சங்க காலத்தை நினைவூட்டும் ரஜினி!

ல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து’’

இந்த திருக்குறளின் பொருள்... அடக்கமுடமை எனப்படும் பணிவுடமை என்கிற பண்பு எல்லோருக்குமே நல்லது. ஏற்கனவே செல்வச் செழிப்புடன் இருப்பவர் களுக்கு பணிவுடமை என்கிற பண்பு மேலும் ஒரு செல்வமாகும். இந்த குறளுக்கு முழுக்க பொருத்த மானவர் ரஜினிகாந்த்.

Advertisment

r

ரஜினியை அவரது வீட்டில் பலமுறை சந்தித்து பேசியிருக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட் டில் தற்செயலாக அவரைச் சந்தித் தால்... பரபரப்பாக எழுந்து அவரே நாற்காலியை தூக்கி வந்து போட்டு... என்னை அமரச் சொல்வார். ரஜினி யின் அந்த வேகம்.... அதாவது... அவர் வேக மாக நடக்கிற பாணி எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

சங்ககாலத்தில் வரும் ’ஒன்று மொழிக்கோசர்’ ஒருமுறை சொன்னதிலிருந்து பின்வாக்கமாட்டார். "பாட்சா' படத்தில் ரஜினி பேசி... புகழ்பெற்ற வசனமான ‘நான் ஒருதடவ சொன்னா... நூறு தடவ சொன்ன மாதிரி’ என்கிற டயலாக்கை கேட்கிற போதெல்லாம் எனக்கு ஒன்றுமொழிக் கோசர் ஞாபகம்தான் வரும்.

Advertisment

சத்யா மூவிஸ் தயாரித்த "ராணுவ வீரன்' படம்தான் நான் ரஜினிக்காக பாடல்கள் எழுதிய முதல் படம். இதில் எல்லாப் பாடல்களையும் நான் எழுத்யிருந்தேன். சத்யா மூவிஸ் தயாரித்த "தங்க மகன்' படத்தில் நான் எழுதிய ஒரு டூயட் பாடல் மிகுந்த வெற்றியைப் பெற்றது. "மாங்கனிகள் தொட்டி லில் தூங்குவதாக’ காதலனும், ‘மன்னவர் பசியாறுவதற்ககத்தான் அவை' என அவளும் சொல்வதாக உருவகப் படுத்தி எழுதிய வரிகள் இன்றளவும் வெட் கப்பட்டுக்கொண்டே ரசிக்கப்படும் வரிகளாக இருக்கிறது.

பல்லவி:

ராத்திரியில் பூத்திருக்கும் / தாமரை தான் பெண்ணோ / ராஜசுகம் தேடி வர / தூது விடும் கண்ணோ / சேலைச் சோலையே / பருவ சுகம் தேடும் மாலையே / பகலும் உறங்கிடும்

சரணம்-1:

வீணையெனும் மேனியிலே / தந்தியினை மீட்டும் / கை விரலில் ஒரு வேகம் / கண்ணசைவில் ஒரு பாவம் / வானுலகே பூமியிலே / வந்தது போல் காட்டும் / ஜீவ நதி நெஞ்சினிலே / ஆடும் ஓடும் மோதும் / புதிய அனுபவம்

சரணம்-2:

மாங்கனிகள் தொட்டிலிலே / தூங்குதடி அங்கே / மன்னவனின் பசியாற / மாலையிலே பரிமாற / வாழையிலை நீர் தெளித்து / போடடி என் கண்ணே / நாதசுரம் ஊதும் வரை / நெஞ்சம் இன்னும் கொஞ்சம் / பொறுமை அவசியம்

r

ஜினி நடித்த "கைகொடுக்கும் கை' படத்திற்காக... பார்வையற்ற மனைவியை தாயுமானவனாக இருந்து தாங்குவதை பற்றிப் பாடலில் எழுதியிருந்தேன்.

