அரசியல் கடுமையும் பாடலில் புதுமையும்!
"நினைத்ததை முடிப்பவன்' படத்தில் தங்கையின் திருமணத்தை எப்படியெல்லாம் நடத்த வேண்டும்... என்கிற அண்ணனின் எதிர் பார்ப்பை வைத்து "பூமழை தூவி' பாடலை எழுதியதுபோல்...
கொள்ளையன் சாயல்கொண்ட நல்லவன், சந்தர்ப்ப சூழலால்... கொள்ளையடிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவதையும், ஆனால் நல்லவனை கொள்ளையனாக நினைத்து "நீ விரைவில் சிக்குவாய்' என்பதாக ரகசிய போலீஸ் பெண் அதிகாரி பாடுவதாகவும், அந்த அதிகாரி சொல்லும் குற்றச்சாட்டுகளின் அர்த்தத்தையே... கொள்ளையனின் காதலி மாற்றிப் பாடுவதாகவும் ஒரு அருமையான போட்டிப் பாடல் எழுதினேன்.
""கொள்ளையிட்டவன் நீதான் / கொட்டிவைத்தவன் நீதான்/ கன்னமிட்டவன் நீதான் / இல்லையென்று உனது தாய்மேல் ஆணையிட்டுச் சொல் / நீ ஆணையிட்டுச் சொல்''
-என போலீஸ் அதிகாரியாக வரும் மஞ்சுளா பாடுவார்.
""கொள்ளையிட்டவன் நீதான்... என் உள்ளத்தை / கொட்டிவைத்தவன் நீதான்.... நல் இன்பத்தை / கன்னமிட்டவன் நீதான்.. என் கன்னத்தில்/ கண்டுகொண்டவள் நான் தான்... உன் எண்ணத்தை''
-என கொள்ளையனின் காதலியாக வரும் லதா பாடுவார். லதா பார்வையில் கொள்ளையன் நியாயப்படுத்தப்படவில்லை. அங்கே நிற்பவன் கொள்ளையனின் சாயல் கொண்ட நல்லவன் என்பதால்... லதா அப்படிப் பாடுவார். தொடர்ந்து மூன்று சரணங்களும் இப்படி போட்டியாகவே அமைத்திருந்தேன். முதல் சரணத்தில்...
""கண்ணில் மாயமும் சொல்லில் ஜாலமும் / காட்டும் பாவனை என்ன?/ கள்வன் என்பதை கண்கள் சொன்னபின் / போடும் வேஷமும் என்ன?'' என மஞ்சுளா பாட...
""பார்வை கொண்டதோர் மாற்றம் / பாலும் கள்ளென காட்டும்/ இயேசுதன்னையோ கள்வன் என்றுதான்/ சொல்லிவைத்தனர் அன்று/ ஏற்றிவைத்ததோர் சிலுவையல்லவோ / உண்மை சொல்லுவது இன்று''
-என லதா பாட.. இரண்டாவது சரணத்தில்...
""உண்மை என்பது என்றும் ஊமையாய் / வாழ்ந்திருப்பதும் இல்லை/ ஊழல் மன்னரை சட்டம் என்றுமே / விட்டு வைத்ததும் இல்லை''
""உண்மை என்பது இங்கே / ஊழல் என்பது அங்கே / குற்றவாளியே இன்று நாட்டிலே / சட்டம் செய்திடும்போது/ சட்டம் என்பது குற்றவாளியை /கண்டுகொள்வது ஏது?''
-என அரசியல் சூட்டை கிளப்பினேன். மூன்றாவது சரணத்தில்...
""கைது செய்யவும் காவல் வைக்கவும்
இன்று வந்தது நேரம்
என்று எண்ணியே வந்தவர் கதை
என்ன ஆனதோ பாவம்
நாளை யாவையும் மாறும்
நல்லதோர் பதில் கூறும்
அந்த நாடகம் இந்த மேடையில்
ஆடவந்தது போதும்
எந்த நாளிலும் எங்கள் மன்னவன்
கொள்கையல்லவோ வாழும்''
-என எம்.ஜி.ஆர். என்ற சக்தி என்றும் வாழும் என்பதையும் சொன்னேன்.
பாடல் எழுதி முடித்ததும் தலைவரிடம் காட்டினேன். அரசியல் கடுமையாக இருந்தது. முழுக்க படித்தவர்... எனது மற்ற பாடல்களுக்குச் சொல்வதுபோல் எதையும் குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டவில்லை. ஆனால்... ஆயிரம் அர்த்தங் களுடன் ஒரு சிரிப்பு சிரித்தார். தலைவனின் சிரிப்பு... எனக்கு திருப்தியாக இருந்தது.
இரண்டு அர்த்தம் வருவதுபோல் வார்த்தைகளை, வரிகளை பிரயோகிப்பது சிலேடை எனப்படும். இது செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். செம்மொழிச் சிலேடை என்பது எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே இருபொருள் தரக்கூடியது. முதலில் ஒரு பொருளும், பிரித்து எழுதும் போது இன்னொரு பொருளும் தருவது பிரிமொழிச் சிலேடையாகும்.
"நேற்று இன்று நாளை'’படத்திற்கு "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை' என்கிற பாடல் எழுதியதையும், அதன் சுவாரஸ்யங்களையும் ஏற்கனவே சொன்னேன். அதே படத்தில் "பாடும் போது நான்' எனத் தொடங்கும் பாடலையும் எழுதினேன். அதில் அண்ணன் எம்.ஜி.ஆரின் குணாதிசயங்களை பாட்டில் வைத்ததுடன்... செம்மொழிச் சிலேடையாக... கதாநாயகன், தன்னை காற்றாக உருவகப்படுத்திக்கொள்வதாக எழுதி னேன். காற்று என்னென்ன செய்யுமோ... அதையே கதாநாயகனும் செய்வதாக அந்தப் பாடலை அமைத்தேன்.
