மனிதநேயம் = எம்.ஜி.ஆர்.!
புரட்சித்தலைவர் அண்ணன் எம்.ஜி.ஆர்., தமிழராய்ப் பிறக்கவில்லை. தமிழராய்ப் பிறந்தவர்கள் அவரைப்போல தமிழராய் இருக்கவில்லை.
ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கு இந்தியாவின் பூகோள அமைப்பு தீராத துன்பங்களைத் தொடர்ந்து தரும் அவலமான வரலாற்று நிகழ்வுகளை எழுதும் போது தமிழினத்தின்பால் மிகுந்த அக்கறை கொண்டிருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி எழுதுவது என் நீங்காக் கடமையாகும்.
எம்.ஜி.ஆர். அவர்களை ஒரு காலகட்டத்தில் இனம் பிரித்து "மலையாளி, மலையாளி' என்று ஒரு கூட்டம் ஏசியதும்... பேசியதும் அரசியல் வியாபாரத்தன்மை கொண்ட விமர்சனம் ஆகும்.
ஆம்! அவர் மலையாளியாகப் பிறந்தார்.
மாற்றுக்குறையாத தங்கத்தைப் போல ஒரு நல்ல தமிழராக வாழ்ந்தார்.
உலகத் தமிழினமே அவரின் இழப்புக்காகக் கலங்கி கண்ணீர் வடிக்கும் ஒப்பற்ற தமிழினத் தலைவராக மறைந்தார்.
இன்று எல்லாத் தமிழர்களின் இதயங்களிலும் அவர் மறையாது வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது இழப்பு இந்திய தமிழர்களைக் காட்டிலும் ஈழத்தமிழர்களுக்கு ஈடு செய்ய ஒண்ணாத இழப்பாகும்!
என் வாழ்க்கையில் இரண்டு பெரும் பேறுகளாக நான் கருதுவது, அந்த மாமனிதர் எம்.ஜி.ஆரோடு இருபத்து இரண்டு ஆண்டுகள் அளப்பரிய அன்போடும் உறவோடும் இணைந்து வாழ்ந்தது...
அடுத்து, உலகம் வியக்கும் மாவீரன் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் தம்பி பிரபாகரனை என் சொந்தத் தம்பியாகவே கருதி வாழ்ந்தது. இந்த இரண்டயும் நான் பெறற்கரிய பேறுகளாகக் கருதுகிறேன்.
நான் வாழ்ந்ததற்கு அர்த்தம் என்றும், அடையாளம் என்றும் இவர்களைத்தான் கருதுகிறேன்.
எம்.ஜி.ஆர் என்ற அந்த மனிதர் அற்புதமானவர். நான் அற்பமானவன். எங்கோ புழுதிக் காட்டிலே பிறந்து, பஞ்சாலையில் ஒரு சாதாரணத் தொழி லாளியாகப் பணி புரிந்து, பிறகு வருந்தி வருந்தித் தமிழ் பயின்று, வாழ்வு தேடிச் சென்னைக்கு வந்த என்னை அன்பு காட்டி அரவணைத்து ஆளாக்கி விட்டவர் அந்த மாமனிதர்! அவரது அன்பும் ஆதரவும் எனக்கு வாய்க்காமல் போயிருந்தால் நான் இருந்த இடத்தில் கள்ளி முளைத்துப் போயிருக்கும். மனித நேயம் என்பதற்கு பொருள் எழுதச் சொன்னால் ’எம்.ஜி.ஆர்.’ என்றுதான் எழுதுவேன்!
எனக்கும் அவருக்கும் கொள்கை அடிப்படையில் எத்தனையோ மாறுபாடுகள், முரண்பாடுகள்! ஆனால் அவற்றையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொண்டு என்னை வெறுத்து ஒதுக்கவில்லை.
என் கொள்கைகளை ஒளிவு மறைவின்றி நான் வெளிப்படையாக அவரிடம் சொன்னேன். பல நேரங்களில் காரசாரமான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். இருந்தாலும் என் வெளிப்படையான கள்ளம் கபடம் ஒளிவு மறைவு இல்லாத குணத்தை அவர் மிகவும் ரசித்தார். என் கருத்துக் களோடு மாறுபட்டிருந்தாலும் என் கொள்கைப் பிடிப்பை, அதில் நான் உறுதியாக இருந்ததைப் பல நேரங்களில் பாராட்டி யிருகிறார்.
நான் எங்காவது கூட்டங்களில் ஏதேனும் கருத்துக்களைக் கடுமையாகச் சொல்ல நேர்ந்த போது, அதை அவரிடம் அவருக்குப் பக்கத்தில் இருந்த நண்பர்கள் புகாராக எடுத்துச் சொன்ன நேரங்களில், ""புலவர்தானே பேசினார்! அவர் அப்படித்தான் பேசுவார்! அவர் எனக்கு வேண்டும்! விட்டு விடுங்கள்!'' என்றுதான் சொல்லியிருக்கிறார்! அதிலும் குறிப்பாக 77ஆம் ஆண்டில் இருந்து, 87ஆம் ஆண்டுவரை நான் ஏறத்தாழ எல்லா அம்சங்களிலும் அவரோடு மாறுபட்டுத்தான் இருந்தேன்.