பல்லவி:

தாழம்பூவே வாசம் வீசு / தாயின் தாயே கொஞ்சிப் பேசு / வீடேதும் இல்ல / வாசலும் இல்ல / அன்புக்கு பஞ்சம் இல்ல / தாலேலோ தாலேலோ

சரணம்-1:

நடந்தா / காய்ஞ்ச நிலம் செழிக்கும் / சிரிச்சா / கோயில் மணி அடிக்கும் / கண்ட கண்ணுபடும் / பேசும் போது தாய பார்த்தேன் / தோளில் தூங்க பிள்ளை ஆனேன் / நெஞ் சத்திலே……ஏ….ஏ….ஏ….ஏ…. ஏ….ஏ….ஏ… / நெஞ்சத் திலே ஊஞ்சல் கட்டி / ஆரிரரோ பாடவோ

சரணம்-2:

இனி நான் / கோடி முறை பொறப்பேன் / உன்னை நான் / பார்க்க விழி திறப்பேன் / இது சத்தியமே / நீரும் போனா மேகம் ஏது / நீயும் போனா நானும் ஏது / என் உயிரே….ஏ….ஏ…..ஏ ஏ….ஏ…..ஏ…… / என் உயிரே நீ இருக்க / உன்னுயிரும் போகுமா

தங்கைக்கு தாயாகவும், தந்தையாகவும், தோழியாகவும் மாறிப்போன அண்ணன் பாடும் பாடலாக "நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு ஒரு பாடலை எழுதினேன்.

பல்லவி:

வெண் மேகம் விண்ணில் நின்று

கண்ணே இன்று பன்னீர் தூவும்

செவ்வானம் மண்ணில் வந்து

மஞ்சள் நீராட்டும்..

விடிகாலை வெள்ளி மீனே..

என் வாழ்வே உன்னால் தானே..

கண்ணே நான் அண்ணன் அல்ல

உன்னை ஈன்ற அன்னை நானே

கண்ணீரில் முத்து தொங்கல்

கட்டித் தந்தேனே...

சரணம்-1:

ஏழேழு ஜென்மம் இந்த / அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும் / எந்நாளும் எந்தன் பக்கம் / தாயே நீ வேண்டும் / உன் கண்ணில் கண்ணீர் வந்தால் / எந்தன் கண்ணில் ரத்தம் பாயும் / உன் ஆவி எந்தன் ஆவி / ரெண்டும் ஒன்றாகும் / உன் கண்கள் இல்லாமல் / என் கண்கள் பார்க்குமோ / உன் கால்கள் இல்லாமல் / என் கால்கள் போகுமோ / என் வானம் விடிவதும் பகல் முடிவதும் / உந்தன் பார்வையால்....

சரணம்-2:

மன்னாதி மன்னன் எல்லாம் / உன்னை வந்து பெண் பார்க்க / மையேந்தும் கண்ணே உந்தன் / கண்ணோ மண் பார்க்க / கண்ணோரம் வெட்கம் வந்து / நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட / காலாலே வண்ணக்கோலம் / மண்ணில் நீ போட / செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே / அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே / சொன்னாலும் இனிக்குது / நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே...

இந்தப் பாடலின் பல்லவியில் "முத்துத் தொங்கல்' என்கிற வார்த்தையை பயன்படுத்தி யிருந்தேன். பெண்கள் காதில் போடும் தோடுடுடன் இன்னொரு பகுதியாக அணியும் ஜிமிக்கியை ‘தொங்கட்டான்’ என்று அழைப் பார்கள். ஆனால் ‘தொங்கல்’ என்ற வார்த் தையை பயன்படுத்தியதால் இளையராஜா விளக்கம் கேட்டார்.

பூ மாலைக்கு, முத்துமாலை உட்பட மாலைகளுக்கு "அலங்கல்'’"தொங்கல்' என்கிற பெயர்கள் இலக்கியத்தில் உண்டு. நீங்க போட்ட மெட்டுக்கு இந்த வார்த்தைதான் மீட்டருக்குள் அடங்குகிற மாதிரி இருந்துச்சு. அதனால் இந்த வார்த்தையை பயன்படுத்தி ஆனந்தக் கண்ணீ ரால்... முத்துமுத்தாக சொட்டும் கண்ணீர் துளிக ளாலேயே மாலை கட்டித்தந்தகாக அன்பின் மிகுதியில் சொல்கிறான்’ என விளக்கம் சொன்னேன்.

rr

"மிஸ்டர் பாரத்' படத்தில் "எந்தன் உயிரின் நிழலே நிழலே கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே'’ என்கிற பாடலையும், "ஊர்க் காவலன்'’ படத்தில் "ஆத்துக்குள்ளே தீப்பிடிச்சா யாருவந்து தீ அணைப்பா'‘"மல்லிகப்பூவுக்கு கல்யாணம்' பாடலையும் எழுதினேன். "பணக்காரன்' படத்திற்கு "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது' என்கிற பாடலை எழுதினேன்.