காற்று வரும்போது கீற்று பலவிதமாக ஆடுமே... அதைத்தான்
""பாடும்போது நான் தென்றல் காற்று/ பருவ மங்கையோ தென்னங் கீற்று / நான் வரும்போது ஆயிரம் ஆடல் / ஆட வந்ததென்ன/ நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?''
-என பல்லவியில் வைத்தேன். சரணத்தில்... கொடியை வளைத்து களிப்புறும், ஏதோ கொடியை முறித்துப் போடுவதுபோல இன்ப நாடகம் போடுவதை...
""மெல்லிய பூங்கொடி வளைத்து / மலர் மேனியை கொஞ்சம் அணைத்து / இதழில் தேனைக் குடித்து / ஒரு இன்ப நாடகம் நடித்து /எங்கும் பாடும் தென்றல் காற்றும் / நானும் ஒன்றுதானே / இன்ப நாளும் இன்றுதானே''
-என எழுதினேன். இரண்டாவது சரணத்தில் எல்லைகள் அற்ற... எல்லோருக்கும் பொதுவான காற்றாக நாயகனான தலைவரை உருவகப்படுத்தி...
""எல்லைகள் இல்லா உலகம் / என் இதயமும் அதுபோல் நிலவும் / புதுமை உலகம் மலரும் / நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் / யாரும் வாழ பாடும் காற்றும் / நானும் ஒன்றுதானே... / இன்ப நாளும் இன்று தானே'' -என எழுதினேன்.
திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து அண்ணன் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும், எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். அ.தி.மு.க.வை தலைவர் தொடங்கியபிறகு... இன்னும் தாக்குதல் அதிகமானது. மேடைகளில் எம்.ஜி.ஆரை மிகக் கடுமையாக பேசுவார்கள். "எம்.ஜி.ஆர். தமிழனல்ல. மலையாளி. அதுவும் வெளிநாட்டுக்காரர்'’ என்பதுதான் மிக முக்கிய பிரச்சாரமாக இருக்கும்.
நான் தினமும் சத்யா ஸ்டுடியோவில் தலைவரை சந்திப் பேன். அங்கிருந்து தலைவரின் தி.நகர். அலு வலகத்திற்கு வந்து அங்கும் பேசிக்கொண்டிருப்போம். பல நாட்களில் நள்ளிரவு தாண்டிவிடும் நான் கிளம்பும் போது.
""நான் போய்க்கிறேண்ணே'' எனச் சொன்னாலும் விடமாட் டார். தனது காரில் என்னை எனது வீட்டுக்கு பத்திரமாக அனுப்பிவைப்பார். நான் பத்திரமாக வீடு சேர்ந்துவிட்டேனா என்பதையும் என்னிடம் விசாரித்தால்தான் தலைவருக்கு திருப்தி வரும். தன்னால் தன்னைச் சார்ந்தவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
நாங்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் மிக முக்கியமானதாக ஏழை மக்கள்பற்றி அதிகம் பேசுவார்.
‘தமிழக மக்கள்பற்றி அதிகம் சிந்திக்கிறவரை... குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழ் மண்ணில் வளர்ந்தவரை... தன் முதல்மொழியாக தமிழ் கற்றவரை... இப்படி பேசுகிறார்களே...’ என்கிற கோபம் எனக்கு உண்டு. மேடைகளில் நான் அ.தி.மு.க. பேச்சாளனாக பேசும்போது... தி.மு.க.வினரை கடுமையாக விமர்சித்ததுண்டு.
தமிழக மக்களிடமிருந்து ‘மலையாளி’ என்று சொல்லி தலைவரை பிரித்துவிடமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்... தலைவருக்கும் தெரியும். இருப்பினும்... எதிர் தரப்பிற்கு பாட்டாலேயே பதில் சொல்ல நல்ல வாய்ப்பு அமைந்தது எனக்கு. தமிழக மக்கள்மீது தலைவர் வைத்திருந்த பாசத்தை உடனிருந்து பல்லாண்டுகளாக பார்த்த ஆர்.எம்.வீரப்பனுக்கும் இந்த "மலையாளி' விமர்சனம் வருத்தத்தைத் தந்தது.
இதுபற்றி நானும், ஆர்.எம்.வீ.யும் பேசிக்கொண்டிருந்த போது... ’எங்கேயோ பிறக்கிற நதி, தான் போகும் வழியையெல்லாம் வளப்படுத்துவதுபோல தலைவர் வாழ்கிறார்’ என நினைத்ததும் ஒரு யோசனை வந்தது.
""காவிரியின் வரலாற்றைச் சொல்லுங்கள். அது எங்கே பிறக்கிறது... எந்தெந்த ஊர்கள் வழியாக தஞ்சையில் பாய்கிறது'' எனக் கேட்டேன். முழுவிபரமும் சொன்னார் ஆர்.எம்.வீ.
சாகாவரம் பெற்ற அந்தப் பாடல்... அ.தி.மு.க.வின் கொள்கைப் பாடலாகவும், தமிழ் மக்களை மிகவும் நேசித்த தலைவனைப் பிரதி பலிப்பதாகவும் அந்தப் பாடல் அமைந்ததைச்...
(சொல்கிறேன்)
படம் உதவி- ஞானம்