ஒருமுறை பண்டித நேரு அவர்கள், ""காந்தி அடிகளுக்கும் எனக்கும் பொதுவான ஒத்துப் போகின்ற அம்சங்களாக எவையும் இல்லை. இருந்தாலும் நாங்கள் ஒன்றாகவே இருந்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டார். அப்படி எனக்கும் எம்.ஜி. ஆருக்கும் ஒத்துப்போகின்ற பொதுவான அம்சங்கள் என்று பெரும்பாலும் எதுவும் இருந்ததில்லை; ஆனால் எங்களுக்கிடையே இருந்த அன்பும் நட்பும் அதனால் அற்றுப் போகவே இல்லை.
1981 ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அந்த தொடக்க விழாவில் நான் கவியரங்கத்தில் காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நாளுக்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் தமிழ் ஈழப்பகுதியில் இலங்கை இராணுவம் பல அப்பாவித் தமிழர்களை வேட்டையாடிக் கொன்றிருந்தது.
என் நெஞ்சில் ஏற்பட்ட குமுறல் அடங்காமலே இருந்தது. அந்தக் குமுறலை நான் கவிதையாக கொட்டி னேன். இந்திராகாந்தி அப்போது பிரதமர். இந்திரா காந்தியை பார்த்துக் கேட்பது போல அந்தக் கவிதை...
சஞ்சனையினை இழந்துவிட்ட புத்ர
சோகச்
சஞ்சலத்தை உணர்ந்தவள் நீ!
தவிக்கும் எங்கள்
பஞ்சைகளைப் பராரிகளை
ஏறெடுத்துப்
பார்க்காமல் இருப்பதென்ன
முறையா? அம்மா!
கொஞ்சம்நீ மனதுவைத்து முறைத்துப்
பார்த்தால்
கொழும்புக்கு கொழுப்படங்கும்:
இல்லை என்றால்
வஞ்சனை நீ செய்கின்றாய் என்று
சொல்ல
வாய்மறுக்கும் ஆயினும்என்
மனம்சொல்லாதா?’’
இதுதான் அந்தக் கவிதை. அப்போது இந்திரா அம்மையாருக் கும் எம்.ஜி.ஆருக்கும் கொஞ்சம் ஒத்துவராத நிலை இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இருவருக்குள் இருந்த விரிசல் குறைந்து கொண்டுவரத் தொடங்கி இருந்தது.
நான் கவிதையில் இந்திரா காந்தியைக் கண்டித்ததாக எம்.ஜி.ஆர். அவர்களிடம் ஒரு சில நண்பர்கள் புகார் கூறினர். அவர் மனத்தில் கோபத்தை மூட்டினார்கள். விழா முடிந்து நான் சென்னை வந்துவிட்டேன்; அவரும் வந்து சேர்ந்திருந்தார். மறுநாள் காலை 6 மணி இருக்கும், தலைவர் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
""இனிமேல் என்முகத்தில் நீங்கள் விழிக்காதீர்கள்'' என்று சொல்லிவிட்டுத் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண் டார். புரட்சித்தலைவரைத் திட்டி காட்டமாக கடிதம் எழுதி... அவருக்கு அனுப்பியதைச்....
(சொல்கிறேன்)
படம் உதவி: ஞானம்
_______________
தேன்நிலா... பால்நிலா... லா..லா..லா...!
அண்ணன் கோவை செழியன் தயாரிப்பில் மம்முட்டி, அமலா நடிப் பில் வந்த படம் "மௌனம் சம்மதம்'. தம்பி இளைய ராஜா இசையில் இந்தப் படத்திற்கு நான் எழுதிய பாடல் மிக ரசனையா னது. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட 'லா"’ என முடியும் வார்த்தை களைப் போட்டு எழுதியிருந்தேன். இசை ரசிகர்கள் என்னிடம் பேசும் போது தவறாமல் குறிப்பிட்டு பேசும் பாடல் இது.
கூடலினால் உண்டாகும் இன்பம் தேகத்தினால் கிடைக் கிறதா? தீண்டும் உன் கைகளினால் கிடைக்கிறதா? என்பது அவளின் சந்தேகம். தேடிப்பார்த்திடுவோம் என்கிறான் அவன். இம்மி பிசகினாலும் எரிச்சலை ஏற்படுத்திவிடும் கருத்தை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருந்தேன். ஜேசுதாஸ்- சித்ரா ஜோடிக்குரலில் ஒலித்த... ராஜாவின் சுகமான மெட்டில் அமைந்த இந்தப் பாடலை இரவுநேரத்தில் கேட்டால் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். கேட்டுப் பாருங்கள். அதற்குமுன் படித்துப் பாருங்கள்.
பல்லவி:
கல்யாண தேன் நிலா / காய்ச்சாத பால்நிலா
நீதானே வான் நிலா / என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா / உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா ஆ....
சரணம்-1: ஆண்:
தென்பாண்டி கூடலா / தேவார பாடலா
தீராத ஊடலா / தேன் சிந்தும் கூடலா
பெண்:
என் அன்பு காதலா / எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா / நீ தீண்டும் கையிலா
ஆண்:
பார்ப்போமே ஆவலா / வா வா நிலா ஆ...
சரணம்-2: பெண்:
உன் தேகம் தேக்கிலா / தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா / நான் கைதி கூண்டிலா
ஆண்:
சங்கீதம் பாட்டிலா / நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா / உன் பார்வை தன்னிலா
பெண்:
தேனூறும் வேர்ப் பலா / உன் சொல்லிலா ஆ...
- இப்படி இனிமையான பாடல் கச்சேரி தொடரும்...