகல மாகவும் இருக்கும்.
தம்பி ரகு நாள் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வருவார். என் மனைவி யிடம் ரகு மிகவும் செல் லம். என் மனைவி சாப்பிட உட்கார்ந் தால் “"அக்கா... அக்கா...'’என வலது கையை நீட்டுவார். தான் சாப்பிடுவதை விட்டுவிட்டு, சோற்றைப் பிசைந்து உருட்டி, ரகுவுக்குக் கொடுத்து உண்ணச் செய்வார்.
ஒரு சமயம்... இயக் கத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் குண்டடிபட்டு... ஒருவர் குடல் சரிந்தும்; ஒருவர் தோள்பட்டை தொங்கிப் போயும்; ஒருவர் கால் பெயர்ந்து போயும்... இங்கே வந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு நாள்தோறும் மாலையில்... இடியாப்பமும், கோழிக் குழம்பும் செய்துகொடுப் பார். ரகு சொதி என்கிற ஈழத்தில் விசேஷமான துவையல் போன்ற ஒன்றைச் செய்வார். அந்த உணவுகளை எடுத்துக்கொண்டு... மருத்துவமனைக்குப் போவோம்.
எங்களைப் பார்த்ததும், மூன்றுபேரும் தங்களின் தாய், தந்தையைப் பார்த்ததுபோல மகிழ்ச்சி அடைவார்கள். என் மனைவி அந்தப் பிள்ளைகளுக்கு உணவை ஊட்டிவிடுவார். அவர்கள் உண்ட பின், வாயைக் கழுவிவிட்டு, துவாலையால் துடைத்துவிட்டு... நீண்ட நேரம் அவர்களோடு பேசிக்கொண்டி ருப்பார்.
அவர்கள் ஈழத்தில் ஏதோ நாடகம் நடத்தியிருந்ததை ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தார்கள். “"அண்ணி... இதைக் கேட்கிறீர்களா?'’’என்று அதை உரக்கப் போட்டுக்காட்டிச் சிரித்து மகிழ்வார்கள்.
முதன்முதலாக நான் தம்பி பிரபாகரனை நேரில் பார்த்தபோது... எனக்குள் ஆனந்த அதிர்ச்சி. ஆனால்... என் மனைவிக்கோ உடம்பெல் லாம் வியர்த்து... நடுங்க ஆரம்பித்தது. அதற்குக் காரணம் என்ன என்பதைச்....
(சொல்கிறேன்)
படம் உதவி: ஞானம்
___________________
செல்லக்குயில்… தங்கவயல்…
நடிகர்திலகம் அண்ணன் சிவாஜி கணேசன்-சரிதா உள்ளிட்டோர் நடிப்பில், ‘"பில்லா'’ கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், திருப்பூர் மணி தயாரித்த படம் ‘"இமைகள்.'’’கங்கைஅமரன் இசையில் இந்தப் படத்தில், தாயும், தாய்மாமனும் சேர்ந்து குழந்தையைக் கொஞ்சிக் கொண்டாடும் தாலாட்டு போன்ற ஒரு பாடலை எழுதினேன். சிவாஜிக்கு டி.எம்.சௌந்தரராஜன் பல்லாண்டு களாக பாடி வந்த நிலையில்... முதன்முதலாக சிவாஜிக்கு மலேசியா வாசுதேவனை பாடவைத்தார் கங்கைஅமரன். உடன் பாடியவர் பி.சுசீலா.
இதோ பாட்டு....
பல்லவி:
மாடப்புறாவோ இல்லை
மஞ்சள் நிலாவோ
ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
கரு நிறவிழி மரகதமணி தீபம் ஏற்றும்
மாமன் கையிரண்டும்
தொட்டிலைப்போட...
இளமாலை தென்றல் வரும்
மல்லிகை தூவ...
தளிர் கோதும் செல்லக்குயில்
இது என் கோலார் தங்கவயல்
நடமாடும் வண்ணமயில்
சிறகைத் தானம் தந்த உடல்
உடலா இல்லையடா -இது என்
ரோஜாத் தோட்டம்
மார்பில் சூடவரும்
சந்தனமாலை
புதுவாசம் கொண்டுவரும்
செண்பகச் சோலை
உன் தாயின் அண்ணனடா -எனக்கு
நீ தான் மன்னனடா
நான் உன்னைப் பெற்றெடுத்தேன்
அண்ணன் என்னை தத்தெடுத்தான்
கருணை பொங்கிவரும் -எனது
காவல் தெய்வம்
(பாட்டுக் கச்சேரி தொடரும்)