"சிவா'’படத்திலும் சில பாடல்களை எழுதி னேன். "தங்கமகன்' படப்பாடலில் நான் கையாண்ட ஒரு உதாரணத்தை "சிவா' படத்தின் ஒரு பாடலிலும் கையாண்டேன். அந்தப் பாடல்...

பல்லவி:

இரு விழியின் வழியே நீயா வந்து போனது / இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது / இரு பார்வைகள் பரிமாறிடும் / மன ஆசைகள் அணை மீறிடும் / அணை மீறும்போது காவல் ஏது

சரணம்-1:

தொட்டில் இடும் இரு தேமாங்கனி / என் தோளில் ஆட வேண்டுமே / கட்டில் இடும் உன் காமன் கிளி / மலர் மாலை சூட வேண்டுமே / கொஞ்சம் பொறு / கொஞ்சம் பொறு / தேதி ஒன்று பார்க்கிறேன் / கொஞ்சும் கிளி மஞ்சம் இடும் / தேதி சொல்லப் போகிறேன் / கார் கால மேகம் வரும் / கல்யாணராகம் தரும் / பாடட்டும் நாதஸ்வரம் / பார்க்கட்டும் நாளும் சுகம் / விடிகாலையும் இளமாலையும் / இடை வேளையின்றி இன்ப தரிசனம்

சரணம்-2:

உன் மேனியும் நிலைக்கண்ணாடியும் / ரசம் பூச என்ன காரணம் / ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம் / இதை கேட்பதென்ன நாடகம் / எங்கே எங்கே / ஒரே தரம் / என்னை உன்னில் பார்க்கிறேன் / இதோ இதோ ஒரே சுகம் / நானும் இன்று பார்க்கிறேன் / தென்பாண்டி முத்துக்களா / நீ சிந்தும் முத்தங்களா / நோகாமல் கொஞ்சம் கொடு / உன் மார்பில் மஞ்சம் இடு / இரு தோள்களில் ஒரு வானவில் அது பூமி தேடி வந்த அதிசயம்

"சிவா' படத்திற்காக எழுதிய இன்னொரு டூயட்.

அடி வான்மதி என் பார்வதி / காதலி கண் பாரடி / தேடி வந்த தேவதாசை காண ஓடிவா /அடி பார்வதி என் பார்வதி / பாரு பாரு என்றேன் / பார்த்தால் ஆகாதா / பாடும் பாடல் அங்கே கேட்காதா

இப்படியாக ரஜினி படத்திற்கு இன்னும் பல பாடல்களை எழுதியிருக்கிறேன். இன்னும் பல ஹீரோக்களின் படங்களுக்கும் எழுதியிருக் கிறேன். அந்தப் பாடல்களைப்பற்றி அவ்வப் போது எழுதுகிறேன்.

அக்டோபர் 06-ஆம் தேதி 86-ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். எனது மாணவ பருவத்தில் 14 வயதில் பெரியார் மீது கொண்ட ஈர்ப்பால் கருப்புச் சட்டை அணிந்து என் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தேன். பகுத்தறிவுப் பகலவன் த்ந்தை பெரியாரின் தொண்டனாக, மாணவர் திமுகவைத் தொடங்கி, பேரறிஞர் அண்ணாவின் தொண் டனாக... கலைஞரை அழைத்துவந்து திமுக கூட்டம் போட்ட கட்சி நிர்வாகியாக, புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் தொண்ட னாக, ஜெயலலிதா அம்மா அவர்களின் மதிப் பிற்குரிய அரசியல்வாதியாக, அ.தி.மு.க. பேச்சாளனாக, அதிமுகவின் அவைத்தலைவராக, அரசவை கவிஞராக, தமிழீழ அரசியல் நிலவரங்களை அறிந்தவனாக, விடுதலைப்புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனின் அண்ணனாக... இப்படி 65 ஆண்டுகள்... பல்வேறு அரசியல் தளங்களில் பெற்ற அனுபவங்களை வரும் இதழிலிருந்து.....

(சொல்கிறேன்)

படம் உதவி: ஞானம்